Thu. Nov 21st, 2024

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரியை உள்ளடக்கி 40க்கு 40 தொகுதிகளையும் ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியதை கண்டு, இந்திய நாடு அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி, இரண்டு மாநிலங்களிலும் முதல்முறையாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உதயநிதியின் அதிரடி தேர்தல் பரப்புரை, திமுகவினரிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பரவலாக மிகுந்த வரவேற்பை பெற்றது. 2019 தேர்தலில் தேனி தொகுதி நீங்கலாக 39 எம்பி தொகுதிகளிலும் திமுக கூட்டணி அசத்தலான வெற்றி பெற்றது.

உதயநிதியின் முனைப்பான பிரசாரம்தான், திமுக கூட்டணியின் அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாகவே பாராட்டு தெரிவித்தார்கள்.

அரசியலில் அடியெடுத்து, முதல் தேர்தலிலேயே செஞ்சுரி அடித்ததையடுத்து, உதயநிதியின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் திமுக இளைஞரணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி, தீவிரமாக அரசியல் களத்தில் இயங்கியதை தொடர்ந்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முனைப்பான பிரச்சாரம் மேற்கொண்டவர், தான் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியிலும் அசத்தலான வெற்றியை பெற்றார்.

சட்டப்பேரவையில் கண்ணிப் பேச்சு முதல் அடுத்தடுத்த விவாதங்களில் உதயநிதியின் உரை, எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அதிமுக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், பாஜகவோடு கொஞ்சி குலாவி வருவதை கிண்டலடித்து உதயநிதி பேசியதெல்லாம், சட்டப்பேரவையை கடந்து, தமிழக மக்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் அனுபவம் மிகுந்த அரசியல்வாதிகளை வியப்பில் ஆழ்ந்தும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதியின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததையடுத்து, திமுக அமைச்சரவையிலும் வெகு விரைவாகவே இடம் பிடித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி, சர்வதேச செஸ் விளையாட்டிப் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி தமிழகத்தின் மீது இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல, ஒடடுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, உதயநிதிக்கு திமுக அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்படும் என்று பேச்சு, அதிகமாகவே சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சூடாக விவாதிக்கப்பட்டு வந்தது.

2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், தற்போது நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் என மூன்று பொதுத்தேர்தல்களிலும் உதயநிதியின் பிரசாரம், பொதுமக்களிடம் அதிகளவில் வரவேற்பை பெற்றது. மத்திய பாஜக அரசையும், மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவையும் தனக்கே உரிய கேலி, கிண்டலுடன் பேசியது, தேர்தல் காலத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.


திமுகவினர் மட்டுமல்ல பொதுமக்களும் உதயநிதியின் தேர்தல் பரப்புரையை கேட்பதற்கு ஆர்வமாக குவிந்துவிடுகிறார்கள் என்ற தகவல், மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்து எதிரொலித்ததை கேட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, இரண்டாம் கட்ட திமுக தலைவர்களான அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள், வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் அடைந்தார்கள்.
திமுகவின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்று மனம் திறந்து திமுக மூத்த தலைவர்களும், கூட்டணிக்கட்சித் தலைவர்களும் வெகுவாகவே பாராட்டினார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்று மாபெரும் வெற்றியை திமுக கூட்டணி பெற்றதற்கு, அமைச்சர் உதயநிதியின் அயராத உழைப்பும் முக்கிய காரணம் என்பதால், திராவிட மாடல் அமைச்சரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இணையான முக்கியத்துவத்தை வழங்கும் வகையில் துணை முதல் அமைச்சர் பதவியில் உதயநிதி அமர்த்தப்பட வேண்டும் என்று திமுகவினரும் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் வெளிப்படையாகவே கூறினார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் துணை முதல் அமைச்சர் பதவியில் உதயநிதி அமர்த்தப்படுவது உறுதி என்று திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களே வெளிப்படையாக கூறி வந்தார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெற்றதைப் போலவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்று, இரண்டாவது முறையாக திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் அமைச்சர் பதவியை கட்டாயம் தர வேண்டும் என்று திமுகவின் மூத்த நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
ஒட்டுமொத்த திமுகவினரையும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில், துணை முதல் அமைச்சர் பதவிக்கு உரிய தகுதியை உதயநிதி ஸ்டாலின் பெற்றுவிட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஜுன் 11 ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வருடந்தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்பார்கள். ஆனால், ஜுன் 11ல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை, திமுக மூத்த அமைச்சர்கள் உள்பட ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் ஆரவாரமாகவே வரவேற்கவே செய்கிறார்கள்.


விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு முன்பாகவே துணை முதல் அமைச்சர் பதவியில் உதயநிதி அமர்த்தப்படுவதற்கான முன்னோட்டமாகதான், ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் திமுக கூட்டணிக்கட்சித்தலைவர்கள்.


வாரிசு அரசியல் புயலில் கலைஞர் மு.கருணாநிதி குடும்பம் சிக்கிக் கொண்டிருந்தாலும், திமுகவின் அடுத்த தலைவராக பதவி ஏற்பதற்கு தகுதிபடைத்தவர் உதயநிதி ஸ்டாலின்தான் என்று ஒட்டுமொத்த திமுகவினரும் முழங்கி வரும் நிலையில், தமிழக மக்களுக்கு வெளிப்படையாகவே அறிவிக்கும் வகையில்தான் துணை முதல்வர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் வெகு விரைவாக பவனி வருவார் என்கிறார்கள் பிரபல அரசியல் திறனாய்வாளர்கள். உதயநிதியை அரசியலில் உச்சத்திற்கு கொண்டு வரும் வியூகத்திலும் கூட மறைந்த திமுக தலைவரும் தமது தந்தையுமான கலைஞர் மு.கருணாநிதியின் சாணக்கியதனத்தைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையாண்டுள்ளார் என்கிறார்கள் அண்ணா அறிவாலயத்தின் மூத்த நிர்வாகிகள்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், 2006 -2011 ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, திமுக அமைச்சரவையில் துணை முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே நேரத்தில், குடும்ப வாரிசுகளிடையே மனவருத்தம் ஏற்படக் கூடாது என்பதற்கு அன்றைய காலத்தில் தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த மு.க.அழகிரியை, மத்திய அமைச்சர் பதவியில் அமர வைத்து, வாரிசுகளிடையே அதிகாரப் போட்டியை சமன் செய்தார். அதே பாணியில்தான், தூத்துக்குடி எம்பியும் தமது சகோதரியுமான கனிமொழி, வருத்தம் கொள்ளக் கூடாது என்பதற்காக, நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழிக்கு பதவி வழங்கிய பிறகே, உதயநிதியை துணை முதல் அமைச்சர் பதவியில் அமர வைத்து அழகுப் பார்க்கும் செயல்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் திமுக மூத்த அமைச்சர்கள்.