Sat. Nov 23rd, 2024

விடியலுக்கு முன்பாக கைபேசி ஒலி எழுப்பியிது. கதிரவனின் கதிர்கள் கூட முளைக்காத நேரத்தில் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தததால் எடுத்தேன். நல்லரசு தமிழ் செய்திகள் தோழரா என்று கரகரப்பு குரல் விசாரித்தது. சொல்லுங்கள் என்றேன். தூக்க கலக்கத்தில் இருப்பீர்கள் போல, பிறகு அழைக்கிறேன் எனக் கூறி இணைப்புக் துண்டிக்க துடித்தது மறுபக்க குரல். இல்லை.இல்லை எழுந்துவிட்டேன். என்ன விஷயம் சொல்லுங்கள் என்றேன். வாட்ஸ் அப் குழுவில் பகிரப்படும் நல்லரசு தமிழ் செய்திகள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக இருந்தாலும், எங்கள் தலைவர் வைகோவைப் பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்து கோபம்தான் வந்தது. அதற்கு பிரயாத்சித்தம் தேடுவதைப் போல, திருமண விழாவில் பொதுச் செயலாளர் பேசிய வாழ்த்துரையை பதிவு செய்து இருந்தீர்கள்.

அதற்கு முன்பாக ராகுலைப் பற்றியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றியும் பதிவு போட்டிருந்தீர்கள். இந்த இரண்டையும் படிக்க நேர்ந்ததால், கைபேசி மூலம் உங்களிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதனால் அழைத்தேன் என்றது மறுபக்க குரல். உங்கள் அன்பிற்கு நன்றி, அழைத்ததற்கான காரணத்தை சொல்லுங்கள் என்றேன். சிறிய சிரிப்புடன், சொல்லலாமா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில்தான் இருந்தேன். இருந்தாலும் உங்கள் பேச்சு கனிவாக இருப்பதால், நினைத்ததை கூறுகிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எவ்வளவு ஆளுமைமிக்க தலைவர். இப்போது தமிழகத்தில் இருக்கிற அரசியல் தலைவர்களிலேயே, கம்யூனிஸ்ட் தலைவர்களை தவிர்த்து, மிஞ்சியவர்களிடையே நேர்மையான தலைவர் ஒருவர் என்று தேட ஆரம்பித்தால் வைகோவை முதல் மனிதராக அடையாளம் காட்ட முடியும். நாடாளுமன்றவாதியாக அவர் இருந்த போது, இரு அவைகளிலும் அவர் ஆற்றிய உரையை, படிக்க வாய்ப்பு கிடைத்தால், எவ்வளவு உணர்வுப்பூர்வமான மனிதரை தமிழகம் பெற்றிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று வைகோ புராணம் பாடினார்.

நான் குறுக்கிட்டு, அதெல்லாம் தெரிந்தததுதானே, சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லுங்கள் என்றேன்.சரி தோழர். ஒன்றும் இல்லை, நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். திமுக கூட்டணியில், காங்கிரஸுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் வேண்டுமானால் இழுபறி இருக்கலாம். ஆனால், மதிமுக.வுக்கு தொகுதிகளை உடனடியாக ஒதுக்குவதற்கு என்ன கஷ்டம் இருக்கப் போகிறது? மதிமுக.வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை எங்கள் தலைவரே, கடந்த வாரத்தில் சூசகமாக குறிப்பிட்டு விட்டார். எப்படியும் எட்டு தொகுதிகளுக்குள்தான் கொடுப்பார்கள்.

இந்த முறை தொகுதி பங்கீட்டின் போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடிப்படையாக ஒரு எம்.பி. தொகுதிக்கு 3 எம்.எல்.ஏ. சீட் என்று பேசி, தொகுதிகள் ஒதுக்குகிறார்கள். அந்த அடிப்படையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஒரு மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் மதிமுக.வுக்கு வழங்கப்பட்டது. அதன்படி, மதிமுக.வுக்கு 6 தொகுதிகள் கொடுக்கலாம். மிஞ்சிப் போனால் ஒன்றிரண்டு கூட்டி அதிகபட்சமாக 8 தொகுதிகள் கொடுக்கலாம்.

