அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிப் பெறுவதற்கான சாதகமான அம்சங்கள் 100 சதவிகிதம் அந்த தொகுதியில் இல்லாத போதும், கோவில்பட்டியை அவர் தேர்வு செய்த மர்மம்தான் என்ன?என்று அவருக்கு நெருக்கமான அமமுக நிர்வாகிகளே மண்டையை பியந்து கொள்கிறார்கள். காரண்ம், தினகரன், சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பத்திற்கு ஜென்ம பகையாளி, ஓ.பன்னீர்செல்வம்தான். அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக, நெருங்கிய நண்பர்களிடம் கூறியிருந்த டிடிவி.தினகரன், திடீரென்று கோவில்பட்டியில் களம் இறங்குவதாக அறிவித்துள்ளாரே, அவருக்கு வெற்றி முக்கியமா? துரோகியை வீழ்த்துவது முக்கியமா? என்று ஆவேசம் காட்டுகிறார்கள், அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.
அவர்களில் ஒருவரிடம் பேசினோம்.. என்னதான் பிரச்னை என்று கேட்டோம்? டிடிவி.தினகரனுக்கு எதிராக பொங்கித் தள்ளிவிட்டார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடனேயே வாழ்ந்து, 40 ஆண்டுகளை தியாகம் செய்த வி.கே.சசிகலா, இன்றைக்கு அதிமுக.வில் அனாதைப் போல பார்க்கப்படும் அவலம் ஏற்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலம்தான் முக்கிய காரணம். அவர் மட்டும் 2016 ல் தர்மயுத்தம் நடத்தாமல், சசிகலா மற்றும் அவரது உறவுகளின் சொல் பேச்சை கேட்டு, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைதியாக இருந்திருந்தால், அதிமுக ஆட்சியும், கட்சியும் மன்னார்குடி கும்பலின் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கும். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்க மாட்டார். கொங்கு அமைச்சர்களிடம் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கைகட்டி நிற்க வேண்டிய கேவலமான நிலையும் வந்திருக்காது.
தர்மயுத்தம்தான், அதிமுக.வின் தலையெழுத்ததையும், வி.கே.சசிகலாவின் தலையெழுத்தையும் ஒரேடியாக மாற்றிவிட்டது. தங்கள் எதிர்காலத்தையே சீரழித்த ஓ.பன்னீர்செல்வம் மீதுதான் இப்போதும் கோபமாக இருக்கிறார் வி.கே.சசிகலா. அதே ஜென்ம பகை டிடிவி.தினகரனிடமும் இருக்குமானால், அவர், ஓ.பி.எஸ். போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட முன் வந்திருக்க வேண்டும். அந்த தொகுதி அவருக்கு ஏற்கெனவே பரீட்சையமான தொகுதிதான். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்ட பெரியகுளம் தொகுதியில்தான் போடி சட்டமன்றத் தொகுதியும் வருகிறது. அன்றைக்கு அவருக்கு தேர்தல் ஏஜென்ட் போல செயல்பட்டவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.
மேலும், அந்த தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் அனைவரும் இன்றைக்கும் டிடிவி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதும் கூடுதல் பலம். அதிமுக.வுக்கு மட்டும் ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்யவில்லை, தேவர் சமுதாயத்திற்கே அவர் பெரும் தீங்கு இழைத்திருக்கிறார். வன்னியருக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் தேவர் சமுதாயத்திற்கு கிடைத்து வந்த முக்கியத்துவத்தை பாழ்படுத்திவிட்டார் ஓ.பி.எஸ்.
வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து தேவர் கட்சியாக பார்க்கப்பட்ட அதிமுக.,இன்றைக்கு அது கொங்கு கவுண்டர்கள் மற்றும் வன்னியர்கள் கட்டுப்பாட்டிற்குள் கீழ் சென்றுவிட்டதே, தேவர் சமுதாயத்தை கிள்ளுக்கீரையாக இ.பி.எஸ்., பார்க்கிறாரே என்ற கோபம்தான், ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. மேலும், சசிகலாவைப் பற்றியும், டிடிவி.யைப் பற்றியும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் படு கேவலமாக பேசும் போது ஒருவார்த்தைக் கூட கூறாமல் கள்ள மவுனம் சாதித்துக் கொண்டு இருக்கிறாரே, ஓ.பி.எஸ்., அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய சமயம் அல்லவா, இந்த தேர்தல்.. கடந்த 4 ஆண்டுகளில் டிடிவி.தினகரனுக்கு ஏற்பட்ட அவமானங்கள் எல்லாம் யாரால் வந்தது? அதையெல்லாம் டிடிவி எப்படி மறந்தார்?
போடியில் டிடிவி வெற்றிப் பெறுகிறாரோ, இல்லையோ.,, ஓ.பி.எஸ்.ஸை வீழ்த்த வேண்டாமா, அவரை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய சின்னம்மாவையே, அவரது குடும்பத்தையே நடுத்தெருவில் நிற்க வைத்தது, ஓ.பி.எஸ்.தானே., அவரை பழிவாங்க வேண்டாமா?என்று ஆவேசம் அடங்காமல் குமறினார்கள், டிடிவி நண்பர்கள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தோம். மீண்டும் அவரே பேசினார்.
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு வரை, போடிநாயக்கனூரில்தான் போட்டியிட போவதாக அறிவித்து வந்த டிடிவி. தினகரன், திடீரென்று கோவில்பட்டி தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதில்தான் மர்மம் இருக்கிறது என்று சந்தேகிக்கிறோம். கடந்த சில நாட்களாக, தினகரனைச் சுற்றியிருக்கும் நெருக்கமான நண்பர்களிடம் ஒரு தகவல் பரிமாறப்படடுக் கொண்டிருக்கிறது. அது, ஓ.பி.எஸ்.ஸுடன் சமாதானமாகிவிட்டர் டிடிவி. இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன., உட்கட்சி கூட்டத்தில்கூட, ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக அவர் ஒருவார்த்தையும் பேசுவதில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, ஓ,பி.எஸ்.ஸின் பணிவு முன்பு கரைந்துவிட்டாரா, அல்லது விலை போய்விட்டாரா? என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.
கோவில்பட்டி தொகுதியில் கடந்த தேர்தலில் (2016) குறைந்த வாக்குகளில்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதும், கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் மாணிக்கராஜா, அமமுக.வின் முக்கியப் புள்ளி என்பதெல்லாம் வெற்றி பெறுவதற்கான சாதகமான அம்சம் என்று கூறுவது வெற்று வாதம். இன்றைய நிலையில், 10 ஆண்டு கால அதிமுக அரசுக்கு எதிரான ஒரு அதிருப்தி அலை, மறைமுகமாக மக்களிடம் பரவியிருக்கிறது. அந்த வகையில், தினகரன் போட்டியிட்டாலும் கூட, அதிமுக வாக்குகள் பிரிந்தால், திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்தான் எளிதாக வெற்றிப் பெறுவார்.
அரசியலாகட்டும், தேர்தலாகட்டும், முக்கியமான காலகட்டங்களில் டிடிவி.தினகரன் எடுக்கும் எல்லா முடிவுகளும் விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அந்த வகையில், ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து களம் காணாமல், கோவில்பட்டி தொகுதியில் டிடிவி. போட்டியிடுவது பற்றியும், அமமுக நிர்வாகிகளிடம் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரனின் ஒவ்வொரு செயலும் மர்மமாகவே இருக்கிறது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறோம்., என்றார் சுரத்தே இல்லாமல், அந்த டிடிவி தினகரனின் நண்பர்..
பொறுத்திருந்து பார்ப்போம்.. இது நம்முடைய வார்த்தையல்ல.. டிடிவி.தினகரன் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்…