Sat. Nov 23rd, 2024
பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் "சித்திரவதை" மற்றும் "அழுத்தம்" காரணமாக உயிரிழந்தனர் என்று திமுக.தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை கூறிய குற்றம்சாட்டுகள் டெல்லி பாஜக.வில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை அதிமுக தலைவர்கள், வி.கே.சசிகலா பற்றி உதயநிதி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தமிழக அளவில் மட்டுமே எதிர்ப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், டெல்லியையே ஆட்டம் காண செய்துவிட்டார் எங்கள் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று பெருமிதமாக கூறி வருகின்றனர், திமுக இளைஞரணி நிர்வாகிகள்.

ஆனால், தான் கூறிய குற்றச்சாட்டுகள் தமிழகத்தை கடந்து டெல்லியை எட்டாது என்று உதயநிதி நம்பியிருக்கலாம். ஆனால், அவரின் குற்றச்சாட்டுக்கு நாகரிமாக இரண்டு பாஜக தலைவர்களின் வாரிசுகள், தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்து, திமுக.வின் அறிவார்ந்த தலைவர்களை கூனி குறுக வைத்திருக்கிறார்கள் என்று அண்ணா அறிவாலய நிர்வாகிகள் கவலையோடு கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அப்படி என்ன பேசியார் உதயநிதி ? அவருக்கு யார் யார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் ?

தாராபுரம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, பெண்கள் பாதுகாப்பு விஷயம் குறித்து பேசியபோது திமுக.வையும் காங்கிரஸையும் நேரடியாக பெயர் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில்  வியாழக்கிழமை பிரதமர் மோடியைத் தாக்கி பேசிய உதயநிதி ஸ்டாலின், "சுஷ்மா ஸ்வராஜ் என்று ஒரு நபர் இருந்தார். மோடியின் அழுத்தம் காரணமாக அவர் இறந்தார். அருண் ஜெட்லி என்ற நபர் இருந்தார். மோடியின் சித்திரவதை காரணமாக அவர் இறந்தார்" என்று குற்றம் சாட்டியிருந்தார். 

இதுதவிர, திங்கள்கிழமை பேசிய உதயநிதி, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு போன்ற மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவர்களையும் பிரதமர்  "ஓரங்கட்டினார்" என்று குற்றம் சாட்டினார். 
"நீங்கள் அனைவரையும் ஓரங்கட்டினீர்கள். திரு மோடி, நான் [தமிழக முதல்வர்] இ பழனிசாமி அல்ல, உங்களைப் பற்றி பயப்படவோ அல்லது உங்கள் முன் தலைவணங்கவோ இல்லை. நான் கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின்," என்று உதயநிதி உச்சகுரலில்   கூறினார். 
சென்னையில், தமிழகத்தில் அமர்ந்து கொண்டு உதயநிதி பேசியது டெல்லி வரை தீயாக பரவி, அங்குள்ள பாஜக தலைவர்களின் வாரிசுகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனது தாயாருக்கும், பிரதமருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் சுடச்சுட பதிலளித்துள்ளார்.

"உதயநிதிஜி உங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு தனது தாயின் நினைவுகளைப் பயன்படுத்தக்கூடாது.உங்கள் கூற்று தவறானவை. பிரதமர் நரேந்திர மோடி ஜி எனது தாய்க்கு மிகுந்த மரியாதையையும் கௌரவத்தையும் வழங்கினார். எங்கள் துயரமான நேரத்தில் பிரதமரும் கட்சியும் [பிஜேபி] எங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கின்றன. உங்கள் பேச்சு எங்களை காயப்படுத்தியுள்ளது" இவ்வாறு பன்சூரி  ஸ்வராஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வராஜ் புதல்வி பான்சூரி ஸ்வராஜ்..

இதேபோல, மறைந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மகள் சோனாலியும் ஆவேசத்துடன் உதயநிதி ஸ்டாலினுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதி ஜி. உங்களுக்கு தேர்தல் அழுத்தம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், எனது தந்தையின் நினைவுகளைப் பற்றி நீங்கள் கூறும் பொய் மற்றும் அவமரியாதை கருத்துகளை கேட்டு கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன். எனது தந்தை அருண்ஜெட்லி மீது பிரதமர் நரேந்திரமோடி ஜி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிறப்பான அன்பு வைத்திருந்தார். அந்த வகையிலான அன்பை, அதிர்ஷ்டமான நட்பை நீங்கள் அறிய பிரார்த்திக்கிறேன் என்று சோனாலியும் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு, டெல்லி பாஜக தலைவர்களிடமும் அதிருப்தியை, விமர்சனத்தை எதிர்கொண்டதுதான் 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி வேறு எந்த தமிழக தலைவர்களுக்கும் கிடைக்காத வெகுமதி என்று கூறுகிறார்கள் டெல்லியில் வசித்து வரும் தமிழக அரசியல் தலைவர்கள்….

தாய் எட்டடி பாயாத போதே, குட்டி பதினாறு அடி பாய்ந்து, அவமானபடுவது அவசியமா? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டத்தை காட்டுகிறேன் என்ற கதையாக அல்லவா இருக்கிறது உதயநிதியின் கன்னி அரசியல்…

One thought on “டெல்லி பாஜக தலைவர்கள் வாரிசை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்… நாகரிகமாக எதிர்ப்பு காட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் உறவுகள்…”

Comments are closed.