தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், ஆளும்கட்சியான திமுக மீதான கோபத்தின் காரணமாகவே புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறார் என்பதுதான் அரசியல் திறனாய்வாளர்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. அதனை உண்மையென நினைக்கும் வகையில்தான், நடிகர் விஜயின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. இம்மாத இறுதியில் விழுப்புரம் மாவட்டம் விக்கரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள். மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்ட 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தைப் பார்த்து பிரதான எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும்கட்சியான திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்களே அதிர்ச்சியடைந்தார்கள். தமிழகத்தில் இதற்கு முன்பு எப்போதும் நடைமுறையில் இல்லாத வகையில், ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டிற்கு அதுவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு 21 கேள்விகளுக்கு பதில் அளித்தால்தான் மாநாடு நடத்துவதற்கு அனுமதி தரப்படும் என்று போலீஸ் தரப்பில் எப்போதுமே நிபந்தனைகள் விதித்து கிடையாது.
நடிகர் விஜயைப் பார்த்து ஆளும்கட்சியான திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சுமத்தும் வகையில்தான், தமிழக வெற்றிக் கழக மாநாடு வெற்றிகரமாக நடந்து விடக் கூடாது என்று திமுக அரசு முட்டுக்கட்டைகள் போட்டு, நடிகர் விஜயை வெறுப்பு ஏற்றுகிறார்கள் என்று சமூக ஊடகங்களிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நடிகர் விஜய் இன்று (செப்.8) முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சி என்பதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டது என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ள அதன் தலைவரான நடிகர் விஜய், ஆளும்கட்சியான திமுகவின் மறைமுக மிரட்டல்களையும் அம்பலப்படுத்தியுள்ளார் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்களில், ஊடகங்களிலும் அரசியல் திறனாய்வாளர்களிடம் விவாதப் பொருளாக மாறியிருக்கும் வாக்கியங்கள் இவை தான்…..”தடைகளை தகர்த்து கொள்கை தீபம் ஏந்தி தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம் வெற்றிக் கொடி ஏந்தி மக்களை சந்திப்போம், வாகை சூடுவோம்” என்பதுதான் இன்றைய அரசியல் களத்தில் சூடான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஆக மொத்தத்தில், செப்டம்பர் 21ம் மாநாட்டில் ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை நடிகர் விஜய் பகிரங்கமாக அறிவித்து விடுவார் என்கிறார்கள் தவெக முன்னணி தலைவர்கள்.
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் முக்கிய தகவல்கள் இதோ…
திசைகளை வெல்ல போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது, முதற்கதவு நமக்காக திறந்திருக்கிறது
கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்
தடைகளை தகர்த்து கொள்கை தீபம் ஏந்தி தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம்
வெற்றிக் கொடி ஏந்தி மக்களை சந்திப்போம், வாகை சூடுவோம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கோட்பாட்டோடு, நாம் அரசியலை அணுகுவதும் ஒருவித கொள்கை கொண்டாட்டமே
முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வ பதிவுக்காகவுமே, இதுவரை நாம் காத்திருந்தோம்
தவெக-வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கடந்த பிப். 2ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தோம்
பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தல் அரசியலில் தவெக பங்கு பெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி
தவெக-வின் முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளது…
நடிகர் விஜயின் இந்த அறிக்கை மூலம் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்கு இன்றைய தேதியில் இருந்தே முனைப்பு காட்டுவதற்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை விரட்டும் வகையில் நடிகர் விஜயின் அரசியல் செயல்பாடுகள் அமைந்துவிட்டன என்கிறார்கள் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.