பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து நிற்பதில் சில காலம் தவறவிட்டிருக்கலாம். ஆனால், இனிமேல் எப்போதும் பாரதிய ஜனதாவை விட்டு விலகாமல் அரசியல் பயணத்தை தொடர்வேன்..
…..இப்படி முழங்கியிருப்பவர் பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக பிரதமர் பதவிக்கு தகுதிக்குரியவர் என்று ஹிந்தி மொழியை பெரும்பான்மையாக பேசும் வட மாநிலங்களில் முன்னிறுத்தப்பட்ட நிதிஷ்குமார்தான், பீகார் மாநிலத்தில் ஆட்சி புரிவதற்கு முதல் அமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தால் போதும், தன் ஆயுள் முழுவதும் பாரதிய ஜனதாவை தோளில் தூக்கி சுமப்பேன் என்று கர்ஜித்துள்ளார்.
10 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா, மூன்றாவது முறையாகவும் மத்தியில் ஆட்சியை கைப்பற்றினால், இந்தியாவில் ஜனநாயகம் முழுமையாக செத்து விடும் என்று நாடு முழுவதும் அரசியல் திறனாய்வாளர்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஆளும்கட்சி மிருகப் பலத்துடன் வளர்வதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பலவீனமடைந்து வருவதும் ஜனநாயக நாடான இந்தியாவுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக கதறிக் கொண்டிக்கிறார்கள்.
பத்தாண்டு பிரதமர் பதவியை நிறைவு செய்யப் போகும் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகவும் பிரதமர் பதவியில் அமர்ந்துவிட்டால், நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஜனநாயகம் செத்துவிடும். மதவாதம் தலையெடுத்து, நாடு முழுவதும் மதமோதல்களை தூண்டிவிட்டு, இந்திய திருநாட்டின் அமைதியை சீர்குலைத்துவிடும் என்று அச்சமூட்டுகிறார்கள் ஜனநாயகவாதிகள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் பாரதிய ஜனதாவின் பத்தாண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ஒருமித்த உணர்வுடன் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வதிகாரத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் மீண்டும் உயிர்த்தெழுத்து விட்டது என்று நம்பிக்கை கொள்ளும் வகையில்தான் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உருவானது.
50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் இன்றைய தேதியில் மிகவும் பரிதாபத்துக்குரிய கட்சியாகதான் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பிராந்திய கட்சியை விட செல்வாக்கு இழந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, உயிரோட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இளம் தலைவர் ராகுல்காந்தி.
பாரத யாத்திரை மூலம் ராகுல்காந்தி மீது நாட்டு மக்களுக்கு அபரிதமாக நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் நிலையில், ராகுல்காந்தி முன் வைக்கும், பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட இந்திய திருநாட்டில், அன்பால் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற முழக்கம், இதுவரை காங்கிரஸ் மீது இல்லாத நம்பிக்கையை நாட்டு மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும், பிரதமர் மோடியும், இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு, நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வரும் நேரத்தில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக இருந்து வரும் பாரம்பரியமிக்க பண்பாட்டை சிதைக்காமல், வேற்றுமையில் ஒற்றுமையை காண்போம் என்ற தத்துவத்திற்கு ஏற்ப, பிராந்திய கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகிறது.
காங்கிரஸை உள்ளடக்கி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திமுக ஆகிய கட்சிகள் எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வந்த நேரத்தில், இந்தியா கூட்டணியில் இருந்து திடீரென்று விலகி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கைகோர்த்தார் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணி முன்னிறுத்தாத போதும், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் ஆகிய இரண்டு தலைவர்களுக்கும், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகமாக இருந்தது.
மம்தா பானர்ஜியின் அரசியல் பயணத்தோடு நிதிஷ்குமார் அரசியல் வாழ்க்கையை ஒப்பிட்டால், அரசியல் முதிர்ச்சி, சோஷலிசம் என்ற சமதர்ம தத்துவத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவராக இருந்தவர்.
1989 ம் ஆண்டிற்கு முன்பாக அரசியல் பயணத்தை தொடங்கிய நிதிஷ்குமார், ஜனதா தளம், சமதா கட்சி என பயணித்து பொதுவுடைமை சித்தாந்தவாதியாக உயர்ந்தார். 50 ஆண்டுகளுக்கு மேலான நிதிஷ்குமாரின் அரசியல் பயணத்தில், மாநிலத்தின் நலனை விட, தேசத்தின் நலனை விட, தன் நலமே பெரிது என்று கொள்கையை கொண்டவர்தான் நிதிஷ் என்று சொல்லும் அளவுக்குதான் அவரின் அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் அமைச்சர் என்ற பதவி மீது நிதிஷ்குமாருக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான ஆசைதான், அவரின் அரசியல் பயணத்தையே கேலிக்குரியதாக்கியிருக்கிறது.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு மகனான பிறந்த நிதிஷ்குமார், இந்தியாவின் ஆகச் சிறந்த சமதர்மவாதி என்று போற்றப்பட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். மனிதப் பிறவியில் ஏற்றத் தாழ்வு இன்றி அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை அழுத்தம் திருத்தமாக முழங்கி வந்தவர், நிதிஷ்குமார்.
