சிறப்புச் செய்தியாளர் …
ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் அறிமுகமான தொழில் முனைவோரராக உள்ள நண்பரின் இல்லத்தில் ஒரு மங்களகரமான நிகழ்வு..தவிர்க்க முடியாததால் கலந்துகொண்டேன். அந்த நிகழ்வில் இரண்டு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஒருவர் நீதியரசர். மற்றொருவர், காவல் துறையின் உயர் அதிகாரி. இருவரையும் வரவேற்பது,வழியனுப்புவது, உபசரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த 5 பேர் குழுவில் நானும் ஒருவன்.
நட்பிற்காக ஏற்றுக்கொண்ட பணி. நிகழ்வுக்கும் உணவு நேரத்திற்கும் இடையேயான 30 நிமிடத்தில் தனியறையில் இரண்டு பிரமுகர்களும் கலந்துரையாடினார்கள். இருவருக்குமே என்னை தெரியாது. காவல்துறை உயரதிகாரியோடு ஓரிரு முறை தொலைபேசியில் பேசியிருந்தாலும், அங்கு அறிமுகப் படலம் எல்லாம் நடக்கவில்லை.
தொழில் முனைவோரின் உறவினர்கள் என்ற வேடம் எங்களுக்கு அடையாளமாக்கப்பட்டிருந்தது. தனிப்பட்ட முறையில் இருவரும் கலந்துரையாடியபோது, அதில் பெரியதாக நான் கவனத்தை செலுத்தவில்லை. ஆனால், அறையில் தொடர்ச்சியாக ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது, அந்த காவல்துறை உயரதிகாரி தெரிவித்த ஒரு கருத்து, என்னை அதிர்ச்சியடையவைத்தது.
மாவட்டங்களில் போலீஸ் எஸ்.பி.யாக உள்ள 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்தாங்கொள்ளிகள். கலவரம் போன்ற நிகழ்வுகளில் முதல்நபராக நிற்க பயப்படுகிறார்கள். ஐ.டி. போன்ற நிறுவனங்களில் பெரிய பதவிகளில் சொகுசாக வாழ்ந்தவர்கள், கௌரவத்திற்காக ஐபிஎஸ் படித்துவிட்டு போலீஸ் அதிகாரிகளாக வந்துவிட்டார்கள்.
தென்மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடைபெற்ற சாதி மோதலால், அங்கு பெரிய வன்முறை ஏற்பட்டது. அப்போது பக்கத்து மாவட்டத்தில் இருந்த ஒரு எஸ்.பி.யை அழைத்து இருந்தோம். அந்த எஸ்.பி., கலவரம் நடந்த ஊருக்குள்ளேயே வரவில்லை. தனது காரில் இருந்து இறங்காமலேயே ஊரைச் சுற்றி, சுற்றி வந்துக் கொண்டிருந்தார். தனக்கு கீழே உள்ள டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரைதான் ஊருக்குள் விரட்டிக் கொண்டிருந்தாரே தவிர, அந்த ஊரில் அமைதி திரும்பும் வரை எஸ்.பி., ஊருக்குள்ளேயே வரவில்லை..
வீரம்தான் இல்லை என்றாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதிலும் அவர்களுக்கு போதிய திறமையில்லை. ஆனால், காவல்துறைக்கு எதிராக வழக்கமாக வீசப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும், எஸ்.பி.யான புதிதிலேயே மாவட்ட எஸ்.பி.க்கள் பலர் மீது விழுந்திருக்கிறது.
இளம்தலைமுறை ஐபிஎஸ் அதிகாரிகளை நினைத்தால் பயமாக இருக்கிறது. நல்ல பொருளாதார பின்னணியில் இருந்து வந்திருப்பதால், நமது மக்களின் மனநிலைகளை எல்லாம் அவர்கள் எப்படி புரிந்துகொண்டு செயல்படுவார்களோ என்ற அச்சம் எழுகிறது….மாவட்ட எஸ்.பி.க்களின் செயல்பாடுகளில் டிஜிபி ஜெ.கே.திரியாதியும் அதிருப்தியோடுதான் இருக்கிறார் ……இப்படி நிறைய பேசிச் கொண்டிருந்தார்.
இதை அப்போதே எழுதலாம் என்றுதான் யோசித்தேன். ஆனால், உயரதிகாரி ஒருவர் கூறியதை, விசாரிக்காமலேயே அப்படியே பதிவு செய்வதற்கு தயக்கமாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு டிஜிபி அலுவலகத்தில் நீண்ட வருடங்களாக பணியாற்றி வரும் ஒரு அதிகாரியிடம், இதுபற்றி கூறி கருத்து கேட்டேன். சார், இதெல்லாம் மேலிடத்து சமாச்சாரம். இருந்தாலும் சொல்கிறேன். மாவட்ட எஸ்.பி.க்களில் பாதிக்கு மேல், துடிப்புடன் பணியாற்றுபவர்களாக இல்லை என்ற ஆதங்கம், டிஜிபி.க்கு கடந்த பல மாதங்களாகவே இருக்கிறது என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.
உயரதிகாரி, டிஜிபி அலுவலக அதிகாரி சொன்னவற்றில் உண்மை இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால், எனக்குள்ள அச்சம் என்னவென்றால், மே 2 ஆம்தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மோதல் மூண்டால், அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி., பயந்தாங்கொள்ளியாக இருந்தால், அங்குள்ள பொதுமக்களின் கதி என்னாகும் என்பதுதான் எனது அச்சமாக இருக்கிறது.
இந்த நேரத்தில்தான், முதன்முதலாக ஐபிஎஸ்., பயிற்சி முடித்து பணியில் சேர்ந்த இளம் அதிகாரியின் மிரட்டலான துணிச்சலை பார்த்தது வியந்த நிகழ்வு கண் முன் வந்து நிற்பதை தவிர்க்க முடியவில்லை.
1992 ஆம் ஆண்டு, சேலத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகிறார் அந்த இளம் அதிகாரி. அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தராசு ஆசிரியரிடம் அறிமுகமாகியிருந்ததால், சேலத்தில் காவல்துறை அதிகாரிகளை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆட்டையாம்பட்டி என்ற ஊரில் புதிதாக திருமணமான இளம்பெண்ணுக்கு கணவர் வீட்டில் இருந்து சித்ரவதை என்ற புகார், தராசு மக்கள் மன்ற நிர்வாகி மூலம் எனக்கு வந்தது.
எஸ்.பி.ஸை பார்க்கச் சென்றேன். அவர் அலுவலகத்தில் இல்லாததால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புதிதாக வந்திருக்கிறார் என்று தகவல் கிடைக்க அவரைச் சந்திக்க அவரது முகாம் அலுவலகத்திற்குச் சென்றேன். மாலை நேரம். ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் அமர்ந்து வெளியே புறப்பட தயாரானார். நான் சந்திக்கச் சென்ற அந்த புதிய அதிகாரி. சின்ன பையன் மாதிரி இருந்தார்.
என்ன விஷயம் என்றார். வரதட்சணை கொடுமை பற்றி சொன்னேன். அரைமணிநேரம் இருங்கள் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். தராசு என்ற சொல்லே, அப்போது நெருப்பு மாதிரி இருந்தது. பொறுமையிழந்து புறப்பட எத்தனித்தபோது, அவரது அலுவலகத்தில் இருந்த பாதுகாவலர், எனது பொறுமையின்மையைப் பார்த்து, சார், கோபம் வேண்டாம். ஏஎஸ்பி சார், மூன்று தியேட்டர் பக்கம் செல்கிறார்.அங்கு ரவுடிகள் கலாட்டா செய்தவதாக தகவல் வந்தது. அதனால்தான் அவசரமாக போகிறார் என்றார்.
