Fri. Nov 22nd, 2024

பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, இன்று காலை திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…

தமிழக தேர்தலில் நான் இம்முறை அதிக கவனம் செலுத்தவில்லை. அதனால், தமிழகம் பக்கம் நான் செல்லவில்லை. கூட்டணி குறித்தும் கவனம் செலுத்தவில்லை. அகில இந்திய கட்சியான பாஜக, 20, 30 தொகுதிகளுக்காக அடுத்தவரிடம் அடிமைப் போல நிற்பதில் எனக்கு உடன்பாடில்லை.

மேற்கு வங்காளத்தில், கடந்த தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டதுபோல தமிழகத்திலும் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிட்டு இருக்க வேண்டும். அப்போதுதான், அடுத்தடுதத தேர்தல்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்று, தமிழகத்தில் வலுவாக காலூண்ற பாஜக வால் முடியும்.

ஆனால், இப்போது அதிமுக. கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது. தமிழகத்தில் இதற்கு முன்பு கூட்டணி வைத்து போட்டியிட்ட போதும் பாஜக.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதனால், தமிழக தேர்தலில் இருந்து நான் ஒதுங்கியிருக்கிறேன்.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியது, அவரது தனிப்பட்ட முடிவு. ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்று நான் ஏற்கெனவே தெரிவித்து விட்டேன் என்று கூறிய சுவாமியிடம், கமல் பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் அரசியலுக்கு வந்துள்ளாரா என்று எதிர்கேள்வி கேட்டு கிண்டலடித்தார், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி.