Sat. Nov 23rd, 2024

தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள், 50 சீட்டுக்கும் குறைவான இடங்களையே பெறும் என ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அண்மையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் மேற்கு வங்கம் மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மேற்கு வங்கத்தில் 200க்கு மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளாரே என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜி தீவிரமாக போராடி வருவதாக தெரிவித்தார். மம்தா போராடினால் பதற்றம் அடைந்துவிட்டார், இல்லையே விட்டுக்கொடுத்துவிட்டார் என விமர்சிக்கப்படுவதாகவும் கூறிய பிரசாந்த், தனது கணிப்பின்படி பாஜக அங்கு 100 தொகுதிகளை கூட கைப்பற்றாது என கூறியுள்ளார். அப்படி அதிக இடங்களை பெற்றுவிட்டால், தான் தேர்தல் உத்தி வகுப்பாளர் என்ற இந்த தொழிலையே விட்டுவிடுவதாக பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து நடந்த உரையாடலில், திமுகவுக்காக கிஷோர் பணி செய்த தமிழக தேர்தல் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கிண்டலாக தமிழ்நாடு முக்கியமா, மேற்கு வங்காளம் முக்கியமா? தமிழகத்தில் தங்கள் கணிப்பு என்ன எனவும் கேட்கப்பட்டது. இதற்கு சிரித்தபடியே பதில் அளித்த கிஷோர், மேற்குவங்கத்தில் தன்னை சினமூட்டும் வகையிலும், கலகமூட்டும் நோக்கிலும் பேசப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆனால் தனக்கு இரு மாநிலங்களுமே முக்கியம் என்று கூறிய அவர், தமிழகத்தில் தேர்தலுக்கு பின் தனக்கு கிடைத்த தகவல் படி, திமுக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் மொத்தமாக 50 சீட்டுகளை கூட பெறாது என தெரிவித்தார்.