ஞாயிற்றுக்கிழமையான இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வந்தவாசியில் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பாமக. வேட்பாளர் எஸ்.முரளி சங்கருக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து செய்யார், ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரத்தை மேற்கொள்ளும் முதல்வர் இன்றிரவு சூளகிரியில் பரப்புரையை நிறைவு செய்கிறார்.
முதல்வரின் பிரசார ஸ்டைலே மாறியிருக்கிறது. இதுவரை வெளியான ஒன்றிரண்டு கருத்து கணிப்புகள் எல்லாம், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தபோதும், முதல்வர் நம்பிக்கையிழக்கவில்லை என்பதைதான் அவரது பரப்புரை பேச்சில் வெளிப்படும் கருத்துகள் மூலம் உணர முடிகிறது.
திமுக.வை வன்முறை கட்சி என்று சித்தரிப்பதையே தனது பரப்புரை ஆயுதமாக முதல்வர் எடுத்திருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது. ஆனால், வெள்ளந்தியாக எடப்பாடி பழனிசாமி பேசுவதை பொதுமக்கள் ரசிக்கவே செய்கிறார்கள் என்பது குறித்து இதுவரை அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களில் பேச்சை கேட்டு ஊடக நண்பர்கள், நமது நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
போர் களத்தில் கடைசி நிமிடம் வரை போராடினால்தான் வெற்றி உறுதி என்பதை உணர்ந்திருக்கிறார் முதல்வர் இ.பி.எஸ். நான்காண்டு அரசியல் வாழ்ககையில் நிறைய கற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பதை, அவரது பேச்சும் செயலும், மக்களை சந்திக்கும் நேரத்தில் வெளிப்படுத்த பயன்படும் வார்த்தைகளையும் நேர்த்தியாகவே தேர்வு செய்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.