Mon. Nov 25th, 2024

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக, விசுவாசமிக்க அனுக்கத் தொண்டராக நீண்ட வருடங்கள் இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம். அவரது தந்தையில் தொடங்கி பூங்குன்றன் வரை, ஜெயலலிதா மறைவு வரை அவருக்காகவே வாழ்ந்த குடும்பம்.

போயஸ் கார்டனுக்குள் சென்று வந்தாலே கோடீஸ்வரர்களான கதையும், ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் எம்.எல்.ஏ., ஆகிட முடியும். எம்.பி.யாகிட முடியும். அமைச்சராகிட முடியும் என்பதையெல்லாம் கதை கதையாக கேட்டிருக்கிறோம். ஆனால், அவரின் விசுவாசமிக்க தொண்டராக, உதவியாளராக வாழ்ந்த பூங்குன்றனம், அவரின் மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்தை காப்பாற்ற, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலான போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டு இருப்பதும், வருங்காலத்தை கடக்க, ஏதாவது ஒரு வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதும் எவ்வளவு கொடுமை.

போயஸ் கார்டனில் பூங்குன்றம் தலை தென்பட்டாலே எழுந்து நின்றவர்கள்தான் இன்றைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்கள் எல்லோரும். ஒவ்வொருவரின் ரகசியங்களும் அவருக்கு அத்துப்படி. அப்படிபட்ட நபர்தான், தனது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள முகநூல் எனது பொது வெளியில் கண்ணீரோடு தனது சோக வாழ்க்கையை, துயரத்தை பகிர்ந்துள்ளார். எவ்வளவு கொடுமையான விசயம் இது.

இன்று மாலை 3.26 மணிக்குப் பதிவிட்டிருக்கிறார் பூங்குன்றன். ஒரு அமைச்சரோ, ஒரு ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வோ அவரை தொடர்பு கொண்டு, ஆதரவாக பேசியதாக அவரது முகநூலில் பதிவு இல்லை. காலமெல்லாம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரையே சொல்லிக் கொண்டிருந்தவரை அரவணைக்க ஆளும்கட்சியான அதிமுக.வில் ஒருவர் கூட இல்லை. பல கோடி ரூபாய் செலவழித்து, திருமங்கலத்தில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் சிலை வைத்து கோயில் கட்டி குடமுழுக்கு விழா நடத்தியவரை தமிழகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர்களை, இழைத்துக் கொண்டிருப்பவர்களை அவரது ஆன்மா மன்னிக்குமா, என்ன?

https://www.facebook.com/ammabakthi/posts/518198826007648

செல்வி ஜெயலலிதா பின்பக்கம் தாடி வைத்துக் கொண்டு நிற்பவர் பூங்குன்றன் சங்கரலிங்கம்…..சங்கரலிங்கத்தின் முகநூல் பதிவுதான் கீழே உள்ளது…….

முருகா!

அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு குழப்பத்தோடும், கவலையோடும் என்னுடைய நாட்களை நான் நகர்த்தி வருகிறேன். வேலையில்லாமல் நண்பர்கள் மற்றும் நல் இதயம் கொண்டோரின் உதவியால் இத்தனை நாட்கள் கடந்துவிட்டன. இறைவனுக்கு நன்றி!

பெரிய இடத்தில் இருந்துவிட்டாலே பல விமர்சனங்களை தாங்கித்தான் ஆகவேண்டும். பனை மரத்தின் அடியில் நின்று கொண்டு பாலை சாப்பிட்டாலும் கள் சாப்பிட்டதாகத்தான் அர்த்தம் கொள்ளப்படும் என்பது பழமொழி. ஒவ்வொருவர் பார்வையிலும் நான் வெவ்வேறாகத் தெரிகிறேன். குறை சொல்பவர்களிடம் குற்றமில்லை. அது எனது ஊழ் வினைப் பயன்.

என் மனைவி படித்தவள். திருமணமான பிறகு வேலைக்கு செல்கிறேன் என்று சொன்னபோது, உன்னை காப்பாற்ற கூடிய சக்தி எனக்கு இருக்கிறது. அதனால், நீ வேலைக்குச் செல்லத் தேவையில்லை என்று சொன்னவன் நான். முடிவெடுக்க நான் யார்? இன்று நான் வேலை இல்லாமல் இருக்கிறேன், என் மனைவி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். இறைவன் நடத்தும் நாடகத்தில் நம்மால் சாதிக்க முடிந்ததுதான் என்ன?

