உமி விற்கப் போனேன், காற்று அடிச்சிது… உப்பு விற்கப் போனேன் மழை பெய்தது என்ற கதையாகிப் போனது நடிகை குஷ்புவின் அரசியல் வாழ்க்கை. நடிகை என்ற அடைமொழியை கடந்து எம்.பி. என்ற அடைமொழி கிடைத்திருக்க வேண்டிய பொன்னான வாய்ப்பை ஒற்றை வார்த்தையால் , 2019 நாடாளுமன்றத் தேர்தலில்போது பறிகொடுத்தவர், நடிகை குஷ்பு.
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தமிழரா ? என்று அவர் எழுப்பிய கேள்விதான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எம்.பி. யாகியிருக்க கூடிய நிஜத்தை காவு வாங்கியது. திரையுலகில் புதுமைப் பெண்ணாக வாழ்ந்த, வளர்ந்த அவரை தமிழ் உலகமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.
2005 ஆம் ஆண்டில் கற்பைப் பற்றி அவர் உதிர்த்த முத்துகள், தமிழ் பண்பாட்டிற்கு உலை வைக்கக் கூடியது என்று ஒரு கூட்டம் பொங்கியபோதும், அவருக்கு ஆதரவாகதான் பெண்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் நின்றார்கள். 2010ல் கலைஞர் மு. கருணாநிதி முன்னிலையில் திமுக.வில் சேர்ந்து, நடிகை குஷ்பு, அரசியல் அரிதாரம் பூசிய நேரத்தில், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, அரசியலிலும், அரியணையிலும் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருந்தபோதிலும், தன் மனதில் பட்டதை பட்டென்று சொன்னவர் நடிகை குஷ்பு. அந்தவகையில், முற்போக்கு சிந்தனைவாதிகளும், அவருக்கு சாமரம் வீசத் தொடங்கினர்.
திமுக.வில் அவர் இணைந்து படு ஸ்பீடாக இயங்கத் தொடங்கிய போது, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அவருக்கும் இடையே சிலர் சிண்டு முடித்த போதும், அதனைக் கண்டு பயப்படாமல் எதிர்நீச்சல் போட்டவர் நடிகை குஷ்பு. இப்படி ஆணாதிக்கமிக்க அரசியலில் பெண் சிங்கமாய் கலைஞர் பாசறையில் வளர்ந்த நடிகை குஷ்பு, பெரியார் திரைப்படத்தில் மணியம்மை கதாபாத்திரத்தை ஏற்றபோது, அவராகவே வாழ்ந்ததால், திராவிட சித்தாந்த சிந்தனையாளர்களும், குஷ்புவை நடிகையாக பார்க்காமல், சீர்த்திருத்தவாதியாக கொண்டாட தலைப்பட்டார்கள்.
திமுக.வில் கலைஞர் மு. கருணாநிதியின் அன்பை முழுமையாகப் பெற்றிருந்தபோதும், உள்குத்து அரசியலால், மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக மோத வேண்டிய தருணத்திலும், துணிந்தே நின்றார். புறமுதுகு காட்டி ஓடாத வீராங்கனையாகவே காட்சி தந்தவர் நடிகை குஷ்பு.
மு.க.ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுக.வில் நீடிக்க முடியாது என்ற நிலை உருவானபோது, கண்ணாடி கூண்டிற்குள் நின்று கல் எறியக் கூடாது என்ற கோட்பாட்டை கடைப்பிடித்து, அதிலிருந்து வெளியேறி, தேசிய நீரோட்டத்தில் கலந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, போர்க்களத்தில் முன்கள வீராங்கனையாகவே நின்றார். 2010 முதல் 2014 வரை திமுக கற்றுக் கொடுத்த அரசியல் பாடம், காங்கிரஸில் நிலைத்து நிற்க அவருக்கு அடித்தளமாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சியில் இணைவதைப் பற்றி அவர் தெரிவித்த கருத்து, காங்கிரஸ் மீது அவர் கொண்டிருந்த ஆழமான பற்றை வெளிப்படுத்தியது.
தனது வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம், எனது சொந்த வீட்டுக்கு வந்து விட்டதைப் போல் உணர்கிறேன் என்று புளாங்கிதம் அடைந்து சொன்னார் குஷ்பு. காங்கிரஸ் தலைவர்களில் அதிரடி பேர்வழியாக சித்தரிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் செயல்பாட்டிற்கும், நடிகை குஷ்புவின் செயல்பாட்டிற்கும் அடிப்படையிலேயே பல ஒற்றுமை இருந்ததால், இரட்டை குழல் துப்பாக்கிப் போல, இருவரின் அரசியல் செயல்பாடுகளும் தூள் கிளப்பின.
