சென்னை, திருவொற்றியூர் நகர ம.தி.மு.க. செயலாளர் ரகுநாதன் மகன்
திலீபன் ~ கார்த்திகா
திருமண வரவேற்பு விழாவில் (28.2.2021) அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தேர்தல் தொகுதி பங்கீடு, பரப்புரை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும், இலக்கியத்தில் இருந்து மேற்கொள் காட்டி பேசியது, திருமண விழாவில் கலந்துகொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வைகோவின் உரை இதோ….
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்ற வள்ளுவன் வாய்மொழிக்கு இலக்கணமாக,
இல்லறம் எனும் நல்லறம் ஏற்கின்ற திலீபன் / கார்த்திகா மணவிழாவில், உங்கள் அனைவரையும் சந்திப்பதில்
மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
இங்கே மூன்று இளைஞர்கள் இருக்கின்றார்கள்,
ஒருவர், மணமகனின் அண்ணன் பிரபாகரன்.
அவர் நியூசிலாந்து நாட்டில் பணிபுரிகின்றார்.
அவர் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது,
நான் அவரைக் கையில் தூக்கி வைத்து இருந்த படத்தை என்னிடம் மேடையில் கொண்டு வந்து காண்பித்தார்கள்.
அதைப் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
அடுத்த இளைஞர் திலீபன்.
அவர்தான் இன்று மணமகன்.
மற்றொரு இளைஞன் ரகுநாதன். (கைதட்டல்).
பிரபாகரன், திலீபனின் தந்தை.
இவர்கள் மூன்று பேரையும் ஒருசேர நிறுத்திப் பார்த்தால்,
இவர்களுள் யார் வயதில் மூத்தவர் என்று கண்டுபிடிக்க முடியாது.
அப்படி, என்றைக்கும் எழிலார்ந்த இளந்தோற்றத்தோடு,
மலர்ந்த முகத்தோடு,
எத்தனையோ சோதனைகள் சூழ்ந்த போதும்,
எந்தச் சூழ்நிலையிலும், சிறிது அளவு சலனத்திற்கோ, சஞ்சலத்திற்கோ இடம் கொடுத்து விடாமல்,
கொள்கையும், இலட்சியமும்தான் வாழ்க்கையின் உயிர்நாடி என்று,
26 ஆண்டுகளாக
என்னோடு இயங்கி வருபவர் ரகுநாதன்.
நம் நெஞ்சில் நிறைந்து இருக்கின்ற செயல்வீரன்,
திருவொற்றியூர் நகரச் செயலாளராக இருந்து பணி ஆற்றிய ஆருயிர்த் தம்பி எஸ்.ஜி. சேகருக்கு வலதுகரமாக,
உற்ற உறுதுணையாகத் திகழ்ந்த ரகுநாதன்,
இன்றைக்கு திருவொற்றியூர் நகரச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தில்,
எஸ்.ஜி.சேகர்தான் நகரச் செயலாளர் ஆகி இருக்க வேண்டும்.
ஆனால், நான் விட்டுக்கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டதற்காக,
தன்னோடு இருந்தவர்களை எல்லாம் பொறுப்பில் இருந்து விலக வைத்தார். அப்படிப்பட்ட ஒரு இளைஞனைப் பார்க்க முடியாது.
அவர் இன்றைக்கு நம்மோடு இல்லை..ஆனால், நம் உணர்வுகளோடு கலந்து இருக்கின்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கின்ற வேளையில், இந்தத் திருமணம் நடைபெறுகின்றது.
மணமகள் கார்த்திகா அவர்களின் தந்தையார் நாகராஜ்,
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர். தாய் சிவகாமி.
எனவே, அவர்களும் திராவிட இயக்கக் குடும்பம்தான்.
தன் மூத்த மகனுக்கு பிரபாகரன் என்றும், இரண்டாவது மகனுக்கு திலீபன் என்றும் ரகுநாதன் பெயர் சூட்டி இருக்கின்றார்.
அந்த அளவுக்கு, தமிழ் மீது, தமிழ் ஈழத்தின் மீது பற்றுக்கொண்டவர். பிரபாகரனையும், திலீபனையும் என்றைக்குமே மறக்க முடியாது.
மணமகன் திலீபன், பி.இ., எம்பிஏ படித்து விட்டு, ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.
மணமகள் கார்த்திகாவும், பி.டெக். எம்.இ. படித்து இருக்கின்றார்.
அவர்களுடைய தொழில் நிறுவனம், மிகப்பெரிய தொழில் நிறுவனமாக வளர்ந்து வளம்பெற வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்.
அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் உணர்ந்து,ஒருவருக்காக ஒருவர் புரிந்து, ஈருடல் ஓருயிராக, இணைபிரியாத் தம்பதியராக,
யாயும் ஞாயும் யாராகியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்து,
நீங்கள் இணைந்து வாழுங்கள்.
திலீபனும், கார்த்திகாவும், உயர்கல்வி கற்றவர்கள்.
எனவே, எந்தக் கட்டத்திலும்,
எந்த வேறுபாட்டுக்கும் இடம் கொடுத்து விடாமல் விட்டுக்கொடுத்து
உங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களைப் பெற்று,
காவிரி மணலினும் பன்னெடு நாள் வாழ்க,
விண்மீன்களில் எண்ணிக்கையிலும் பன்னெடு நாள் வாழ்க
கார்காலத்தில் பெய்கின்ற மழைத்துளிகளின் எண்ணிக்கையிலும் பன்னெடு நாள் வாழ்க என வாழ்த்துகின்றேன்.
ரகுநாதன் எனக்கு உற்ற தம்பி.
என் மீது உயிரையே வைத்து இருக்கின்றார்.
இந்தத் திருமணத்திற்கு நான் வந்தே தீர வேண்டும் என்று உத்தரவு போட்டார்.
அவரது அன்புக்கட்டளையை ஏற்று,
நான் இங்கே வந்திருக்கின்றேன்.
அவரது பிள்ளைகள் பிரபாகரனும், திலீபனும் போல
அண்ணன் தம்பிகள் இருக்க வேண்டும் என எல்லோரும் சொல்லுகின்ற அளவிற்கு, நீங்கள ஒற்றுமையாக வாழ வேண்டும்.
உங்கள் வாழ்க்கையைப் பார்த்து,
ஊர் போற்ற வேண்டும்.
அதைப் பார்த்து, ரகுநாதனும், அவரது துணைவியாளர் சுமதியும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என விரும்புகின்றேன்.
மணமக்கள் வாழ்வாங்கு வாழிய
பன்னெடு நாள் வாழிய
தமிழ் போல் வாழ்க
நலம் பெற்று வாழ்க
வளம் நிறைந்து வாழ்க
இணைபிரியாமல் வாழ்க
என வாழ்த்தி விடைபெறுகின்றேன் என்று வைகோ வாழ்த்தி பேசினார்.