Sat. Nov 23rd, 2024

சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடு பறக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் நீடிக்கும், யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்ற விவாதம் ஒருபக்கம் அனல் பரப்பிக் கொண்டிருக்க, அ.தி.மு.க. விற்குள்ளாக, சசிகலா, அ.ம.மு.க. இணைப்பு சாத்தியமா, ஓ.பன்னீர்செல்வம் ஏன் இவ்வளவு மௌனமாக இருக்கிறார், பா.ஜ.க தலைவர்களும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வலியுறுத்திய பிறகும், சசிகலாவையும், அ.ம.மு.க.வையும் ஏன் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி அடாவடி செய்கிறார் என்ற பேச்சுதான் கடந்த பல நாட்களாக அதிமுக.விற்குள்ளும், பொது தளங்களிலும் மிகவும் சூடான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது

ஆனால், அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்களை தெரிந்தவர்கள், நாள்தோறும் கண்காணித்துக் கொண்டு வருபவர்கள், தனிப் பெரும் தலைவராக விஸ்வரூபம் காட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டு மிரண்டு போய்தான் இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம். அதிமுக.விற்குள்ளே, சசிகலாவுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பவர் என்று தென்மாவட்ட அதிமுக.வினர் பெரும்பான்மையானோர் நம்பிக் கொண்டிருக்கும் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், சப்த நாடியும் அடங்கியிருப்பதன் மர்மம் தெரியாமல், அவரது விசுவாசிகளே திகிலடித்துக் கிடக்கிறார்கள்.

அதிமுக உட்கட்சிக்குள்ளே நடக்கும் விவாதமாக இருந்தாலும், கூட்டணிக் கட்சியான, அதுவும் பெரியண்ணன் ஸ்தானத்தில் உள்ள பாஜக.வின் மேலிட கட்டளையும் மீறுகிற தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி வந்தது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, மன்னார்குடி கும்பலும் ஆவேசமாக குரல் எழுப்பி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள், அவர்களோடு ஒன்றி உறவாடும் சமுதாய மக்கள்

உண்மையில், அ.தி-மு.க.விற்குள் என்னதான் நடக்கிறது என்று நமக்கு அறிமுகமான கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். மிகுந்த தயக்கத்துடன் அவர், முதல்வர் இ.பி.எஸ்.ஸின் புதிய அவதாரத்தின் பின்னணியை விவரித்தார்.

பாஜக மேலிடமே சொல்லிவிட்டது., அதிமுக.வுடன் அ.ம.மு.க.வை இணைத்தால்தான் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை இருப்பதால், அதிமுக.வில் சசிகலாவை சேர்ப்பதுடன், அ.ம.மு.க.வையும் இணைக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளே பேசுகிறார்கள்.

அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் நாள்தோறும் இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி விவாதித்தக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்தும் டென்ஷன் ஆகாமல் முதல்வர் எடப்பாடியார் கூலாக இருக்கிறார் என்றால், பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், அவர் எந்தளவுக்கு கன்வீயன்ஸ் செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

பாஜக.வை கண்டு பயந்து, அவர்கள் கேட்கிற தொகுதிகளை தூக்கி கொடுத்திடுவார் எடப்பாடியார் என்றும் ஒரு பேச்சு வெளியுலகில் பரவிக் கிடக்கிறது. உண்மை என்ன தெரியுமா, எடப்பாடி பழனிசாமியை கண்டுதான் பாஜக பயந்து இருக்கிறது. உள்துறை அமித்ஷா சென்னை வருவதற்கு முன்பாக, பா.ஜ.க. நிர்வாகிகள், தொகுதி பங்கீடு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு தனித்தனியாக சந்தித்து பேசிய நாளை நினைவுக் கூர்ந்து பாருங்கள்

தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், மேலிட பொறுப்பாளர் ரவி ஆகியாருடன் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி ஆகியோர் அடங்கிய குழு, தொகுதி பங்கீடு தொடர்பாக, முதல்வருடனும், துணை முதல்வருடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. பாஜக.வை கண்டு எடப்பாடியார் பயப்படுகிறார் என்று சொன்னால், மத்திய இணை அமைச்சர் தலைமையிலான குழுவை, முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து பொதுவான இடத்தில் வைத்துதானே பேசியிருப்பார்கள். முதல்வர் வீட்டுக்கும், துணை முதல்வர் வீட்டுக்கும் பாஜக. குழுவை அலைய விட்டிருப்பார்களா. ஆக மொத்தத்தில், பாஜக.வை கண்டெல்லாம் எடப்பாடியார் பயப்படவில்லை

கடந்த நான்காண்டுகளில் தனது தலைமையிலான அரசு செய்த திட்டங்களுக்கு, மாநிலம் முழுவதும் அமோக வரவேற்பு இருப்பதை துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், தொகுதி பங்கீடாக இருந்தாலும் சரி, சசிகலா, அமமுக விவகாரமாக இருந்தாலும் சரி, தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நள்ளிரவு சந்தித்து இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தொகுதி பங்கீடு தொடர்பாகவும், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைப்பது தொடர்பாக மட்டுமே ஆலோசனை நடத்தியுள்ளனர்

