தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலம் பாதிக்கப்பட்டு, துடிப்பாக செயல்படாத நிலை ஏற்பட்ட நாளில் இருந்து, அந்தக் கட்சிக்கு ஏழரைச் சனி, அஷ்டம சனி பிடித்த மாதிரி ஆகிவிட்டது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி என மூன்று தேர்தல்களிலும், தன் கட்சியின் உண்மையான பலத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல், புலம்பி, புலம்பியே தேமுதிக.வுக்கு என்று இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் கெடுத்துக் கொண்டார்கள், விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், அவரது சகோதரரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷும். இதைப் பற்றி ஏற்கெனவே இரண்டு கட்டுரைகளில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறோம்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி கடந்த மூன்றுத் தேர்தல்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது அந்த கட்சிக்கு இவ்வளவு சீட் கொடுக்கிறீங்க.. எங்களுக்கு மட்டும் குறைச்சி கொடுக்கிறீங்கன்னு பிரேமலதாவும், எல்.கே.சுதிஷும் கரித்துக் கொட்டியதைக் பார்த்து, அவர்களது கட்சியின் முன்னணி நிர்வாகிகளே, வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்பவர்கள், கேட்பதைப் போல பக்கத்து வீட்டில பிரியாணி போட்டாங்க, நீங்க என்னம்மா பழையச் சோறு போடுறீங்க என்ற அளவுக்கு, கூட்டணி தர்மமோ, அரசியல் நாகரிகமோ துளியும் இன்றி பேசி வருகிறார்களே, அக்காவுக்கும், தம்பிக்கும் வெட்கமே இருக்காதா என்று ஆவேசப்படுகிறார்கள், தேமுதிக.வில் இரண்டாம் கட்ட தலைவர்கள்.
2016 சட்டமன்றத் தேர்தலில் இருந்தே தேமுதிக.வுக்கு சரிவுதான். ஏதோ கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் கட்சியையே காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. இப்படிபட்ட நிலையிலும், கூட்டணிக்காக, தொகுதிக்காக நாங்கள் அதிமுக.விடம் கெஞ்சவில்லை. அதிமுகதான் கெஞ்சிக் கொண்டிருக்கிறது என்று வீராப்பு காட்டுகிறார் எல்.கே.சுதீஷ். இப்படி, தொகுதி உடன்பாட்டிற்கு முன்பு அரசியல் நாகரிகமின்றி பேசினால், தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் தேமுதிக. வெற்றிக்கு உழைப்பார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள், மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள்.
தொகுதி பங்கீடு விஷயத்திலோ, ஒதுக்கப்படும் தொகுதிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளிலோ, எல்.கே. சுதீஷை அனுப்பாமல், அந்த கட்சியின் முன்னணி தலைவர்களாக உள்ள சேலம் அழகாபுரம் மோகன்ராஜ், அனகை முருகேசன்ஆகியோரை மட்டுமே அனுப்பி வைத்தாலே, அவர்கள் இருவரும் சாதூர்யமாக பேசி, அதிமுக நிர்வாகிகளை கூல் செய்துவிடுவார்கள். அதன் மூலம், தேமுதிக.வின் எதிர்பார்ப்பும் 100 சதவிகிதம் பூர்த்தியாகிவிடும்.
நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 3 ல் இருந்து 5 சதவிகிதத்திற்குள்ளாக உள்ள தேமுதிக.வுக்கு 15 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட் என்பதும் அதிகபட்சமானதுதான். இரண்டொருநாளில் அதிமுக.வுடன் தேமுதிக கையெழுத்திட்டுவிடும் என்கிறார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்கள்.
பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் அதிமுக.வுடன் சண்டைபோடாமல், சத்தம் இல்லாமல் உடன்பாட்டில் கையெழுத்துபோட்டு விட்டுதேர்தல் பணிகளை முன்னெடுப்பதுதான் பிரேமலதாவுக்கும் எல்.கே.சுதிஷுக்கும், அவர்கள் எதிர்பார்க்கிற பலன்கள் கிடைக்கும்.
மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் அதிமுகவுடன் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் இணக்கமாகதான் இருக்கிறார்கள். அதை இருவரும்கெடுக்காமல் இருந்தால் கோடி புண்ணியமாக இருக்கும் என்கிறார்கள், கடந்த 5 ஆண்டுகளாக லட்சக்கணக்கில் பணம் செலவழித்துவிட்டு கடன்காரர்களாக இருக்கும் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள்.
தேனை நீங்களே முழுசா சுவைக்க ஆசைப்படாதீங்க பிரேமலதா, எல்.கே.சுதீஷ் என்று தொண்டர்கள் போடும் சத்தம், காதில் விழுந்தால் சரி…