அமைதிப்படை அமாவாசையாக, கடந்த 2017 ஆம் ஆண்டில் விமர்ச்சிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்றாண்டுகளில், அதிமுக.வில் மட்டுமல்ல தமிழக அரசியலில் அசைக்க முடியாத ராஜதந்திரியாக மாறிவிட்டதாக, ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் வியப்போடு பேசப்பட்டு வருகிறது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதலமைச்சராக அவர் பதவியேற்ற மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் எடப்பாடி பழனிசாமியிடம் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருப்பதை அவரது எதிரிகளே, குறிப்பாக தர்மயுத்தம் நாயகன் ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்களே ஆச்சரியமாக பேசி வந்தார்கள்.
ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க அவரது இல்லம் சென்றால் மணிக்கணக்கில் காக்க வைத்துவிடுகிறார். ஆனால், முதல்வர் பழனிசாமியை சந்திக்க நேரம் வாங்கிச் சென்றிருந்தால், காக்க வைக்காமல் உடனடியாக சந்திக்கிறார். அதுவும் விருந்தினர்களை சந்திக்கும் அலுவலக அறையாக இருந்தாலும் சரி, ஓய்வெடுக்கும் படுக்கையறையாக இருந்தாலும் சரி, எந்த பந்தாவும் இல்லாமலும் பேசி, நம்பிக்கை தந்து அனுப்பி வைப்பார்.
இந்த நடைமுறை இன்று வரை நீடித்தாலும், அவரை சந்திப்பதற்கு முன்பாக நடக்கும் நடைமுறைகள்தான் தலைகீழாக மாறியிருக்கிறது. கடந்தாண்டு கொரோனோவை காரணம் காட்டி, அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு செல்லும் கார்களின் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அதிமுக நிர்வாகிகளின் கார்கள்கூட,அவரது இல்ல வளாகத்திற்குள் சென்று திரும்பி வர முடியும். ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனோ தொற்றின் காரணமாக, அதிமுக நிர்வாகிகளின் கார்கள், அவரது பங்களா முன்பு நிறுத்தப்பட்டது. அங்கிருந்து நடந்துதான் அதிமுக நிர்வாகிகள் முதல்வரின் வீட்டிற்கு செல்ல அனுமதித்தார்கள். ஆனால், எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர்களின் கார்கள், அவரது பங்களா வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்த நடைமுறையிலும் அடுத்தடுத்த மாதங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. கடந்தாண்டு ஜூலை முதல் எம்.எல்.ஏ.க்கள் கார், அவரின் பங்களா முன்பே நிறுத்தப்பட்டது. அடுத்து அக்டோபர் மாதத்தில் மாவட்டச் செயலாளர்களின் கார்கள், அவரின் பங்களா முன்பே நிறுத்தப்பட்டு, முதல்வரின் வீட்டிற்குள் நுழைவு வாயிலில் இருந்து நடந்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்டது.
ஆட்டை கடித்து மாட்டை கடித்ததைப்போல, கடந்த ஜனவரியில் இருந்து அமைச்சர்களின் கார்களும், முதல்வரின் பங்களாவுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டது. ஓ.பி.எஸ்,, மணியான அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரைத் தவிர, மற்ற அமைச்சர்களின் கார்களும், அவரது பங்களா நுழைவு வாயிலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டு, வீட்டிற்குள் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்தை, கெடுபிடியை ஆரம்பித்துவிட்டனர்.
இந்த பந்தாவை ஆரம்பித்து வைத்தவர்கள், முதல்வரின் தனிச் செயலாளர்களான, ஓய்வுபெற்றுவிட்ட, அவரது சமுதாயத்தைச் சேர்ந்த எழிலகன், ஓய்வுப் பெற்றுவிட்ட உளவுத்துறை மூத்த அதிகாரி மற்றும் முதல்வரின் செயலாளர்களான கிரிதரன், கார்த்திக் ஆகியோர்தானாம். இந்த நான்குபேரிக் பேச்சைக் கேட்டுதான் எடப்பாடி பழனிசாமி கெட்டுப் போய்விட்டார். எளிமையான முதல்வர் என்ற பேச்சு மாறிப்போய், பந்தா முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கட்சியின் முன்னணி நிர்வாகிகளே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்கிறார்கள்,சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் மற்றவர்களுக்கு இருந்த பயம் போல, இப்போது எடப்பாடி பழனிசாமியையும் பார்த்து அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்ல, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களும் பயப்படும் அளவுக்கு, முதல்வர் இ.பி.எஸ்.ஸை மாற்றி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள், அவருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள்.
விருதுநகர் மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான், ஆசிர்வாதம் பெறுகிறேன் என்று கூறி, முதன் முதலில் இ.பி.எஸ்.ஸின் காலில் விழுந்தவர். அவரைப் பின்பற்றி கடந்த பல மாதங்களாக பல அமைச்சர்கள், பெண் அமைச்சர்கள் உள்பட பலரும், பொத்து, பொத்தென்று முதல்வரின் காலில் விழுகிறார்கள். இதையெல்லாம், 2017, 2018, 2019 ம் ஆண்டுகளில் விரும்பாத எடப்பாடி பழனிசாமி, 2020 ஆம் ஆண்டில் இருந்து ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.
வேட்டி கட்டிய ஜெயலலிதாவாக அவர் மாறிக் கொண்டிருக்கிறார். சென்னையில் இருக்கும் போது சாலைகளில் போலீஸாரை நிறுத்தி பாதுகாப்பு வழங்குவது, வெளியூர் சுற்றுப் பயணங்களின் போது, சாலையெங்கும் நூற்றுக்கணக்கான போலீசாரை கொளுத்தும் வெயிலிலும் மனசாட்சியின்றி நிற்க வைப்பது போன்றவற்றையெல்லாம், அண்மைகாலமாக அவரே விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டாராம்.
இப்படிபட்ட படாடோபமான ஆடம்பரத்தையெல்லாம் 2017 மற்றும 2018 ம் ஆண்டுகளில் விருப்பம் இல்லாதவராகதான் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் உசுப்பேற்றியதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னை ஜெயலலிதா போல சக்தி வாய்ந்த ஆளுமையாக அவரே உணரத் தொடங்கிவிட்டார். அதன் விளைவாக ஏற்படும் ஆபத்துகளில் வெளிப்பட்ட தகாத நிகழ்வு ஒன்றின் மூலம்தான் தமிழக அரசுக்கே களங்கம் ஏற்பட்டுவிட்டது.
கடந்த மாதம் முதல்வர் புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் செய்தபோது, அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பெண் ஐபிஎஸ்அதிகாரியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்து தமிழக காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதீத போலீஸ் பாதுகாப்பை வேண்டாம் என்று முதல்வர் கறாராக சொல்லியிருந்தால் இதுபோன்ற சம்பவமே நிகழ்ந்திருக்காது. வரும் காலங்களில் இதுபோன்ற ஆபத்துகள் என்னவெல்லாம் அரங்கேறுமோ என்ற அச்சம் அதிகமாகியிருக்கிறது.
தப்பித்தவறி வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் ஜெயித்து, பிரதமர் மோடி புண்ணியத்தால் முதல்வர் ஆசனத்திலும் எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்து விட்டால், பத்து மடங்கு ஜெயலலிதா போல, விஸ்வரூபம் எடுத்துவிடுவார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள், அவரின் வளர்ச்சி மீது அதீத அக்கறை கொண்ட நலம் விரும்பிகள்…
தமிழ்நாடு தாங்காது ஆண்டவா…