Sat. Nov 23rd, 2024

தேனி மாவட்டத்தில் உள்ள திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

50 ஆண்டு கால அரசியல் தொடர்புடையவன் நான் என்ற உரிமையோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். முதல்வர் பழனிசாமி எப்படி பதவி பெற்றார் என்பதையெல்லாம் சமூக ஊடகங்களில் வந்ததை நாம் எல்லோரும் பார்த்திருக்கிறோம். அதை சுட்டிக் காட்டினால் அவருக்கு கோபம் வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு பன்னீர்செல்வமும், பழனிசாமியும் எப்படி இருந்தார்கள்.. இங்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது முதல்வர் பழனிசாமி, ஓ.பி.எஸ்.ஸை தேனி மாவட்டத்திற்கு இறைவன் கொடுத்த கொடை என்று கூறி மறைமுகமாக தாக்கியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

கிராமத்தில் சொல்வார்கள், விடாக் கண்டன், கொடா கண்டன் என்பவர்கள்.இருவரும் அப்படிபட்டவர்கள்தான். அதிமுக.வுக்கு துரோகம் செய்தவர்கள் இந்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று சொல்கிறார் ஓ.பி.எஸ்..அதிமுக.வுக்கு முதன்முதலில் துரோகம் செய்தவர் யார்? 2017 பிப்ரவரியில் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் யார்? ஓ.பி.எஸ்.. உள்ளிட்டவர்கள் துரோகம் செய்யவில்லையா ? அவர்களை டெபாசிட் வாங்க விடலாமா? செல்வி ஜெயலலிதா மறைந்த போது, அவரின் மறைவில் மர்மம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் நடத்தினார்.

அப்போது ஓ.பி.எஸ். என்ன சொன்னார்? ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து, அதற்குரியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவேன் என்று சொன்னார் ஓ.பி.எஸ்.. ஆனால் என்ன நடந்தது. மீண்டும் அதிமுக.வில் இணைந்து துணை முதல்வர் பதவியைக் பெற்றுக் கொண்டு, ஜெயலலிதா மரணத்தைப் பற்றி இப்போது வாயே திறப்பதில்லை. ஓ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் வரை பல பதவிகளைக் கொடுத்த ஜெயலலிதாவையே இன்னைக்கு தூக்கி போட்டுவிட்டார். அவருக்கே துரோகம் செய்த ஓ.பி.எஸ்.ஸை, போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து விரட்ட வேண்டாமா? போடி நாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகளை மட்டுமல்ல, தேனி மாவட்டத்தில் அவர் கூறிய எந்த கோரிக்கையையாவது நிறைவேற்றினாரா.

தேர்தலில் தோற்றுப்போகிற அதிமுக.வுக்கு முதல்வர் வேட்பாளராக பழனிசாமி என்று அறிவித்த புத்திசாலிதான் ஓ.பி.எஸ். கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடரில் உள்ஒதுக்கீடு நிறைவேற்றிய போது, அமைதியாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்தவர் ஓ.பி.எஸ். ஆனால்,இப்போது அந்த உள்ஒதுக்கீட்டை தற்காலிகமானது என்று கூறுகிறார். ஆனால், சட்டமன்றத்தில் சட்டமாக்கும்போது கைதட்டி வரவேற்றவர் ஓ.பி.எஸ். இதேபோல, சில நாட்களுக்கு முன்பு வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரும் கூறியிருக்கிறார்.

ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் பேட்டி பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உடனே முதல்வர் பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால், அவர் உள்ஒதுக்கீடு சட்டம் நிரந்ரமானது என்று கூறுகிறார். ஆனால், ஓ.பி.எஸ் ஒன்று சொல்கிறார். இ.பி.எஸ். ஒன்று சொல்கிறார். இருவரும் சேர்ந்து நாடகம் ஆடி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள். திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அனைத்து சாதிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

பிரதமர் மோடி தாராபுரத்தில் பிரசாரத்திற்கு வந்தார். அப்போது அவர் மத்திய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சாதனைகளை சொல்வதை தவிர்த்து, திமுக மீது புகார் கூறுகிறார். அந்தக் கூட்டத்தில், ஓ.பி.எஸ். என்ன பேசுகிறார். உண்மையான ஜல்லிக்கட்டு ஹீரோ, பிரதமர் மோடிதான் என்கிறார்கள். உண்மையான ஜல்லிக்கட்டு ஹீரோ யார் என்றால், இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களை ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது அடித்து விரட்டவில்லையா..அதுதொடர்பான வீடியோக்களும் வெளியானதை நாம் பார்க்கவில்லையா.. இளைஞர்களை கேவலப்படுத்தும் ஓ.பி.எஸ்.ஸை தேர்தலுக்குப் பிறகு மக்கள்தான் ஏமாற்றப் போகிறார்கள்.

அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறக் கூடாது. தப்பித்தவறி அவர்கள் வெற்றிப் பெற்றால், அவர்கள் பிஜேபி எம்.எல்.ஏ.வாக இருப்பார். அதற்கு உதாரணம் உங்கள் தொகுதி எம்.பி.யான ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத், அதிமுக எம்.பி.யாகவா இருக்கிறார். பாஜக எம்.பி.யாகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் லட்டர் பேடில் பிரதமர் மோடி படம்இருக்கிறது என்றால் அவர் அதிமுக எம்.பி.யா, பாஜக எம்.பி.யாகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன், ஒரு அதிமுக எம்.எல்.ஏ., கூட இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.