இதைக்கூட உடனடியாக கொடுக்காமல், பேச்சுவார்த்தை என்று ஏன் இழுத்தடிக்க வேண்டும். நேற்றைய தினம், தி.மு.க.தேர்தல் குழுவோடு, மதிமுக நடத்திய பேச்சுவார்த்தை வெளியே சுமூகமாக இருந்ததாக சொல்லப்பட்டாலும், கசப்பான கருத்துகள் தான் முன்வைக்கப்பட்டுள்ளன. பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி, எதையும் தாங்கும் இதயம் கொண்டவராகதான் மாறிவிட்டார் எங்கள் தலைவர் வைகோ. எப்படிபட்டஆளுமை அவர்.அவர் மனது நோகும்படி நடந்து கொள்ளலாமா? 1994 காலகட்டத்தில் சிங்கம் போல பிடறிக் கொண்டுதெரிந்தவர். ஏதோ ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் சொல்வாரே, எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பதைப் போல, இன்றைய அரசியலில் வைகோவுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை பார்த்து நொந்து போயிருக்கிறோம் என்றார் தழதழத்த குரலில். மறுபக்கம் அமைதி.

ஒருசில நிமிடங்கள் அமைதியாக கைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிய இருமலுடன் மீண்டும் அவரே பேசினார். திருமண விழாவில் ஒருபோதும் அரசியல் பேசாத நாணயமான மனிதர் அவர். அரசியல் களத்தில் மட்டும் அரசியலை பேசும் பண்பாட்டைக் கொண்ட அவரை, தமிழகம் கொண்டாட வேண்டாமா? நேற்று கட்சி ஆரம்பித்தவன் கூட வருங்கால முதல் அமைச்சரே என்று போஸ்டர் அடிக்கிறான். பத்திரிகை, டி.வி. ஊடகங்களில் விளம்பரம் கொடுக்கிறான்.

எந்தகாலத்திலும் அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொள்ளாமல், வைகோவிற்காக, மதிமுக.வில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். உள்ளூரில் ஒருவன் கூட மதிக்க மாட்டேன் என்கிறான். காவல் நிலையத்திற்கோ, அரசு அலுவலகங்களுக்கோ சென்று மதிமுக நிர்வாகி என்று கூறினால், கொஞ்சம் ஓரமாக நில்லுங்கள் என்கிறான். இல்லையென்றால் வெளியே நில்லுங்கள், கூப்பிடுகிறேன் என்கிறான். வெளியே சொல்ல முடியாத அவமானங்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருந்தாலும் கூட, வைகோவிற்காக மட்டுமே மதிமுக கட்சிக்காரனாக, அக்கட்சியிலேயே தொடர்ந்து நீடிப்பதையே பெருமையாக நினைத்துக கொண்டிருக்கிறோம்.

ஆனால், இன்றைக்கு அரசியல் பயணத்தில் வைகோவுக்கு அதிர்ஷ்டம் கை கூடி வராததால், நாம் தமிழர் சீமான் உள்பட குட்டி, குட்டி அரசியல்வாதிகள் எல்லாம் கைவோவை சீண்டுகிறார்கள். உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
தி.மு.க.வில் அல்லது திராவிட இயக்கத்தில் இருக்கிற தலைவர்கள் ஒருத்தராவது நல்லா இருக்கனும்னு எந்த பிரமாணர்களாவது நினைத்து பார்த்தது உண்டா., இல்லை அவர்கள் அரசியலில் அடுத்தடுத்த உயரத்தை தொட வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள் என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா

ஆனால், எங்கள் தலைவர் வைகோ,அரசியலில் உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிற, ராமருக்கு உதவிய அனில் போல, வைகோவின் வளர்ச்சிக்கு உதவுகிற குணம் படைத்த பிராமணர்கள் நிறைய பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள். அதுவும் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ, எங்கள் தலைவர் வைகோ அரசியலில் உச்சத்தை தொட வேண்டும் என்று நினைத்தவர், அதற்காக செயல்பட்டவர் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தாலும், எவ்வளவு பேருக்கு அது தெரியும்.

