Sat. Nov 23rd, 2024

மாதவரம் திமுக வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 10 வருட அதிமுக ஆட்சியால் தமிழகம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இன்னும் சொல்லப்போனால், 50 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறது. பழனிசாமி அரசு துரோகம் செய்து, அடிமைத்தனமான ஆட்சியாக இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெற முடியாது. பாஜக ஜீரோ ஆவாக இருக்கிறது. அதிமுக.வும் ஜீரோவாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். தப்பித்தவிறி ஒரு இடத்தில் அதிமுக வெற்றிப் பெற்றாலும் அவர் பாஜக எம்.எல்.ஏ., ஆகிவிடுவார்கள். அந்த நிலை தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது. எல்லா பக்கங்களிலும் 3 பக்கத்திற்கு அதிமுக விளம்பரம் செய்துள்ளது. ஆட்சிப் பணத்தை வைத்து கோடி கோடியாய் செலவு செய்தார்கள்.

இன்றைய தினம் அதுபோலவே அதிமுக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருக்கிறது. அந்த விளம்பரங்களில் அவர்கள் செய்த சாதனைகளை சொல்லியிருக்க வேண்டும். அல்லது செய்யவுள்ளதை விளம்பரமாக போட வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக திமுக.வுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார்கள். பத்தாண்டு காலமாக அதிமுக.தான் ஆட்சியில் இருக்கிறது. திமுக குற்றம் தவறு செய்திருந்தால் வழக்குப் போட வேண்டியதுதானே. அதையெல்லாம் செய்ய முடியாத பழனிசாமி, திமுக.வை அசிங்கப்படுத்த நினைக்கிறார். நான் கேட்கிறேன், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வேண்டியதுதானே.. தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றீர்களே, அதை சாதனையாக போட வேண்டியதுதானே. அதுபோல, சாத்தான்குளத்தில் அப்பா, மகனை போலீசார் அடித்தே கொன்றார்களே, அதை சாதனையாக போட வேண்டியதுதானே…அதிமுக ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மாற்றக் கூடிய நாள்தான் ஏப்ரல் 6 ஆம் தேதி.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக அரசு வழங்க தவறிய கொரோனோ நிதி 4000 ரூபாயை திமுக தரும். அதுவும் ஜுன் 3 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி பிறந்தநாள் அன்று வழங்கப்படும். இதேபோல, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து சலுகைகளையும், நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்ற திமுக.வுக்கு ஆதரவு தர வேண்டும். அதிமுக ஆட்சியின் கொடுமையை விட இந்த வெயிலின் கொடுமை பரவாயில்லை என்று நீங்கள் கூடியிருக்கிறீர்கள். மாதவரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுதர்சனம் வெற்றிப் பெற்றால்தான் நான் முதலமைச்சராக பதவியேற்க முடியும். முதலமைச்சர் ஆக நான் பதவியேற்கவும் உங்களிடம் ஆதரவு கேட்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.