Fri. Nov 22nd, 2024

பாஜக மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள விவகாரம், புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத் எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளும் பாஜகவினர், தாமரைக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

வாக்காளர்களின் கைபேசி எண்கள் மொத்தமாக பாஜக.வினருக்கு எப்படி கிடைத்தது என்ற சந்தேகம், அங்குள்ள பிற கட்சியினருக்கு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி இந்திய ஜனநாயக இளைஞர் சங்க தலைவர் ஆனந்த், இதுதொடர்பாக வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, வழக்கு தொடர்பாக மார்ச் 26ம் தேதி விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜரான புதுச்சேரி சைபர் குற்றப் பிரிவு போலீசார், ஆனந்த் அளித்துள்ள புகார் மீது தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘வாக்காளர்களுக்கு மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்ய பாஜ.கவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை என்றும் அனுமதி பெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு பா.ஜ.க-வினருக்கு மார்ச் 7ல் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ஆனால் இதுவரை பாஜக தரப்பில் பதிலளிக்கவில்லை.சைபர் கிரைம் அறிக்கையை பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார்,’எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. .

இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் கைபேசி எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணை மார்ச் 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.