Sat. Nov 23rd, 2024

திருவண்ணாமலையில் திமுக சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசியதாவது:

தேர்தல் எப்போது வந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று நினைக்கின்ற சில தலைவர்கள், ‘தி.மு.க. இந்துக்களுக்கு விரோதி’ என்று ஒரு பிரச்சாரத்தை திரும்ப திரும்ப கூறுவது உண்டு.

திமுக.வை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக இருப்பது இல்லை. மதவேறுபாடு பார்க்கால், எல்லோரையும் ஒன்றாக பார்க்கிற அளவில்தான் என்னுடைய ஆட்சி நடக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

மதவுணர்வைத் தூண்டுவோர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தமிழ்நாடு. தமிழ் மக்கள் அரசியல் வேறு – ஆன்மீகம் வேறு என்று தெளிவு கொண்டவர்கள். இதை புரிந்துகொள்ள பா.ஜ.க. வுக்கு இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். தமிழக மக்களைப் பற்றிய புரிதல் இல்லாததால்தான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை இந்தியில் வெளியிட்டார்கள். இந்தி பேசும் மக்களுக்கான ஆட்சியாளர்களாகதான் பாஜக.வினர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பது, தமிழ்நாட்டிற்குள் இந்தி பேசும் இளைஞர்களை வேலைக்கு நுழைப்பது அவர்கள் வழியாக பா.ஜ.க.வை வளர்த்து விடலாம் என்று ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள். அந்த சதிச்செயலுக்கு இங்கே இருக்கும் பழனிசாமி கூட்டம் வேடிக்கை பார்க்கலாம். ஆனால் தி.மு.க.வோ, தமிழ்நாட்டு மக்களோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்

தனிப்பட்ட முறையில், வடமாநிலத்தவரை நான் வெறுப்பதில்லை. ஆனால், கல்வி வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்குத்தான் தரவேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறிக்கொண்டிருக்கிறோம்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்த மாநில மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து கொண்டிருக்கிறது. அதே போல தமிழ்நாட்டில் இருக்கக்கூடாதா?

தற்போதைய தேர்தல் மூலமாக திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்கிறோம். பதவியில் உட்கார வேண்டும் என்பதற்காக அல்ல, திமுக ஆட்சிக்கு வந்தால்தான் இதுபோன்ற அயோக்கியத்தனங்களைத் தடுக்க முடியும். நம்முடைய தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பற்ற முடியும்.

அது மட்டுமல்ல,இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க. வும் – அ.தி.மு.க.வும் சேர்ந்து பல்வேறு வழிகளில் துரோகம் செய்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்தது. இதுதொடர்பாக, நானே பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினேன். திமுக எம்.பி.க்கள் அனைவரும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள்.

ஆனால் ஜநா சபையில் அந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அந்தக் கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு செய்து விட்டது.

இதே போன்ற பிரச்சினை 2012-இல் வந்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தது. அதில் தி.மு.க. அமைச்சர்கள் இருந்தார்கள்.

அப்போது தி.மு.க. தலைவர் கலைஞர், சோனியா காந்தியை தொடர்பு கொண்டு, இலங்கைக்க்கு எதிராக தீர்மானம் வருகிற போது மத்திய அரசு உடனே அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் அப்படி செய்ய தவறினால், உங்களுடைய அமைச்சரவையில் திமுக இருக்காது. அமைச்சர்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்வார்கள் என்று தெளிவாக எடுத்துக் கூறினார். திமுக வலியுறுத்தியதைப் போலவே, இந்தியா அன்றைக்கு ஐ.நா. சபையில் இந்தப் பிரச்சினையை எதிர்த்து வாக்களித்தது. அதுதான் தி.மு.க. அதுதான் கலைஞர்.

தமிழ்நாடு சொன்னதை அன்றைக்கு டெல்லி கேட்டது. ஆனால் இன்றைக்கு டெல்லி சொல்வதை தமிழ்நாடு கேட்டுக்கொண்டிருக்கும் நிலைதான் உருவாகியிருக்கிறது. மீண்டும் தமிழகம் சொல்வதை மத்திய அரசு கேட்கிற நிலை உருவாக வேண்டும் என்றால், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தை ஆளும் வாய்ப்பை திமுக.வுக்கு தர வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.