1996 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில், அமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார், சமதர்ம கொள்கையில் சமரசம் செய்து கொள்ள ஆரம்பித்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர்ந்த நிதிஷ்குமார், 2005 ஆம் ஆண்டில் முதல்முறையாக பீகார் முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக முதல் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதையே தன் வாழ்வின் லட்சியம் என்ற நிலைக்கு கீழே இறங்கிவிட்டார் நிதிஷ்குமார். முதல் அமைச்சர் பதவிதான் நிதிஷ்குமாரின், அரசியல் பாதையை தடுமாற வைத்துக் கொண்டே இருக்கிறது.
2013 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை பார்த்து அதிர்ந்து போனவர் நிதிஷ்குமார். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கான வியூகம் வகுக்கப்பட்ட போதெல்லாம் உடனிருந்த நிதிஷ்குமார், மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்வதற்கு துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியை பல்லக்கில் வைத்து நிதிஷ்குமார் சுமந்து கொண்டிருக்கும் அவலத்தை பார்த்து பீகார் மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள சமதர்மவாதிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
2020 முதல் நிதிஷ்குமாரின் அரசியல் பயணம், பதவி ஆசையால் கேவலமான பல நிலைகளை கடந்து வந்திருக்கிறது. 2020 ம் ஆண்டில் பாரதிய ஜனதா கூட்டணியுடன் சட்டமன்றத் தேர்தலை சந்தித்த நிதிஷ்குமார், 2 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கூட்டணி அரசில் இருந்து விலகி, 2022 ஆம் ஆண்டில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்து, கூட்டணி அரசின் முதல் அமைச்சராக பதவியேற்றார்.
17 மாதங்களில் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியை விட்டு வெளியேறி மீண்டும் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து, கடந்த ஜனவரி மாதம் மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ்குமார்.
ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி அரசின் முதல் அமைச்சராக நிதிஷ்குமார் இருந்த காலத்தில்தான், பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக இந்திய கூட்டணி அமைவதற்கு அடித்தளம் வகுத்தவரே, நிதிஷ்குமார்தான். இந்திய கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில்தான் நடைபெற்றது. பாஜகவுக்கு மாற்றாக இந்திய கூட்டணி நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்த நேரத்தில், சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவமான நிதிஷ்குமார், திடீரென்று விலகினார்.
நிதிஷ்குமாரின் விலகலால் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் உள்ளம் குளிர்ந்து போனார்கள். பதவி ஆசையால் இந்திய கூட்டணியை பலவீனமாக்குவதற்கு நிதிஷ்குமார் ஆடிய நாடகத்தை பார்த்து, காங்கிரஸ் மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகள் கோபப்படவில்லை. ஆனால், பீஹாரில் மார்ச் 2 ஆம் நடைபெற்ற அரசு விழாவில், பிரதமர் மோடியுடன் மேடையை அலங்கரித்த முதல்வர் நிதிஷ்குமார், உருகி உருகி பேசியதைதான், பாரதிய ஜனதாவை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் மற்றும் டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளும்கட்சியாக உள்ள பிராந்திய கட்சித் தலைவர்களையும், ஆட்சியை இழந்துள்ள தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் அதிகளவு கடுப்பேற்றியுள்ளது.
எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காகவே, ஜனநாயக அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவிவிட்டு, எதிர்க்கட்சிகளையே பிளவுப்படுத்தி வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக, ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பே, தமிழ்நாடு,கேரளம், மேற்கு வங்கம், பீகார் என 142 எம்பி தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றிப் பெறுவதற்காக சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ்நாடு மற்றும் கேரளாவில், பிப்ரவரி மாத இறுதியில் பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற மோடி, ஓரிரு நாட்கள் கூட ஓய்வு எடுக்காமல், மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் முனைப்பான தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டிற்கு மார்ச் 4 ஆம் தேதி வருகை தரும் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக இல்லாமல், அரசியல் பயணமாகவே அமைத்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். 10 ஆண்டு பாஜக ஆட்சியில், இந்திய திருநாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வேலையின்மை கோடிக்கணக்கான இளைஞர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாகவும் ஜனநாயகவாதிகள் அபாயக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவார்கள் வேலைவாய்ப்பை தேடி டெல்லி, மகாராஷ்டிரம் மற்றும் தென் இந்தியாவிலும் அடைக்கலம் புகுந்துள்ளார்கள்.
சொந்த மாநிலத்து மக்களையே காப்பாற்ற முடியாத நிதிஷ்குமார், 19 ஆண்டுகளாக பீகார் மாநிலத்தின் முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்திருப்பவர் என்ற அவமானத்தை சுமக்கும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.
நிதிஷ்குமார் என்ற தனி நபரின் பதவி ஆசைக்காக ஒட்டுமொத்த பீகார் மாநில மக்களும் அவமானத்தை சுமந்து கொண்டிருக்கிறார்கள். நிதிஷ்குமார் போன்ற அரசியல்வாதியால், இந்தியாவிற்கே பெருத்த அவமானம் என்று ரத்தக் கண்ணீர் சிந்துகிறார்கள் சோஷலிஸ்ட் எனும் சமதர்மவாதிகள்..