மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4 வது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, 5 வது கட்ட வாக்குப்பதிவு வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி சிலிகுரியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
வட வங்கம் மிகப்பெரிய மாலையாகும், இது அனைத்து விதமான மக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்றும், 4 வது கட்ட வாக்குப்பதிவின் போது கூச்பெஹர் நிகழ்வு குறித்து குறிப்பிட்டு பேசினார்.
அங்கு நடந்த வன்முறையின் போது துப்பாக்கிச் சூட்டியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், தோல்வியின் அச்சத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையைத் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டினார். மேற்கு வங்க மாநிலம் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற வேண்டும் என்பதே பாஜக.வின் முக்கிய நோக்கம் என்றும் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மாநில அரசு செயல்படும் என்றும் உறுதியளித்தார் பிரதமர்.
அரசு நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்வார்கள் என்றும் கூறினார்.
ஊழல் இல்லாத, சிறந்த நிர்வாகத்தை தரும் அரசாக இருக்கும் என்றும் தனிநபர் வருமானத்தை பெருக்கும் வகையிலும் பாஜக ஆட்சியில் திட்டங்கள் தீட்டப்படும் என்றும் கூறிய விரதமர், திரிணாமுல் காங்கிரஸின் அச்சுறுத்தலுக்கு, அரசியலிலும் ஜனநாயகத்திலும் எந்த இடமும் கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இரண்டு ஐந்தாண்டுகள் பதவியில் இருக்கும் மம்தா பானர்ஜி, மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது தொடர்பாக முறையான கணக்கு விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய பிரதமர், மத்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக கொரோனா காலத்தின் போது வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளிலும் ஆளும்கட்சி ஊழல் செய்தது மட்டுமின்றி இலவச அரிசி விநியோகத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தையும் குறைத்துவிட்டதாக சாடினார்.