ஐ.நா.,வில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை உள்நாட்டு போரின்போது நேரிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அதிமுக எம்.பி தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடம் அமைந்துள்ள ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பிரிட்டன், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள், இலங்கை உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்த்தி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளன.
இதன் மீது இன்று (மார்ச் 23) வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. அதிமுக எம்.பி., தம்பிதுரை இதுதொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போரின்போது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு புரிந்த குற்றங்களை விசாரிக்கக் கோரும் இந்தத் தீர்மானம் மிகவும் முக்கியமானது.
தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்த இலங்கை அரசுக்கு எதிராக கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானம், உலகளவில் வாழும் தமிழர்களின் கவனத்தை பெற்றுள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். அதை செய்ய தவறினால், இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை இந்தியா உறுதிப்படுத்த முடியாது.
எல்லா நாடுகளிலும் நீதி மற்றும் சமத்துவத்துக்காகப் போராடும் அனைத்து இன மக்களுக்கும் ஆதரவாக எப்போதுமே அதிமுக நின்றுள்ளது. நீதிக்காகவும் அமைதிக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது.
இலங்கை தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும். பன்னாட்டு அளவில் எங்கு போர்ச்சூழல் நிலவினாலும் , அது சர்வதேச அளவில் அமைதியைக் குலைத்துவிடும். உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு ஜனநாயக ரீதியிலான நிரந்தரத் தீர்வு காண்பது இந்தியாவின் கடமை.
இவ்வாறு மு. தம்பிதுரை பேசினார்.