Sun. Nov 24th, 2024

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தையொட்டி அதிமுக.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து, 234 தொகுதிகளில் அதிக இடங்களுக்குச் சென்று வந்தவர் நடிகை விந்தியாவாகதான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்து நடிகை விந்தியாவின் பேச்சைதான் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைதட்டி விசிலடித்து உற்சாகமானார்கள். அவர்களைப் போல, சாதாரண பொதுமக்களும் விந்தியாவின் பிரசாரத்தை ரசித்து கேட்டிருக்கிறார்கள்.

நடிகை விந்தியாவை பிரசாரத்திற்கு அழைப்பதற்கே, அதிமுக தலைமை காலதாமதம் செய்து இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு சுற்றுப் பிரசாரத்தை முடித்த பிறகுதான், நடிகை விந்தியா, பிரசாரத்திற்கே அழைக்கப்பட்டார். திமுக.வையும், மு.க.ஸ்டாலினையும் தனது டார்கெட்டாக வைத்துக் கொண்டு, பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் வறுத்தெடுத்திருக்கிறார் நடிகை விந்தியா. ஆனால், ஒரு வார்த்தைக் கூட டிடிவி.தினகரனைப் பற்றியோ, அமமுக.வைப் பற்றியோ வாயே திறக்கவில்லையாம் நடிகை விந்தியா..

டிடிவி.தினகரனைப் பற்றி விந்தியா என்ன பேசுவார் என்பதைக் கேட்கவே, ஆர்வமாக வந்தார்களாம் திமுக தொண்டர்கள். ஆனால், 30 நிமிடம், 40 நிமிடம் என மூச்சுப் பிடித்து பேசிய நடிகை விந்தியா, ஒவ்வொரு இடத்திலும் திமுக.வையும், மு.க.ஸ்டாலினையும்தான் முழுமையாக வசை பாடினாராம்.

சின்னம்மா சசிகலா மீதான பாசத்தின் காரணமாக நடிகை விந்தியா, டிடிவி தினகரனைப் பற்றி பேசவில்லையா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர் திமுக நிர்வாகிகள். அவர்களின் கேள்விகளை முன்வைத்து நடிகை விந்தியாவோடு பயணம் செய்த அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை. கிருஷ்ணகிரி முதல் நீலகிரி மாவட்டம் வரை நடிகை விந்தியாவின் பிரசார பயணத் திட்டத்தை இறுதி செய்த, முதல்வர் இ.பி.எஸ்.ஸின் நம்பிக்கைக்குரிய தளபதி, அமமுக வேட்பாளர்களை எல்லாம் பணத்தை கொடுத்து சரி கட்டிவிட்டோம். அதனால், அவர்களை உசுப்பேற்றும் விதமாக டிடிவி தினகரனைப் பற்றியோ, அமமுக.வைப் பற்றியோ விமர்சித்து பேச வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனைகளை பெரிதாக சொல்லுங்கள்.. திமுக.வை, மு.க.ஸ்டாலினை சீண்டி பிரசாரம் செய்தால் போதும் என்று கூறி வாய்ப்பூட்டு போட்டு விட்டார். அதனை ஏற்றுதான் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் அமமுக.வை, டிடிவி.தினகரனைப் பற்றி நடிகை விந்தியா எதுவும் பேசவில்லை.

இந்த இரண்டு மண்டலங்களைப் போலவே, மத்திய மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களிலும் இதுபோலவே அமமுக வேட்பாளர்களை விலைக்கு வாங்கியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, அந்த பகுதிகளிலும் அமமுக.வை, டிடிவி.தினகரனை விமர்ச்சித்து நடிகை விந்தியா பேசவில்லை. ஆனால், அவர் பேசிய அனைத்து இடங்களிலும் முந்தைய இடத்தில் பேசியதையே திரும்ப பேசாமல், புதிது, புதிதாக நிறைய தகவல்களை கூறியே பிரசாரம் செய்தார்.

அதற்காக, நிறைய படித்தார். வார, மாத இதழ்கள், நாளிதழ்கள், சமூக ஊடகங்களில் பரவிய அரசியல் கருத்துகள் என பிரசாரத்திற்காக தன்னை முழுமையாக தயார் படுத்திக் கொண்டார். அதுபோவே, அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தைக் கூட ரத்து செய்யாமல், நேர்த்தியாக பிரசாரத்தை முடித்தார், நடிகை விந்தியா.

நள்ளிரவில் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்ற பிறகு, காலையில் எழுந்தவுடன், அன்றைய நாளிதழ்களில் வந்த அரசியல் செய்திகள், குறிப்பாக திமுக மு.க.ஸ்டாலினின் பேச்சு உள்ளிட்டவற்றை படித்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குறிப்புகளை தயார் படுத்துவதற்கே பகல் நேரத்தை பயன்படுத்திக் கொண்டார்.

அதிமுக.வையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் புகழ வேண்டும் என்பதற்காக வார்த்தை ஜாலங்களை காட்டாமல், அம்மா காலத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட உதவிகள், வளர்ச்சித் திட்டங்களை நினைவுப்படுத்தி பிரசாரம் செய்தார். அதுபோலவே, எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு கால சாதனைகள், நலத்திட்டங்களை விரிவாக எடுத்து கூறி பிரசாரம் செய்தார்.

நடிகை என்ற முறையில் எந்த பந்தாவும் அதிமுக வேட்பாளர்களிடமும், கூட்டணி வேட்பாளர்களிடமும் காட்டாமல், தனது பிரசாரத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தினார்.

அவரது பிரசாரத்தை கேட்பதற்காக மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து பயணம் செய்வதே புதிய அனுபவமாகதான் இருந்தது. முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் பிரசாரம் எப்படி அதிமுக.வுக்கு வலிமை சேர்த்ததோ, அதுபோலவே நடிகை விந்தியாவின் பிரசாரமும் அதிமுக வெற்றிக்கு பெரிதும் உதவிக்கரமாக இருந்திருக்கிறது என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

ஒரே ஒரு குறைதான். அம்மா இருக்கும் போது, பிரசாரத்தின் போது எப்படி பேச வேண்டும் என்று நடிகை விந்தியாவுக்கு யாரும் பாடம் நடத்த மாட்டார்கள். இந்த தேர்தலில்தான் முதல்முறையாக என்ன பேச வேண்டும்.. என்ன பேசக் கூடாது என்று அவருக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். அதைப் பற்றி நடிகை விந்தியா கூட பெரிதாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. அவரைப் போலவே நீங்களும் (நல்லரசு) எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று மர்மப் புன்னகையோடு முடித்துக் கொண்டார் அதிமுக நிர்வாகி.

நீங்க எல்லாம் நல்லா வருவீங்க…