சோவே பாராட்டுகிற அளவுக்கு அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக இருக்கிறவர் வைகோ என்று கூறிய மறுபக்க குரல், தோழர், காலையில் உங்கள் நேரத்தை வீணடிக்கிறேனோ என்றார். இல்லை, இல்லை. உங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கிறீர்கள். இதில் எனக்கு என்ன செய்தி இருக்கப் போகிறது என்று யோசிக்கிறேன் என்றேன். . என்ன தோழர், இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. எவ்வளவு கேச்சிங்கான டைட்டில் சொல்லியிருக்கிறேன். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று போட்டு, ஒவ்வொரு தேர்தலின்போதும் வைகோ எப்படி சறுக்கினார் என்பதை விலாவாரியாக எழுதலாமே என்றார்.

ஏங்க, நீங்க என்ன காலையில, காமெடி பண்றீங்களா என்று குரலை உயர்த்தினோம். கோபப்படாதீங்க தோழர், இன்னைக்கு எம்.எல்.ஏ. ஆகனும், எம்.பி. ஆகனும், மந்திரி நினைப்போட பல பேர் புதிதுபுதிதாக கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வைகோவின் வரலாறும் தெரியமாட்டேன் என்கிறது. தியாகமும புரிய மாட்டேன் என்கிறது. அதனால, ஒவ்வொரு தேர்தலின்போதும், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல், தமிழகக்த்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தாங்கிக் கொண்ட அவமானங்கள், வலிகள் எல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும் தோழர் என்றார் மறுபக்கம் பேசிய மதிமுக நிர்வாகி.

சரி, அவருக்கு என்ன நேர்ந்தது கடந்த கால தேர்தல்களில் என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று காது கொடுத்தேன். 1994 ல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவர் சந்தித்த தேர்தல்களில் ஏற்பட்ட சோதனை, வேதனைகளை எல்லாம் சொல்லலாம் வரிசையாக.அதை கேட்க உங்களுக்கு நேரம் இருக்காது. அதனால், இதற்கு முன்பு நடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களை மட்டுமே உங்கள் கவனத்திற்க கொண்டு வருகிறேன்.

2016 ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்து மதிமுக தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலுக்கு முன்பாக வரை, திராவிட தலைவர்களில் நேர்மையான ஒருவர் என்றால், அவர் வைகோதான், அவரை முதல் அமைச்சர் வேட்பாளராக நான் பார்க்கிறேன் என்று தமிழருவி மணியன், மேடைதோறும் பேசி வந்தார். ஆனால், 2016ல் விஜயகாந்த்தை முதல்வராக்குவோம் என்று வலிய போய் சொன்னவர் வைகோ. அவரின் பெருந்தன்மையை பாராட்டாமல், ஜெயலலிதாவிடம் இருந்து பெட்டி வாங்கிவிட்டார். திமுக ஆட்சி வராமல் தடுக்கவே, மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்றை ஆரம்பித்துவிட்டார் என வைகோவை வசை பாடினார்கள் சண்டாளர்கள்.

ஆனால், உண்மையில் , அதிமுக.வும் வேண்டாம். திமுக.வும் வேண்டாம் என்று நினைத்துதானே விஜயகாந்த்தை முதல்வராக்குவோம் என்று கூறினார் வைகோ. இன்றைக்கும் ரஜினி கட்சி தொடங்கி முதல்வர் ஆனால், நாடு நல்லா இருக்கும். திராவிட கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கி விடலாம் என்றுதானே ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறதே.. ஆனால், அன்றைக்கு மாற்று அரசியலை முன்னெடுத்த வைகோவை பார்த்து, பெட்டி வாங்கிடடார் என்ற அவப்பெயரை சுமத்தியது இந்த தமிழகம்.