அம்மாவின் மறைவுக்குப் பிறகு வேலைக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. சூழ்நிலை கருதி தொடர்ந்தேன். பிறகு நிறுத்திக் கொண்டேன். வேலைக்கு வராவிட்டாலும் நான் பெற்று வந்த 30,000 ரூபாய் சம்பளத்தை சின்னம்மா அவர்கள் தர சொல்லியிருக்கிறார் என்று தந்தபோது கூட, வேலைக்குச் வராமல் இந்த பணத்தை பெறுவது தர்மத்திற்கு உகந்ததல்ல என்றுச் சொல்லி வேண்டாமென்றேன். இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். தரும் வரை பெற்றுக் கொள்ளலாமே! உங்களுக்கு இந்த நேரத்தில் மிகவும் பயன்படும் என்று சொன்னார் நண்பர். இல்லை நண்பரே! அது மனதிற்கு வலியைத்தான் தரும் என்றேன். எனக்கு என்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு அதில் வாழ பழகிக்கொண்டவன் நான். என் இளமைக் காலம் வேதா இல்லத்தில் கரைந்து போனது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பதற்காக போராடி வெற்றி பெற்றேனா? தோல்வியுற்றேனா? என்று இன்றுவரை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கடந்த நான்கு வருட காலமாக கோயில்களுக்கு செல்வதற்கு உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். கோயில்களை சுற்றிக் கொண்டிருந்த நான் வீட்டிற்கு சென்றிருந்த போது, என் மகன் அப்பா போன வருடம் நாங்கள் அடுத்த ஏப்ரல் மாதத்தில் சொந்த வீடு வாங்கிக் கொண்டு செல்லவேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன். எப்போது புது வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்றான்.
நான் வேலைக்கே போகவில்லை, எப்படி வீடு வாங்குவது என்றேன். உடனே, அந்த குழந்தை மனம், ஏம்பா நீ ஏன் ஒரு நல்ல வேலைக்கு போகக்கூடாது என்றது. வெளியில் சிரித்தாலும் மனம் கண்ணீரை வடித்தது. என் மனைவி நீண்ட நாட்களாக வேலைக்கு செல்லாமல் இப்படி கோயில் கோயிலாக சுற்றிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது என்று கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார். நானும் இதை கேட்டு கடந்து கொண்டே இருக்கிறேன்.

சட்டமன்ற தேர்தல் வரை அமைதியாக இருப்போம் என்று காலம் கடத்திக் கொண்டு வந்தேன். காலமும் கனிந்து விட்டது. உத்தியோகம் புருஷ லட்சணம். அம்மா அவர்களுடன் நீண்ட நாட்கள் பயணித்தது என்னுடைய வாழ்நாள் சாதனை. அந்த பதவியே என்னுடன் கடைசி வரை இருக்க வேண்டும் என்று என் உயிர் முருகனிடம் மன்றாடுகின்றேன்.

அம்மா அவர்களின் நினைவிடத்தில் வேலை கிடைக்குமா? நினைவிடத்தின் அருகில் ஆவின் பாலகம் நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா? என்றெல்லாம் மனம் சிந்தித்தது. சிந்தித்த மனம் செயல்படவில்லை. மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல நேரமும் எனக்கு இதுவரை வாய்க்கவில்லை.

ஆன்மீகப் பணியில், திருக்கோயில்களில் இறைத்தொண்டு புரிவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஸ்ரீரங்கத்தின் சட்டமன்ற உறுப்பினராக அம்மா அவர்கள் இருந்த போது ஸ்ரீரங்கம் கோயிலில் வேலைக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கடிதம் எழுதி, நண்பர்கள் நன்றாக இருக்காது என்றுச் சொன்னதால் தவிர்த்தேன். நான் திறமையானவன் இல்லை, ஆனால் விசுவாசமானவன். எனக்கு சிபாரிசு செய்பவர்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பதில் உறுதி கொண்டவன். இறைப்பணி எப்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆன்மீகப் பணி அல்லது திருக்கோயில் பணி இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!