போர் வீரனுக்கு கடைசி நிமிடம் வரை கை கொடுக்கும் ஆயுதம், நம்பிக்கையோடு களத்தில் நிற்கும் மனவுறுதிதான். அப்படிபட்ட ஒரு வீரராகதான் இருக்கிறார் முதல்வர் இ.பி.எஸ் என்கிறார்கள் அவரை சந்தித்துவிடடு வரும் அதிமுக முன்னணி நிர்வாகிகள். தமிழகம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஊடகங்கள் பெரும்பான்மையானவை, தமிழகத்தில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டதோடு, 150 தொகுதிக்கு மேல் வருவார்களா, 200 தொகுதிகளை கைப்பற்றுவார்களா என்ற அடுத்தகட்ட விவாதத்திற்கு சென்றுவிட்டன.
அதைப்பார்த்து கிலி பிடித்திருக்கும் மூத்த அமைச்சர்கள் பலர் , தொகுதிகளில் பணத்தை வாரி இறைத்தும் வெற்றி நிச்சயமா? என்பதை உறுதி செய்ய முடியாமல் கடந்த பல நாட்களாக தூக்கம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நிமிடத்தையும் பதைபதைப்போடு கடத்திக் கொண்டிருக்கும் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.எ.க்கள் மத்தியில், துளியும் பயமின்றி, இந்த நிமிடம் வரை மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
அதுமட்மின்றி தன்னை வந்து சந்திக்கும் பிரமுகர்கள், சோர்வாக காணப்பட்டால் பயப்படாதீர்கள்,தைரியமாக இருங்கள். நாம்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். சிறிதளவும் சந்தேகம் கொள்ளாதீர்கள். திமுக ஒருபோதும் ஆட்சி அமைக்காது என பூஸ்ட் வார்த்தைகளை கூறி உற்சாகப்படுத்தி அனுப்பி வைக்கிறாராம். அந்தளவுக்கு, பல்வேறு தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள், அவரை மிக அடர்த்தியான நம்பிக்கையோடு மே2 ஆம் தேதி முடிவை எதிர்நோக்க வைத்துள்ளதாம்.
அவருடன் நிழலாக இருக்கும், சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால், நிழல் முதலமைச்சராக இருக்கும் இளங்கோவனும், நீங்கள்தான் மீண்டும் முதல் அமைச்சர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பதவியேற்பு விழாவை இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமான முறையில் நடத்த மனதில் ஸ்கெட்ச் எல்லாம் போட்டு வைத்திருக்கிறேன்.
கடந்த 2016 ல் சேலம் மாவட்டத்தில் இழந்த ஒரு தொகுதியையும் சேர்த்து, இந்த தேர்தலில் 11 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளுவோம். கடந்த சில நாட்களாக என்னை வந்து சந்திக்கும் உளவுத்துறை உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள் மீணடும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் என்று. அதனால், பதவி ஏற்பு விழாவை எங்கு வைப்பது என்று முடிவெடுத்துவிட்டீர்களா? என தனது மனதில் தேக்கி வைத்திருந்த ஆசையெல்லாம் கொட்டினாராம், இளங்கோவன்.
அவரின் பேச்சை கேட்டு உற்சாகமான முதல்வர் இ.பி.எஸ். நானும் நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். புதிய வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் பெரும்பான்மையானோர் இரட்டை இலைக்குதான் வாக்களிததுள்ளார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. அதுபோலவே, அதிமுக வோட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் திமுக நிர்வாகிகளின் வீட்டில் உள்ளவர்களுக்கு அதிமுக.வுக்கு வாக்களிக்கச் சொல்லி கொடுத்த பணத்தை அவர்களது குடும்பத்து பெண்கள் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் வாங்கியிருப்பதாகதான் தகவல் கிடைத்துள்ளது.