ஆக்கப்பூர்வமான செயல்வீரர்களுக்கு காங்கிரஸில் எப்போதும் இடம் இல்லை என்பதால், அவரின் ஸ்கிராப் காங்கிரஸில் உச்சம் தொடவில்லை. இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராகவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சில கொள்கைகளை அவர் ஆதரித்து கருத்துகளை வெளியிட்டதாலும், மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஜொலிக்க முடியாத நட்சத்திரமாக நடிகை குஷ்பு மாறிப் போனார். ஒரு அடி முன்னெடுத்து வைத்தால் ஓராயிரம் முட்டுக்கட்டைகள் , அவரின் அரசியல் பாதையில் முளைத்தன.
இந்த நேரத்தில்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வாய்ப்பு கை கூடி வந்தநேரத்தில் கலைஞர் மு. கருணாநிதி தமிழர் அல்லர் என சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை உருவாக்கியது. மீண்டும் பாஜக ஆட்சி மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அமைந்தது.
அரசியல் அரிதாரம் பூசிய நாள் முதல் கடந்து போன பத்தாண்டுகளில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அவரின் பொருளாதாரத்தை உயர்தும் வகையில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், தமிழ் திரையுலகில் உச்சபட்ச நடிகையாக இருந்த நடிகை குஷ்பு, கடனாளியாகும் நிலைக்கு அவரின் பொருளாதாரம் தள்ளாடியது. அவரின் கணவரும், இயக்குனருமான சுந்தர் சி. தந்த நெருக்கடியால், முற்றிலும் மாறுபட்ட கொள்கை கொண்ட பாஜக.வில் இணைய முன்வந்தார்.
நடிகை குஷ்புவின் இந்த முடிவு, தற்கொலைக்கு சமம் என்ற விமர்சனங்கள் எல்லா திசைகளிலும் இருந்துந் எழுந்த போதும், மரணப் பாதைதான் என்று தெரிந்திருந்தபோதும், வேறு வழியில்லாமல் கடந்தாண்டு அக்டோர் மாதம் பாஜக.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நடிகை குஷ்பு.வின் முற்போக்கு சிந்தனைக்கும், அவரின் துடுக்குத்தனமான செயல்பாட்டிற்கும் முற்றிலும் மாறுபட்ட முகாமில் அவர் குடியேறிய நான்கு மாதத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டது.
திமுக.வில், காங்கிரஸில் கிடைக்காத அதிகாரப் பதவி, பாஜக மூலம் கை கூடுமா? என்ற கனவோடு சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். மொத்த வாக்காளர்களில் பாதிப்பேர் இஸ்லாமியர் என்பதால், தன்னுடைய வெற்றி எளிதாகிவிடும் என்று கணக்குப் போடுகிறார் நடிகை குஷ்பு.
ஆனால், இஸ்லாமியராகவும் இல்லாமல், முற்போக்குவாதியாகவும் இல்லாமல் இரண்டு கெட்டானாக காட்சியளிக்கும் நடிகை குஷ்புவின் காலை வாரிவிட இஸ்லாமியர்களே கூடி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ். முன்நெற்றியில் பளபளக்கும் குங்குமம், திலகமும், பயனளிக்குமா ? பாதகமாய் அமையுமா? என்ற கேள்வியும் ஆயிரம் ஆயிரம் மனங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமியர்களின் மனங்களை வெல்வதற்கு முன்பாக, திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரின் எதிர்ப்புகளை, தமிழ் தேசிய சித்தாந்தவாதிகளின் அனல் கக்கும் எதிர்வாதங்களை எல்லாம் கடந்து வருவதற்குள் ஏப்ரல் 6 ம் தேதி வந்துவிடும்.
இதே தொகுதியில், இதற்கு முன்பு அதிமுக கூட்டணியில் அல்லது அதிமுக.வே நேரடியாக போட்டியிட்ட போதும், அந்த தொகுதி திமுக.வுக்கே சாதமாக இருந்து இருக்கிறது.
திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டி, தமிழக மனங்களை வென்ற நடிகை குஷ்பு, அரசியல் அரிதாரத்தில், சென்னை மக்களை வெல்வாரா..?. துளியளவும் சாத்தியமில்லை என்பதுதான் தொகுதியில் நிலவும் மக்களின் மனதின் குரலாக எதிரொலிக்கிறது.
கிளியைப் பிடித்து கூண்டில் அடைத்து கூவச் சொல்கிற உலகம் என்ற பாடலைதான் பெரும்பான்மையானோர் பாடிக் கொண்டிருக்கின்றனர். சேப்பாக்கம் தொகுதியின் இன்றைய நிலை இதுதான் என்பது நடிகை குஷ்புவுக்கும் தெரியும் என்பதுதான் பரிதாபம்…