Sun. Nov 24th, 2024

மார்ச் 5 ஆம் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை நிகழ்வின்போதே, அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கப் போவதில்லை என்பதை சூசகமாக உணர்த்திவிட்டார், டாக்டர் ராமதாஸ். அவரின் ஆடு புலி ஆட்டத்தை மிகவும் காலதாமதமாகதான் தேமுதிக புரிந்துகொண்டதன் விளைவுதான், இன்றைக்கு அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்று எடுத்த முடிவு என்று ஆதங்கப்படுகிறார்கள், தேமுதிக இரண்டாம் கட்ட தலைவர்கள்.

கேப்டன் விஜயகாந்த் மீதான 15 ஆண்டுகால பகையை, அவர் உடல் நலிவுற்று இருக்கும் நிலையில் ராமதாஸ் காட்டிய அந்த அறமற்ற செயல், தமிழக அரசியல் வரலாற்றில் பாமக.மீதான கரும்புள்ளியாக என்றைக்கும் இருக்கும் என்று வசைப்பாடுகிறார்கள், தேமுதிக.வில் உள்ள ராமதாஸ் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள்.

15 ஆண்டு கால பகையா? விரிவாக சொல்லுங்கள் என தகவல்களை திரட்டும் முயற்சியில் இறங்கினோம்.

டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அதிமுக.வின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி மீது எல்.கே.சுதீஷ் எரிந்து விழுந்ததையெல்லாம் தொலைக்காட்சி வாயிலாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவரின் ஆழ்மனதில் பல ஆண்டுகளாக குமறிக் கொண்டிருந்த கோபம்தான் இன்றைக்கு வெடித்து, அனலை கக்கியது.

1989 ல் வன்னியர் சங்கத்தை துவக்கி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கையில் எடுத்த டாக்டர் ராமதாஸ், இரண்டு ஆண்டுகளில் பா.ம.க.வை தொடங்கி, தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். அப்போது அவர், பிரதான திமுக., அதிமுக ஆகிய இரண்டு கழகங்களை எதிர்த்து களத்தில் நின்றார். அப்போதைய தேர்தலில் ஒரு லட்சத்து 45 ஆயித்து 982 வாக்குகளை மட்டுமே பெற்றார். 10 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற அவருக்கு ஐந்தாண்டு காலமும், மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியும் தேவைப்பட்டது.

ஆனால், பாமக.வுக்குப் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக.வை தொடங்கிய கேப்டன் விஜயகாந்த், தனித்துப் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 27 லட்சத்து 64 ஆயிரத்து 233 வாக்குகளைப் பெற்று பாமக.வைப் போல முதல்முறையாக தனிமனிதராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.

தென் மாவட்டங்களுக்கு இணையாகவே, வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் தேமுதிக.வுக்கு அதிகளவிலான வாக்குகள் கிடைத்தன. வடமாவட்டங்களில் சாதி உணர்வு தாண்டவமாடிய காலத்திலேயே, வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றிப் பெற்றதை டாக்டர் ராமதாஸால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரின் சதிவேலைகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு திமுக, அதிமுக.வுக்கு மாற்றுச் சக்தி தேமுதிக தான் என்பதை நிலைநிறுத்திய விஜயகாந்தின் விஸ்வரூபத்தை பார்த்து பயந்து போனார் டாக்டர் ராமதாஸ்.

விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு வரை, அதிமுக, திமுக.வுக்கு மாற்று சக்தி கொண்ட மாநில கட்சி பாமக. என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார் டாக்டர் ராமதாஸ். அவரின் மிரட்டல் அரசியலுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் போல அடுத்தடுத்த தேர்தல்களில் விஸ்வரூபம் எடுத்த விஜயகாந்த்தை கண்டு மிரண்டு போன டாக்டர் ராமதாஸ், விஜயகாந்திற்கு கிடைத்து வரும் அபரிதமான செல்வாக்கு, தனக்கும்,தனது மகனான டாக்டர் அன்புமணியின் எதிர்கால அரசியல் முன்னேற்றத்திற்கும் சமாதி கட்டிவிடும் என்ற பயந்துபோனார்.

அதே காலகட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும், ராமதாஸுக்கு எதிரான அரசியல் நிலையை எடுக்க முனைப்பு காட்டியதால், இருபக்க எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் திணறினார் டாக்டர் ராமதாஸ். அதனால், விஜயகாந்த் அரசியல் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்தார். ஆனால், மக்களுடன்தான் கூட்டணி என்று சொல்லி வந்த விஜயகாந்த், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு, 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றார். ஆனால், அதே நாடாளுமன்றத் தேர்தலில் 3 வது அணியில் போட்டியிட்ட ராமதாஸ், 19 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.

வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உளள சாதி பின்னணியை முழுபலமாக வைத்து அரசியலை நடத்தி வந்த ராமதாஸை விட, எந்த சாதியின் பின்பலமும் இல்லாத விஜயகாந்த், பாமக.வைவிட ஒரு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்றார். ராமதாஸின் நினைப்புக்கு மீறி, அரசியலில் உச்சத்தை தொட்டார் விஜயகாந்த், 2011ல் அதிமுக.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார்.தனது மகனுக்கு கிடைக்காத எதிர்க்கட்சித் தலைவர் பதவி, விஜயகாந்துக்கு கிடைத்துவிட்டதே என புலம்பி தள்ளினார்.

இப்படி, விஜயகாந்துக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் மனதில் பகையுணர்வு ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக.வுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்த நேரத்தில்தான், பாமக.வின் உண்மையான பகையுணர்வு பட்டுவர்த்தனமாக வெளிப்பட்டது. அன்றைய தேர்தலில் பாமக. வெற்றிக்காக உயிரைக் கொடுத்து உழைத்தார்கள் தேமுதிக தொண்டர்கள். ஆனால், விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிட்ட சேலம் தொகுதிகளில், பாமக.வைச் சேர்ந்த வன்னிய நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக சுதீஷைப் புறக்கணித்துவிட்டு, அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு வெளிப்படையாகவே வாக்கு திரட்டினர்.

