சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தனி வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தும் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தனி வாக்குச்சாவடி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.