அந்த சந்திப்பின்போது கூட, முதல்வர் பழனிசாமியிடம் எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தாத அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து மட்டும் சில வார்த்தைகளை கடுமையாக சொல்லியிருக்கிறார். பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். நான் தொடங்கி விட்டேன். எதிர்க்கட்சியினர் தொடங்கி விட்டார்கள். முதல்வரும் ஊர், ஊராக போகிறார். நீங்கள் ஏன் இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை என்று அமித்ஷா, ஓ.பி.எஸ்.ஸைப் பார்த்து கேட்டிருக்கிறார். இதுபோன்ற சின்னசின்ன விஷயங்களில்தான் அமித்ஷா தனது அதிருப்தியை தெரிவித்தாரே தவிர, ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருவதைப் போல, சசிகலாவை அதிமுக.வில் சேர்ப்பதோ, அமமுக.வை இணைப்பது பற்றியோ, பாஜக.வுக்கு இவ்வளவு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனறோ, அமித்ஷா ஒருவார்த்தைக் கூட சொல்லவில்லை/

அப்படியே சொல்லியிருந்தாலும், அதை உடனடியாக நிறைவேற்றும் இடத்தில்தான் இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் இருக்கிறாகள். ஆனால், தொகுதி பங்கீடு விவகாரத்தில் தொடை நடுங்கியாக இ.பி.எஸ். இல்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பாமக.வை 23 தொகுதிக்குள் அடக்க முடியுமா.. ஆனால், அதை சாதித்துக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாமக.வுக்கு தொகுதி பங்கீடு செய்து கொடுத்த போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு தெரிவிக்கிறேன். அப்போது தெரியும், எடப்பாடி பழனிசாமி எவ்வளவு சக்திமிக்க மனிதராக உயர்ந்து நிற்கிறார் என்று…..

எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில்தான் பாமக.வுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பாக, ஜிகே மணி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் எடப்பாடியார், ஓ.பி.எஸ். ஆகியோர் மட்டும் தனியாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அங்கு பத்திரிகையாளர் சந்திக்கும் இடத்தில்தான் மற்ற அமைச்சர்களுக்கே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நான்கு பேரும் ஆலோசனை நடத்திய நேரத்தில், பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நால்வர் மட்டுமே இருந்த அறையில், ஓ.பி. எஸ்.ஸைப் பார்த்து, அண்ணே சில நிமிடங்கள் அறைக்கு வெளியே இருங்கள். ஜிகே மணியிடமும், டாக்டர் அன்புமணியிடமும் நான் தனியாக சில விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது என்று எடப்பாடியார் கூறியுள்ளார். அதை சற்றும் எதிர்பார்க்காத ஓ.பி.எஸ், மறுமொழி கூறாமல் அறையை விட்டு வெளியே வந்துவிட்டார். அதைப் பார்த்த மற்ற அமைச்சர்கள், பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது போல, என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால், அறைக்குள் நடந்த விஷயமே வேறு

அதிமுக.விற்குள்ளும், ஆட்சிக்குள்ளும் ஓ.பி.எஸ்.ஸின் பிடி தளர்ந்து போய் ரெம்ப நாள் ஆகிவிட்டது. அதனால்தான், சசிகலாவுக்கு ஆதரவாகவோ, அமமுக.வை இணைப்பது தொடர்பாகவோ, அவர் எந்த கருத்தைச் சொன்னாலும், எடப்பாடியார் எரிந்து விழுகிறார். சசிகலா எல்லாம் ஒரு ஆளு, அவருக்குப் போய் சப்போர்ட் செய்கிறீர்களே அண்ணே என முகத்துக்கு நேராக பார்த்து கடுமை காட்டுகிறார் எடப்பாடியார். எடப்பாடி பக்கமும் முழுமையாக சாய முடியாமல், சசிகலா பக்கமும் முழுமையாக சாய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார், ஓ,பி.எஸ் என்பதுதான் இன்றைய நிலைமை. .

அதிமுக.வுடன் அ.ம.மு.க.வை இணைக்க மத்திய பா.ஜ.க. அரசு, அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்த்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமி சொல்வதைதான் கேட்கிறார்கள். சசிகலா மற்றும் அமமுக.வுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள் என்று பிரதமரோ, உள்துறை அமைச்சரோ நேரடியாக ஒரு வார்த்தைச் சொன்னால் மீறுகிற தைரியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டா?

அமமுக இல்லாமல், சசிகலாவை அதிமுக.விற்குள் சேர்க்காமலேயே அதிக இடங்களில் வெற்றிப் பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப கூறுவதை காதுகொடுத்து கேட்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும். அதானல், இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ்., எந்த நாடகம் ஆடினாலும் அவர்தான் அசிங்கப்பட்டு போவார். இந்த விவகாரத்தில் கட்சிக்குள்ளேயே ஓ.பி.எஸ்.ஸுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. அதனால்தான், தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.

அவரை கடைசி வரை கதற விடும் வகையில்தான் இ.பி.எஸ். ஸின் திட்டங்கள் இருக்கப் போகிறது என்றார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நடுநிலை எண்ணம் கொண்ட அந்த அமைச்சர்.

ஆடும் வரை ஆட்டம்…..