கொரோனோ தொற்று அச்சுறுத்தல் இருந்தாலும்கூட தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த தேதியில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், கொனோரா தொற்று பரவலால் பொதுமக்களிடம் அச்சும் எழுந்துள்ளது. இதனால் தேர்தல் தள்ளி வைக்கப்படும் என்ற ஒரு பேச்சு எழுந்துள்ளதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சத்ய பிரதா சாகு, ஏற்கெனவே அறிவித்த தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக, முழுமையாக செய்யப்படும்.
ஏப்ரல் 6ஆம் தேதி காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிடும். அன்றிரவு 7 மணிக்கு தான் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 2121 புகார்கள் வந்துள்ளன. அதனை ஆய்வு செய்து, 1400க்கும் மேற்பட்ட புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேரும் பெண் வாக்காளர்கள்3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர்.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.