மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது…
திமுக ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு முறையாக நிதியுதவி வழங்கப்பட்டதா? ஆனால் அம்மாவின் அரசு கொரோனா நிதியுதவி, பொங்கல் பரிசு என சிறப்புத்தொகுப்பை மக்களுக்கு வழங்கி வருகிறது. திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம்.திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சிதான்.
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்துதரப்பு மக்கள் மீதும் அக்கறை கொண்டது அ.தி.மு.க., ஆட்சி. மதுரைகிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர். அதிமுக வேட்பாளர் ஆர். கோபாலகிருஷ்ணன் அமைதியானவர். பண்பானவர்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அம்மாவின் அரசு. இதுவரைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்ததாக வரலாறு இல்லை.
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு, நீர் நிலைகள் தற்போது நிரம்பி வழியும் அளவுக்கு காட்சி தருகின்றன. திமுக ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி தான். அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கும். தி.மு.க., ஆட்சியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டது. கட்டப்பஞ்சாயத்து தலைதூக்கும்.
அதற்கு மாறாக, அதிமுக.வின் இந்த பத்தாண்டு ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்துக் கொண்டிருகிறது. பல்வேறு துறைகளின் வளர்ச்சியால், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் பெயர் பெற்றிருக்கிறது.
ஜல்லிக்கட்டை தடை செய்தது திமுக காங்கிரஸ் கூட்டணி. பாரம்பரிய, வீர விளையாடடு மீதானை தடையை நீக்கியது அதிமுக அரசு.தமிழகம் சரியான இலக்கை நோக்கி செல்கிறது. மக்களுக்கான அரசாக என்றுமே அதிமுக அரசு இருக்கும்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் சாமானிய மக்களின் நிலையை அறிந்த நான் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, போன வருடம் 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு சென்றிருந்த நிலை மாறி, இந்த வருடம் 435 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.