சரி, 2016 ஐ விட்டுத் தள்ளுங்கள். 2011 சட்டமன்றத் தேர்தலில் என்ன நடந்தது. அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த், தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் ஒருசேர கரித்துக் கொட்டினார். ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக.வை வலிந்து போய் கூட்டணியில் சேர்ந்து கொண்டது அதிமுக. அந்த தேர்தலின்போது திரைமறைவில் என்ன நடந்தது, எந்த துக்ளக் ஆசிரியர் சோ, 1996 ல் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதி, தி.மு.க. த.மா.கா. வை இணைத்து கூட்டணியாக்கி,அதற்கு நடிகர் ரஜினியையும், ஆதரவாக குரல் கொடுக்க வைத்தாரோ, அதே சோ, 2011 தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்று கருதி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இரவு பகலாக பாடுபட்டார்.
அன்றைய தினம், அதிமுக – தேமுதிக கூட்டணியில் மதிமுக.வும் இடம் பெற்றிருக்க வேண்டும். 2006 முதல் 2011 வரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இலவசமாக சேவையாற்றிய, அவரின் கொள்கை பரபபுச் செயலாளராகவே மாறி ஊரெல்லாம் சொந்த காசில் சுற்றி சுற்றி வந்து ஜெயலலிதாவை முதல் அமைச்சராக்குவேன் என்று கூக்குரலிட்ட வைகோ, அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதுதான் நல்லது. அதுவும் பிரச்னைகளின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்கிற, தன்னலம் பாராத வைகோ, வெற்றிக் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என நினைத்தவர் சோ.

ஆனால், அன்றைக்கு என்ன நடந்தது. வைகோவின் வீடு தேடி வந்து பேசிய அப்போதைய அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர், முதலில் 12 சீட்டோ, 15 சீடடோ தருவதாக கூறினார்கள். ஆனால்,அதற்கடுத்த சில நாட்கள் கழித்து வந்து, இல்லை, இல்லை அன்று தவறுதலாக சொல்லிவிட்டோம். மதிமுக.வுக்கு ஏழு சீட்தான் என்று அம்மா சொல்ல சொன்னார் என்று கூறிவிட்டு இரண்டு அமைச்சர்களும் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டனர்.

தலையில் இடி விழுந்த மாதிரி நொறுங்கிப் போன வைகோவை, என் வாழ்க்கையில் எப்போதுமே பார்க்க கூடாது என்றுதான் கடவுள் பக்தி இல்லையென்றாலும்கூட இன்றைக்கும் வேண்டி கொண்டிருக்கிறேன். செல்வி ஜெயலலிதா தன்னை இப்படி அவமானப்படுத்தி விட்டாரே என நொந்துப் போன வைகோ, அதன் பிறகு சமாதானம் பேசும் நோக்கில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் உள்ளிடட அதிமுக முன்னணி நிர்வாகிகள் கைபேசியில் அழைத்த போதும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்பதில் தீர்க்கமாக இருந்தார், வைகோ. அவரது மாமனார் மூலம் கூட அதிமுக மேலிடம் சமரசம் பேசியது. எங்கள் தலைவர் ரோஷக்காரர் அல்லவா. எல்லோரையும் விரட்டியடித்தார்.

அந்தநேரத்தில்தான், சோ சாரின் தூதுவர்களாக துக்ளக் இதழின் தலைமை நிருபர் ரமேஷ், வைகோவை சமாதானப்படுத்தி பொறுமையாக இருங்கள். உங்களுக்கு 12 தொகுதிகள் வரையாவது பெற்றுத்தர சோ சார் முயற்சிப்பாக கூறியிருக்கிறார் என்று தகவல் தெரிவித்திருக்கிறார். ஆனால், 18 தொகுதிகளுக்கு ஒரு சீட் குறைவு என்றால்கூட, இந்த வைகோ, கூட்டணியில் சேர சம்மதிக்க மாட்டான் என வீராவேசமாக குரல் எழுப்பினார்.

