Sat. Nov 23rd, 2024

மேகதாது அணை மார்ச் 28-ல் கர்நாடகம் நுழைவோம் மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்துவோம் என்ற முழக்கத்தோடு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பிஆர் பாண்டியன் தலைமையில் காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு இன்று காலை வந்தனர்.

பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் மேகதாது அணை பகுதிக்கு முற்றுகையிடுவதற்காக வாகனங்கள் மூலம் செல்ல முற்பட்டனர். காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டவர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.பிறகு வாகனங்களில் இருந்து இறங்கி விவசாயிகள் நடைபயணமாக முழக்கமிட்டவாறு 3 கிலோ மீட்டருக்கு மேல் மேகதாது பகுதி நோக்கி நடந்து செல்ல முயன்றனர்.

திண்டுக்கல் ஈரோடு வழியாக கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காவல்துறையினரால் வாகனங்கள் நிறுத்தப்பட்டு தடுப்பு வேலிகள் அமைத்து விவசாயிகள் பேரணியை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பிறகு சாலையில் அமர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது விவசாயிகள் தரப்பில் கர்நாடக அரசும் மோடி அரசும் சட்டவிரோதமாக காவிரியின் குறுக்கே தமிழகம் நோக்கி வரும் உபரி நீரை தடுத்து மேகதாது அணை கட்ட ரூபாய் 9ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்தது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். அரசியலமைப்பு சட்டத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் விதிகளை மீறும் செயலாகும்.

இந்நிலையில் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் நேரடியாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது தவிர வேறு வழியில்லை எங்களை அனுமதிக்க வேண்டும் என்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள போது கர்நாடகா எடியூரப்பா அரசு தமிழகத்திற்கு எதிரான வஞ்சக செயலில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது எனவே சட்டத்தைக் காட்டி காவல்துறையினர் தடுத்து நிறுத்துவது ஏற்க இயலாது.தேர்தல் ஆணையம் இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விளக்கம் கேட்க மறுப்பாகற்கு தமிழக விவசாயிகளின் சார்பில்கண்டனம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே தேர்தல் ஆணையம் எங்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதியாக தொகுதி துணைத் தேர்தல் அதிகாரியான வருவாய் வட்டாட்சியர் நேரடியாக வருகை தந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது உடனடியாக போராட்டக் களத்தில் இருந்து வட்டாட்சியர் வெளியேற்றப்பட்டார்.

அப்போது காவல்துறை அதிகாரிகள் உரிய முறையில் தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துரைப்போம் எனவே நீங்கள் கைதுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தினர்.நீண்ட விவாதத்திற்குப் பிறகு விவசாயிகள் கைது செய்ய ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு பேருந்துகள் திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்று தங்க வைத்துள்ளனர்.

அங்கு செய்தியாளர்களுக்கு பிஆர் பாண்டியன் பேட்டியளித்தார். அதன் விவரம் இதோ….

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அரசு சட்டவிரோத மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் மோடியின் தூண்டுதலால் ஈடுபட்டுள்ளனர்.பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் தேர்தல் களத்தில் மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பழிவாங்கும் செயலாக இந்த நடவடிக்கையில் மோடி தூண்டுதலின்பேரில் எடியூரப்பா மேற்கொள்வதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

ஏற்கனவே மேட்டூர் அணையை மேலாண்மை ஆணையம் அனுமதி பெறாமல் உலக நீதிக்கு எதிராக பாசன விதிமுறைகளுக்கு முரணாக சட்டத்திற்கு புறம்பாக மேட்டூர் அணையை எடப்பாடிபழனிசாமி உடைத்திருக்கிறார். இதனை பின்பற்றியே காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமல் கர்நாடகமும் மேகதாது அணையை நாங்கள் கட்டுவோம் என்று சொல்வதும் மோடியும் எடப்பாடியும் கூட்டு சேர்ந்து காவிரி டெல்டாவிற்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக அரசியல் கட்சிகள் மேகதாது அணை குறித்து எந்த கருத்தையும் வெளியிடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும்.

தேர்தல் ஆணையம் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும் அணை கட்டப்படுமேயானால் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பறிபோகும் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும் தமிழர்கள் அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்படும்.எனவே இதனை கருத்தில் கொண்டு மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். எடியூரப்பா அரசை பதவி நீக்கம் செய்யவும், சட்டமன்றத்திற்கு தடை விதிக்க கோரி விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கிறேன் என்றார்.

போராட்டத்தில் பொதுச்செயலாளர் பாலாறு வெங்கடேசன், மாநில பொருளாளர் ஸ்ரீதர்,தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்
த.புண்ணியமூர்த்தி, உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதா தர்மலிங்கம்,ஈரோடு மாவட்ட கவுரவ தலைவர் அப்பாச்சி கவுண்டர், தலைவர் சுப்ரமணிய கவுண்டர்,செயலாளர் சுப்பு ரவி,பொருளாளர் தியாகராஜன்,திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மணிக்கொள்ளை ராமச்சந்திரன், சென்னை மாவட்ட செயலாளர் சைதை சிவா மலைவாழ் விவசாயிகள் சங்க தலைவர் ஏற்காடு ராமர்,சேலம் மாவட்ட செயலாளர் பெருமாள், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் மகேந்திரன், இளைஞரணி அறிவு, உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில்
ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.