கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மேற்கு, கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். இன்றைய பிரசாரத்தை ஈரோடு மேற்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மே 2 க்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் உறுதியாக நிறைவேற்றப்படும். .குடும்பத்திற்கு ரூ.4000 நிவாரணம்; குடும்பத் தலைவியருக்கு உரிமைத் தொகை ரூ.1000; சிலிண்டருக்கு ரூ.100 மானியம்; பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு; தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே – திமுகவின் ஒவ்வொரு வாக்குறுதியும் மக்களின் மனதில் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்.
பிரதமர் மோடி ஏற்கனவே தமிழக வளர்ச்சிக்காக அறிவித்த எந்தவொரு திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய பா.ஜ.க அரசும், மாநிலத்தை ஆண்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருகின்றன. பிரசாரம் மேற்கொண்டு வரும் அனைத்து இடங்களிலும் அவர்கள் தி.மு.க,வையும் என்னையும்தான் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சியினரை வசைப்பாடுவதை தவிர, அவர்களிடம் வேறு சரக்கு எதுவும் இல்லை. அவர்களின் ஆட்சியில் (அதிமுக மற்றும் பாஜக) அமல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், மக்களின் மேம்பாட்டிற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.