பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய வி.கே.சசிகலா, அரசியலில் இருந்து விலகியிருப்பதாக அறிக்கை வெளியிட்டு, அமைதியானார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர்களின் குடும்ப விழாவில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் சென்ற அவர், அவரது கணவர் எம்.நடராஜன் நினைவு நாளையொட்டி, முள்ளிவாய்க்கால் நினைவு சதுக்கம் அருகில் உள்ள எம்.நடராஜன் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சில நாட்கள் இடைவெளி விட்டு ராமேஸ்வரம், கோவில்பட்டி, மதுரை ஆகிய ஊர்களுக்குச் சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தினார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்ட வி.கே. சசிகலா, அமைதியைத் தேடி கோயில்களுக்கு யாத்திரை மேற்கொண்டு வருகிறார் என்று அவரது தரப்பில் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், தஞ்சாவூரில் தங்கியிருந்த நாட்களிலேயே சசிகலா ரகசியமாக சில அரசியல் காய் நகர்த்தலை மேற்கொண்டதாகவும், அதன் முதற்கட்டமாக ஜெயா டிவி நிர்வாகத்தை மீண்டும் கைவசப்படுத்திக் கொண்டதாகவும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக ஜெயா டிவி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பு தனது சகோதரர் மறைந்த ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமனிடம் ஒப்படைத்தார். அவரின் ஆசியோடு, ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் நிர்வாகத்தை தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்பில் விவேக் ஜெயராமன் நிர்வாகம் செய்து வந்தார்.
இடையில், டிடிவி தினகரன் அமமுக.வை தொடங்கிய நேரத்தில், ஜெயா டிவிரி நிர்வாகம் தொடர்பாக இருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெங்களுர் சிறையில் தன்னை சந்திக்க இருவரும் வந்தபோது, செய்திப்பிரிவின் நிர்வாகம் டிடிவி தினகரன் மேற்பார்வையில் செயல்படட்டும். இதர பிரிவுகளின் நிர்வாகத்தை விவேக் ஜெயராமன் பார்த்துக் கொள்ளட்டும் என்று அறிவுரை கூறியிருந்தார் வி.கே. சசிகலா.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, ஜெயா டிவியின் நிர்வாகப் பொறுப்பில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளார், சசிகலா. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, சசிகலாவின் விசுவாசத்திற்குரிய சம்பத், சங்கர் உள்ளிட்டோர் ஜெயா டிவியில் பணியாற்றி வந்தனர். சசிகலா சிறைக்குச் சென்ற போது அவர்கள் அங்கு பணியில் இல்லை. தற்போது, அந்த இரண்டு அதிகாரிகளையும் மீண்டும் ஜெயா டிவியில், ஏற்கெனவே அவர்கள் வகித்து வந்த நிர்வாகப் பொறுப்பிலேயே நியமித்துள்ளார் சசிகலா. இதன் மூலம் விவேக் ஜெயராமனால் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் அதிகாரம் முடக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அவர்கள், அங்கிருந்து வெளியேற்றப்படும் சூழலும் உருவாகலாம் என்கிறார்கள், ஜெயா டிவி நிர்வாக நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள்.
ஜெயா டிவியின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு விவேக் ஜெயராமனுக்கு கட்டளையிட்டுள்ள சசிகலா, ஜெயா டிவியின் நிர்வாகத்தை தானே நேரடியாக கவனிக்கத் தொடங்கியுள்ளார் என்று கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
ஜெயா டிவியில் நிர்வாக இயக்குனர் என்ற பதவிக்குரிய ஒரு பெரிய பிரம்மாண்டமான அலுவலக அறை இருக்கிறதாம். அந்த அறையை புதுப்பித்து, அழகுப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாம். அதனைப் பார்த்து, அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் அதிர்ச்சியாகியுள்ளார்களாம். வி.கே.சகிலா அடுத்த சில நாள்களில் நல்ல நாளாக தேர்வு செய்து ஜெயா டிவிக்கு வர இருக்கிறாராம். பிறகு நாள்தோறும் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்து ஒளிப்பரப்பாகும் செய்திகளில் நேரடியாக அவரே கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அரசியலுக்கு திரும்புவார் சசிகலா என்பதற்கு முன்னோட்டமாகதான், ஜெயா டிவி நிர்வாகத்தை சசிகலா கையில் எடுத்திருக்கிறார். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக.விலும் தனது ஆதிக்கத்தை செலுத்த அதிரடி நடவடிக்கைகளை சசிகலா எடுப்பார் என்கிறார்கள் அமமுக முக்கிய நிர்வாகிகள்.
புலி பதுங்கியிருக்கிறது.. மே 2 க்குப் பிறகு பாய்ச்சல் உறுதி…