அன்றைய நிலையில், தங்களின் முதுகில் பாமக குத்திவிட்டதாக பொங்கினார் விஜயகாந்த். 10 ஆண்டுகளுக்குப் பிறகும் தேமுதிக.மீதான பகையுணர்வை பா.ம.க. கைவிடாததால், விடுதலைச் சிறுத்தைகளைப் போல, பாமக இடம் பெறும் அணியில் பங்கேற்க மாட்டோம் என்ற கொக்கை முடிவை எடுத்தார் விஜயகாந்த். அந்த முடிவை 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும் அமல்படுத்தினார் கேப்டன் விஜயகாந்த். அப்போதைய தேர்தலில்தான், தேமுதிக.வின் செல்வாக்கு சரிபாதியளவுக்கு மேல் சரிந்துவிட்டது என்பதை விஜயகாந்த் உணர்ந்து, அதிர்ச்சியடைந்தார். அந்த தோல்வி ஏற்படுத்திய பாதிப்புதான், விஜயகாந்த் இன்றைக்கு உடல்நலிவுற்று இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

ஆனால், அதே தேர்தலில் அன்புமணியை முன்னிறுத்தி சட்டமன்றத் தேர்தலை தனித்து எதிர்ககொண்ட பாமக. 23 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, தேமுதிக.வை பின்னுக்குத் தள்ளியது. அன்றைய தேர்தலிலேயே தேமுதிக.வை பழிவாங்கிவிட்டதாக ராமதாஸ் சந்தோஷப்பட்டுக் கொண்டாலும், தேமுதிக. மீதான பழைய பகையை அப்போதும் அவர் மறக்க வில்லை.

தமிழக அரசியலில் விஜயகாந்த் செல்வாக்கை முழுமையாக இழந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொள்ளும் விதமான 2019 நாடாளுமன்றத் தேர்தலை டாக்டர் ராமதாஸ் பயன்படுத்திக் கொண்டார். அப்போது அதிமுக கூட்டணியில் பாமக இணைந்த போதும் வேறு வழியின்றி, தேமுதிக.வும் இணைந்தது. பாமக.வுக்கு 7 தொகுதிகளும், தேமுதிக.வுக்கு 4 தொகுதிகளும் வழங்கியது அதிமுக. தலைமை.

இன்றைக்கு எப்படி தேமுதிக.வை அதிமுக தலைமை நடத்தியதோ அதற்கு சற்றும் குறையில்லாமல்தான் தேமுதிக.வை திணற வைத்தது. அப்போது ஏற்பட்ட கூட்டணியின் போது நலம் விசாரிப்பதற்காக கேப்டன் வீடு தேடி வந்தார் ராமதாஸ். பழைய எழுச்சியுடன் செயல்பட முடியாத நிலையில் இருந்த விஜயகாந்த்தைப் பார்த்த பிறகாவது, ராமதாஸ் மனம் மாறியிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அந்தளவுக்கு பெருந்தன்மை கிடையாது. அப்போதும் தேமுதிக அழிய வேண்டும் என்ற நினைப்போடுதான் பாமக.வினர் செயல்பட்டனர். கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், தேமுதிக மக்களின் செல்வாக்கை இழந்து, 10 லட்சம் வாக்குகளுக்குள் சுருங்கிவிட்டது.

2021 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே தொடக்கம் முதல் செயல்பட்ட ராமதாஸ், தனது சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை சகுனியாக செயல்பட வைத்து, தேமுதிக.வுக்கு உரிய பங்களிப்பு கிடைக்காமல் செய்துவிட்டார். 20 தொகுதிகள் வரை தருவதற்கு தயாராக இருந்த முதல்வர் இ.பி.எஸ்.ஸும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும், கே.பி.முனசாமியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு 12 தொகுதிகளுக்கு மேல் தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி அவமானபடுத்திவிட்டார்கள். அதன் வெளிப்பாடுதான், எல்.கே.சுதீஷின் சீற்றம்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக.வை கழற்றிவிடப் போகிறார்கள் என்பது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு நன்றாக தெரியும். அதனால்தான், கடந்த 5 ஆம் தேதி பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், திட்டமிட்டே தேமுதிக.வின் முரசு சின்னத்தை அச்சடிக்காமல் எங்களை அவமானப்படுத்தி விட்டார் டாக்டர் ராமதாஸ். விஜயகாந்தின் மீதான பகையை 15 ஆண்டு காலம் மறக்காமல், அவர் முடங்கியிருக்கும் சமயத்தில் வஞ்சம் தீர்த்துக் கொண்ட டாக்டர் ராமதாஸை, தேமுதிக தொண்டர்கள் ஒருவர் கூட மன்னிக்க மாட்டார்கள்.

234 தொகுதிகளிலும் குறைந்த பட்சம் 5000 ஓட்டுகள் தேமுதிக.வுக்கு உண்டு. அதிமுக.வுக்கு இந்த தேர்தல் வாழ்வா, சாவா போராட்டம். அதனால், 234 தொகுதிகளிலும் அதிமுக.வுக்கு எதிராக பிரேமலதா தீவிரம் பிரசாரம் மேற்கொண்டு அதிமுக.வை மட்டுமல்ல, பாமக.வையும் பழிவாங்குவார். ஒரு இடங்களில் கூட பாமக வெற்றிப் பெற்று விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று ஒரே மூச்சாக பொங்கினார், அந்த தேமுதிக மூத்த நிர்வாகி.