எடப்பாடி நல்லாதானே ஆட்சி செய்யறார் என்று கூடவே சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதுபோலவே, கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பவர்கள், விவசாய கடன் தள்ளுபடி பெற்றவர்கள் என அதிமுக அரசால் பொருளாதார ரிதியாக பயனடைந்தவர்கள் எல்லோரும் இரட்டை இலைக்கு தான் வாக்களிததிருக்கிறார்கள் அதைவிட சிறப்பாக, நம்மை அழிக்க வேண்டும் என்பதற்காக களத்தில் இறக்கி விடப்பட்ட அமமுக வேட்பாளர்கள் 95 சதவிகிதம் பேர் பொருளாதார வசதி குறைந்தவர்கள். அவர்களை எல்லாம் நமது ஆட்கள் சரிகட்டி விட்டார்கள்.
அதனால், அமமுக ஓட்டும் நமக்குதான் கிடைத்திருக்கிறது. எனவே, தேர்தல் முடிவுகள் பற்றி எனக்கு துளியும் கவலை கிடையாது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இருக்கிறது. அது அதிமுக அரசை அகற்றிவிடும் என திமுக தலைவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் தெரியும், திமுக.வுக்கு இருக்கிற வன்முறை கட்சி என்ற சிந்தனையில் இருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு விலகாத மக்கள் அதிமுக.வுக்கு சாதகமாகதான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதும்.
அதனால், திமுக.வுக்கு அபார வெற்றி கிடைக்கும் என்பது எல்லாம் பகல் கனவு. சுகாதார அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வந்தபோதுகூட இதுபற்றிதான் பேசினோம். இழுபறி நிலை வந்தால் கூட்டணிக் கட்சி ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்கிற நிலைதான் வரும். ஒருபோதும் திமுக ஆட்சி அமைக்கிற சூழல் வராது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதை டெல்லி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்த முறை ஆட்சி பொறுப்பை ஏற்றால், எனது தலைமைக்கு எந்த நெருக்கடியும் இருக்காது அதனால், தேர்தலின்போது யார்யாரெல்லாம் அதிமுக.வுக்கு விசுவாசமாக உழைத்தார்களோ, அவர்கள் எல்லோருக்கும் நல்ல பதவிகளை தர வேண்டும்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களை, வாரியத் தலைவர்களாக உட்கார வைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆட்சியை வலுப்படுத்தியவுடன் கட்சியையும் சீரமைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக சரியான பதவி கிடைக்காமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுவிட்டனர். எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் மாதிரி கட்சி கட்டமைப்பு அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.
மே 2 ஆம் தேதிக்குப் பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் செயல்பட்டதைவிட, பல மடங்கு வேகமாகவும், உத்வேகமாகவும் செயலாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறதே தவிர, அதிமுக ஆட்சிக்கு வருமா வராதா என்ற பயம் எனக்கு துளியும் இல்லை. தென் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள்தான் பயத்தில் இருக்கிறாகள் என்றால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமோ என்று பயப்படுவதைப் பற்றிதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று விரிவாக பேசினாராம் இ.பி.எஸ்..
இ.பி.எஸ்., ஸிடம் இருந்து நம்பிக்கையான வார்த்தைகள் வெளியானதையடுத்து, ஏற்கெனவே அவருக்கு அறிமுகமான சேலம் நகரையொட்டியுள்ள பிரபல ஜோசியரும் சாமியாருமான ஒருவரை இளங்கோவன் சந்தித்துப் பேசினாராம். அப்போது முதல்வர், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு முதல்வராக எப்போது பதவியேற்றால், 5 ஆண்டுகளும் ஆட்சிக்கு எந்த தொந்தரவும் வராது என்று யோசிக்கிறார். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தேய்பிறை தான் வருகிறது. அதனால், அமாவாசை நாள் நல்ல நாளா அல்லது வளர்பிறையில் பதவியேற்கலாமா. நட்சத்திரங்களின் யோக பலனை வைத்து நல்ல நாளாக பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டதாக சேலம் இளங்கோவனுக்கு ஆதரவான அதிமுக.முன்னணி நிர்வாகிகளிடேயே ஒரு கலந்துரையாடல் சூடாக நடைபெற்று வருகிறதாம்.