தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி நெருங்க, நெருங்க, வேட்பாளர்கள் போடும் வேடங்கள், வாக்காளர்களிடமும் பொதுமக்களிடமும் கலகலப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த தேர்தல்களின் போது, வித்தியாசமாக ஏதாவது செய்து விளம்பர வெளிச்சம் பெற வேண்டும் என்பதற்காக, முதியவர்களின் காலில் விழுவார்கள், பாட்டிமார்களை கட்டிப் பிடித்து பாசத்தை பொழிவார்கள்…பச்சிளங்குழந்தகளை தூக்கி கொஞ்சுவார்கள்..இப்படிதான் கடந்த தேர்தல்களின் போது வேட்பாளர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். பெரும்பாலும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இந்த மாதிரியான காமெடி வேலைகளை செய்ய யோசிப்பார்கள். சுயேச்சையாக களமிறங்குபவர்கள், புதுமுக இளம்தலைமுறை வேட்பாளர்கள்தான் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் தங்கள் மீதும் பட வேண்டும் என்பதற்காக துணிந்து சினிமா ஹீரோக்களாக மாறி கலகலப்பாக செய்ய முனைவார்கள்.
ஆனால், தற்போதைய தேர்தலிலும் ஆளும்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் இந்த விளம்பர வெளிச்சம் பெறும் வியாதி ஒட்டிக் கொண்டதுதான், தமிழகம் முழுவதும் பரவலாக பார்க்க முடிகிறது.
முன்பெல்லாம், நாளிதழ் மற்றும் டிவி கேமிராமேன்கள் வேட்பாளர்களை பின்தொடர்ந்து செல்லும் போதுதான், இதுபோன்ற வித்தியாசமான, அபூர்வமான காட்சிகள் எல்லாம் மக்கள் பார்வைக்கு வரும். ஆனால், இப்போது, வேட்பாளருடன் செல்லும் கட்சிக்காரர்களே, செல்போனை தூக்கிக் கொண்டு அவர் எதை செய்தாலும் போட்டோவாகவும், வீடியோவாகவும் எடுதது சமூக ஊடகக்ஙளில் பரப்பி விடுகின்றனர்.
அதனால், போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்கள் காமெடி அம்சங்களில் கலக்கி வருகின்றனர்.
வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர், நடுத்தெருவில் அமர்ந்து துணி துவைத்து காய வைக்கிறார். அவரைச் சுற்றி நிற்கும் கட்சிகாரர்கள், துணி துவைக்கும் காட்சி தெளிவாக பதிவாக வேண்டும் என்பதற்காக, அந்த இடத்தையே சினிமா சூட்டிங் ஸ்பாட் அளவுக்கு ரெடி செய்கிறார்கள்.
இதே போன்ற ஒரு காமெடிதான் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் அரங்கேறியிருக்கிறது.
விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா, வாக்கு சேகரிப்பதற்காக சிறிய உணவகம் ஒன்றுக்கு செல்கிறார். அங்கிருந்த மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு கேட்டுவிட்டு, அப்படியே தோசை போடும் மாஸ்டரிடமும் வாக்கு சேகரிக்கிறார். அவர் சிரித்துக் கொண்டே ஒரு தோசை போடுங்கள் என்று சவால்விட, அதனை ஏற்று, உடனடியாக தோசை மாவை எடுத்து சூடான கல்லில் தோசை வார்க்கிறார். யார் செய்த புண்ணியமோ, தோசை, மொறுமொறுவென்று வந்து விடுகிறது. அந்த சந்தோஷத்திலேயே திமுக வேட்பாளர் அங்கிருந்து கிளம்புகிறார்.
அவர் செய்த அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும். தன்னை விட நல்லாவே தோசை வார்க்கிறீர். வேகாத வெய்யிலில் அலைந்து ஏன் வாக்கு கேட்கிறீர். பேசாமல் என்னுடன் இணைந்து மாஸ்டர் ஆகிவிடுங்கள் என்று அந்த மாஸ்டர் கேட்கவில்லை.
வீதியில் இறங்கிவிட்டால், தோசை வார்க்கிறார்கள். துணி வைக்கிறார்கள். வயலில் இறங்கி நாற்று நடுகிறார்கள். வேறு எதைச் சொன்னாலும் வேட்பாளர்கள் செய்கிறார்களே., அவரவர் வீட்டில் மட்டும் மனைவிமார்கள் சொல்ற எந்த வேலையையும் செய்ய மாட்டேன் என்கிறீர்களே, அது மட்டும் ஏன் என்று அப்பாவியாக கேட்கிறார்கள், தினக்கூலிக்கு கூடவே வாக்கு சேகரிக்க செல்லும் அப்பாவி மக்கள்.