வைகோ மீது இருந்த பாசத்தின் காரணமாக, ரமேஷ், மற்றொரு மூத்த பத்திரிகையாளரான மை.பா.நாராயணன் என்பவர் மூலம் வைகோவின் கோபத்தை குறைக்க முயன்றனர். இதெல்லாம் துக்ளக் ஆசிரியர் சோவின் விருப்பத்தின் பேரிலேயே நடந்தது.

திராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழித்தது என்று தன் வாழ்நாள் முழுவதும் சொல்லி வந்த சோதான், வைகோவுக்கு அரசியலில் ஏற்றம் கிடைக்க வேண்டும் என துடித்திருக்கிறார். ஆனால், அன்றைக்கு யாருடைய சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளாமல், அந்த தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று கூறியவர்தான், எங்கள் மானமிகு தலைவர் வைகோ என்றார் அந்த நிர்வாகி.

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக கூட இருக்கலாம். ஆனால், நிறைவாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டேன். அன்றைக்கு எந்த 8 தொகுதிகளை வேண்டாம் என்று சொல்லி வீம்பு காட்டினாரோ வைகோ, அதே அளவுக்கான தொகுதிகளை இல்லை, ஒன்றிரண்டு குறையலாம். 6 அல்லது 7 தொகுதிகளை இன்றைக்கு தி.மு.க ஒதுக்கப் போகிறது. அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள போகிறார் வைகோ என்றார்.

என்னங்க பேசுறீங்க.. வைகோவை, மதிமுக.வை குறைந்து மதிப்பிடுகிறார்கள் என்று நினைதது கோபப்படுகிறீர்களா, அல்லது உங்கள் தலைவரையே கிண்டலடிக்கிறீர்களா நீங்கள் என்று கேட்டேன். சார் அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைக்கு குறைவான தொகுதிகளை வாங்கிக் கொள்கிற பக்குவத்திற்கு வந்திருக்கிற வைகோ, 2011ல் அதிமுக கொடுத்த 8 தொகுதிகளை வாங்கியிருந்தால், மதிமுக.வைச் சேர்ந்த 8 பேர் எம்.எல்.ஏ.வாகி சட்டப்பேரவைக்குள் சென்றிருப்பார்கள். அடுத்த தேர்தலில் அது 16 ஆக அதிகரித்து இருக்கும். இப்போது 32 பேராக சட்டப்பேரவைக்குள் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். மதிமுக.வும் வளர்ந்திருக்கும்.

ஆனால், எங்கள் தலைவர் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்படாதவர். அவருக்கு தன்மானமும், சுயமரியாதையும்தான் முக்கியம். வைகோவால் சாதிக்க முடியாததை, வரும்காலத்தில் அவரது மகன் துரை வையாபுரியை வைத்து சாதித்து கொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, ஒவ்வொரு மதிமுக தொண்டரிடமும் உள்ளது. ஒருநாள், இல்லை, இல்லை, துரை வையாபுரி தமிழகத்தின் முதல் அமைச்சராவது காலத்தின் கட்டாயம். இதை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, இணைப்பை அவசரமாக துண்டித்தார் மறுபக்கத்தில் பேசிய மதிமுக நிர்வாகி. அய்யா, அய்யா என்று குரல் கொடுத்தபோதும், கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
என்னத்தைச் சொல்ல… காலையிலேயே இந்த வேதனை நமக்கு தேவையா.. ஒன்றுமே புரியவில்லை. இருவருக்குமான உரையாடலை அப்படியே எழுத்தாக்கிவிட்டேன். அவர் என்ன சொல்ல வந்தார் என்பது உங்களுக்காவது புரிந்தால் சரி…