Sat. Nov 23rd, 2024

மேற்கு வங்க மாநிலத்தில் 5 ஆம் கட்டத் தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். நடியா மாவட்டம் சந்திப்பூரில் நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றால், மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியான வன்முறைகளுக்கும், தேர்தல் தொடர்பான வன்முறைகளுக்கும் முடிவு கட்டப்படும் என்று தெரிவித்தார். கூச் பெஹாரில் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த மம்தா பானர்ஜி, ராஜ்வன்ஷி சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த் பர்மன் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை.

பிரித்தாளும் பண்பாடு ஒருபோதும் மேற்கு வங்க மாநிலத்தின் பண்பாடாக இருந்ததில்லை என்பதை மம்தா புரிந்து கொள்ள வேண்டும் என்று அமித்ஷா கூறினார். இன்று மட்டும் 5, 6 பிரசாரக் கூட்டங்களில் அமித்ஷா, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.