Sat. Nov 23rd, 2024

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் டாக்டர் சரவணன்.

இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால், அந்த தொகுதி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திருமங்கலம் அல்லது மதுரை வடக்கு தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்கும்படி டாக்டர் சரவணன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. திமுக தலைமை அழைத்து தனக்கு ஆறுதலும் கூறாததால் விரக்தியில் இருந்த டாக்டர் சரவணன், பாஜக.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுக.வில் மாவட்ட அளவில் நிலவும் உட்கட்சிப் பூசலால்தான், டாக்டர் சரவணைனை திமுக தலைமை உதாசீனப்படுத்திவிட்டது என்ற குமறல், மதுரை மாவட்ட திமுக.வினரிடம் அதிகமாக உள்ளது. ஏற்கெனவே மருத்துவத் துறையில் புகழுடன் இருக்கும் டாக்டர் சரவணன் போன்றோர் திமுக.வில் இருந்து வெளியேறுவது, அக்கட்சி மீது பொதுமக்களிடம் இருக்கும் நம்பகத்தன்மையை பாதிக்கும். எனவே, திமுக.வில் இருந்து டாக்டர் சரவணன் வெளியேறும் அளவுக்கு நெருக்கடி கொடுத்திருப்பதாகவே, அவரது ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.