Fri. Nov 22nd, 2024

மார்ச் 7ல் திருச்சியில் திமுக பொதுக்கூட்டம்

வரும் மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்.

தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு லட்சிய பிரகடனத்தை திருச்சியில் மாநாடு போல் நடைபெறும் திமுக கூட்டத்தில் அறிவிக்க இருக்கிறோம். அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களிடமும் தமிழகத்தின் தொலைநோக்கு பார்வையை சேர்க்க உள்ளோம்.

தமிழகத்தில் அனைத்து துறைகளையும் முன்னிலைக்கு வர வைப்பேன். இன்னும் 2 மாதத்தில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வருகிற 15, 16-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

சமையல் கேஸ் சிலிண்டர் மீண்டும் விலை உயர்வு

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிப்பு: சென்னையில் 810 ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர் இன்று முதல் 835 ரூபாயாக விற்பனை. ஜனவரி மாதத்தில் சிலிண்டர் விலை 710 ரூபாயாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்தது.

ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு

நெல்லை டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார் தெரிவித்துள்ளார்.

காவத்துறையினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளது.

காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது. காவலர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. காவலர்கள் கட்டாயம் முழு சீருடையில் பணியில் இருக்க வேண்டும். தணிக்கையின் போது அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். தணிக்கையின் போது சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றம் உத்தரவு

ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். உரிய ஆவணங்களுடன் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ள நீதிபதிகள், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணங்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

நீட் விடைத்தாள் வழக்கு; சிபிசிஐடி விசாரணை

நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். யார் மீதும் வழக்கு பதிவு செய்யாமல், ஆரம்பக்கட்ட விசாரணை மட்டும் மேற்கொள்ள வேண்டும். சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை கொண்ட குழு விசாரிக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை எனக் கூறி திமுக தொடர்ந்து வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய – மாநில சுகாதார துறை செயலாளர்கள் உட்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.