மூன்று தியேட்டர் பகுதியைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். குகை, கிச்சிப்பாளையம் ஆகிய பகுதிகள் அந்த காலகட்டத்தில் சமூக விரோதிகளின் பிடியில்தான் இருந்தது.
ரவுடிகள் கலாட்டா செய்யராங்கன்னு சொல்றீங்க.. இவரு தனியா போறாரு..கூட ஒரு போலீஸ் கூட போகலையேன்னு அதிர்ச்சியோடு கேட்டேன்.
சார், யாரையும் கூட வர வேண்டாம்னு சொல்லிட்டார். ரைபிள் எடுத்துக்கிட்டு போறார். லத்தி இருக்கு..தனியா போறத நினைச்சா எங்களுக்கும் பயமா தான் இருக்கு.எஸ்.பி.க்கு எப்படி ரிப்போர்ட் அனுப்புறதுன்னே தெரியல என்றார் அந்த காவல் அதிகாரி.
45 நிமிடங்களுக்குப் பிறகு முகாம் அலுவலகத்திற்கு திரும்பினார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். அவர் அணிந்திருந்த உடை முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது. வந்த வேகத்திலேயே அலுவலகத்திற்குள் கூப்பிட்டு, விவரம் முழுவதையும் கேட்டார். மறுநாள் மாலைக்குள், அந்தப் பெண்ணுக்கு சித்ரவதை கொடுத்த கணவர், அவரது அப்பா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்.
நன்றி சொல்வதற்கு கூட அவரை சந்திக்கவில்லை. மறுநாள் காலையில் மூன்று தியேட்டர் பகுதியில் இருந்த நண்பர் ஒருவர், முன்தினம் நடந்த நிகழ்வை அதிர்ச்சியுடனேயே விவரித்தார். நடிகர் விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தின் அறிமுக காட்சியை ஒத்த சம்பவத்தை, 1992 ஆம் ஆண்டிலேயே அந்த அதிகாரி நடத்தி காட்டியிருக்கிறார்.
அன்றைக்குப் பார்த்த அந்த அதிகாரியின் பெயர், சைலேந்திர பாபு. அதன் பிறகு அவர் திண்டுக்கல்லில் எஸ்.பி. ஆக பணியாற்றியபோதும் சந்தித்து இருக்கிறேன். அந்த காலத்தில் வடநாட்டைச் சேர்ந்த அதிகாரி என்றே அவரை நினைத்திருந்தேன். தொடர்ந்து அவர் பணியாற்றிய காலங்களில் செய்த சாதனைகளைப் பற்றி எழுதலாம். ஆனால், அது அவரின் புராணமாக மாறிவிடும்.
எனது இளமைக்காலத்தில் பார்த்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மாறாகவா இன்றைக்கு புதிதாக ஐபிஎஸ் முடித்துவிட்டு வருகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் நீங்காமல், 20 ஆண்டுகளுக்கு மேலாக க்ரைம் பீட்டில் நீண்ட அனுபவம் கொண்ட பிரபல ஊடக நண்பரை தொடர்பு கொண்டு நேற்றுதான் பேசினேன்.
ஒரு சிலரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியாகதான் இருக்கிறது. இதைவிட கொடுமையாக நேரடியாக சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு வரும் இளைஞர்களிடம் வீரமும் இல்லை. துணிச்சலும் இல்லை. ஒட்டுமொத்த காவல்துறையையும் ஸ்கேன் செய்து பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார் அந்த நண்பர்.
இளம்கன்று பயமறியாது என்பார்கள். ஆனால், இன்றைக்கு ஐபிஎஸ் பயிற்சி முடித்து, மாவட்ட அளவில் எஸ்.பி.யாக இருப்பவர்கள், மனதளவில் தைரியம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றால், இவர்களை நம்பிதான் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும்? தொழில் முனைவோர் இல்லத்தில் தோன்றிய அச்சம், இந்த நிமிடம் வரை கூட நீங்கவில்லை.