நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக களம் இறங்க வேண்டும் என்றால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனது வைத்து விட்டால் மட்டுமே முடியாது. அவரது புதல்வர் உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோரின் அன்பையும் பெற்றால்தான் எம்பி தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்க முடியும் என்பது திமுகவில் எழுதப்படாத சட்டம் என்பது திமுகவின் சாதாரண தொண்டர்களுக்கு கூட தெரியும்.
பணபலமும் படை பலமும் இல்லாத விசுவாசமிக்க திமுக நிர்வாகிகள், உதயநிதியையும் சபரீசனையும் நேரில் சந்திப்பதே குதிரைக்கொம்பாக இருந்து வரும் இன்றைய தேதியில், இருவரோடும் நினைத்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் அளவுக்கு செல்வாக்குப் படைத்த வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்த், வெறும் கௌரவத்தை மட்டுமே தரும் எம்பி பதவிக்காக, உதயநிதியிடமும், சபரீசனிடமும் கைகட்சி நிற்க மாட்டேன் என முரண்டு பிடித்து வருவதைப் பற்றிதான் இன்றைய சிறப்பு செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்க இருக்கிறோம்…
இரண்டாயிரத்து இருபத்து நான்கு நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக, ஆளும்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைத் தவிர ஏனைய கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, திமுக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை ஆர்வம் காட்டி வருகிறது. வேட்பாளர் நேர்காணலுக்கு முன்பாகவே, சிட்டிங் திமுக எம்பிகளில் யாரை கழற்றி விடலாம், தொகுதி மக்களிடம் அதிக வெறுப்பை சம்பாதிக்காத திமுக எம்பிக்களுக்கு அதே தொகுதியை மீண்டும் ஒதுக்கலாமா என்பது குறித்தெல்லாம், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகிய மூவர் அணி, ஒவ்வொரு நாளும் ஆலோசனை நடத்திக் கொண்டே இருக்கிறது.
எம்பி தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற பேச்சு, திமுகவில் பரவலாகவே எழுந்துள்ள நேரத்தில், உதயநிதியின் சிபாரிசை பெறுவதற்காக, மூத்த அமைச்சர்களின் வாரிசுகள் கூட சென்னையிலேயே முகாமிட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோரை கடந்த பல நாட்களாக நேரில் சந்தித்து, கெஞ்சி கொண்டிருப்பதை கேள்விபட்டு, வேலூர் மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள் மகிழ்ச்சியோடு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினரின் மகிழ்ச்சிக்குரிய காரணமே விசித்திரமானதாகத்தான் இருக்கிறது.
வேலூர் எம்பியாக 5 ஆண்டுகள் பதவி வகித்த கதிர் ஆனந்தால், வேலூர் மாவட்டத்திற்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி, பொதுமக்களும் கதிர் ஆனந்த் மீது கடுமையான கோபத்தில் உள்ளார்கள். வாக்காளர்களை விட அதிக கோபத்தில் இருப்பவர்கள் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும்தான் என்று கூறும் அமைச்சர் துரைமுருகனின் தீவிர விசுவாசிகள், அப்பன் துரைமுருகனாலும், பிள்ளை கதிர் ஆனந்தாலும் வேலூர் மாவட்டத்திற்கு ஒரு புண்ணியமும் இல்லை. அதுபோலவே, இருவரின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த திமுக தொண்டர்களையும் துரைமுருகனும் கண்டுகொள்ளவில்லை. அப்பனுக்கு தப்பாத பிள்ளையான கதிர் ஆனந்தும் எச்சில் கையில் கூட காக்கா ஓட்டவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற எம்பி தேர்தலில் கதிர் ஆனந்த் தப்பி தவறிதான் வெற்றி பெற்றார். 2024 எம்பி தேர்தலில் கதிர் ஆனந்தை படுதோல்வி அடைய செய்வதே எங்களது ஒரே குறிக்கோள் என்று வெறி பிடித்தவர்கள் போல பொங்குகிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
2019 எம்பி தேர்தலின் போது, வேலூர் தொகுதியை தவிர தமிழ்நாட்டில் எஞ்சிய 38 எம்பி தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல், மூன்று மாதங்கள் கடந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. கதிர் ஆனந்த்தை படுதோல்வி அடைய செய்வார் என்ற எதிர்பார்ப்போடு வேலூர் பொதுமக்கள் காத்திருந்த நேரத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை கண்டு திமுக நிர்வாகிகளே ரத்தக்கண்ணீர் வடித்தார்கள்.
கதிர் ஆனந்தின் வெற்றியை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடாத திமுக நிர்வாகிகளா, தற்போதைய எம்பி தேர்தலில் கதிர் ஆனந்த வெற்றி பெறுவதற்கு உண்மையாக உழைக்க மாட்டார்கள் என்கிறார்கள் தேர்தல் கள திறனாய்வாளர்கள்.
வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள வேலூர் எம்பி தொகுதியில் கதிர் ஆனந்த்தின் வெற்றி, வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை இழுபறியாகதான் இருந்தது.
கதிர் ஆனந்த்தின் வெற்றிக்காக திரைமறைவில் துரைமுருகன் செய்த தில்லுமுல்லுகள் ஏராளம். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸிடம் ரகசியமாக டீல் பேசிய துரைமுருகன், வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது என்று கெஞ்சியவர் என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற கதையாக, எதிரியின் காலில் விழுவதைப் போல, அப்போதைய அதிமுக அமைச்சரும் வேலூர் மாவட்ட அதிமுக செயலாளரான கே.சி.வீரமணியிடமும் ரகசிய கூட்டணி அமைத்து, ஏ.சி.சண்முகத்திற்கு அதிமுக நிர்வாகிகள் முழுமனதோடு தேர்தல் வேலை பார்க்காத வகையில் டீல் பேசியவரும் துரைமுருகன்தான்.சாதிப் பாசத்தில் கே.சி.வீரமணியும் அடக்கி வாசித்ததால்தான் ஏ.சி.சண்முகம் தோல்வியை தழுவினார் என்று இன்றைக்கும் கூட 2019 எம்பி தேர்தலில் துரைமுருகன் செய்த தில்லுமுல்லுகளை நினைவு கூறுகிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.
2019 எம்பி தேர்தலில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை விட மிக அதிகமாக, 2024 தேர்தலையொட்டியும் திமுக நிர்வாகிகளிடம் மட்டுமின்றி வேலூர் தொகுதி முழுவதும் துரைமுருகனுக்கும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கும் எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறது என்கிற போது, 100 கோடி ரூபாய்க்கு மேல் கதிர் ஆனந்த் செலவு செய்தாலும் கூடதிமுக உறுதியாக வெற்றி பெற்றுவிடும் சொல்ல முடியாத நிலைதான் நிலவி வருகிறது என்கிறார்கள் துரைமுருகனின் தீவிர விசுவாசிகள்.
ஆளும்கட்சியான திமுக மீதான அதிருப்தியை விட, வேலூர் மாவட்டத்தில் துரைமுருகனுக்கு எதிராகவும் கஞ்சன் கதிர் ஆனந்த் மீதான கோபமும், வேலூர் எம்பி தொகுதி வாக்காளர்கள் ஒவ்வொருவரிடமும் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.
வேலூர் தொகுதி மக்களிடம் தங்கள் குடும்பத்திற்கு எதிராக கனன்று கொண்டிருக்கும் கோபத்தை உணர்ந்து கொண்டிருக்கிறார் கதிர் ஆனந்த் என்றும் வாக்காளர்கள் காலில் விழுந்தால் கூட தன்னை யாரும் மன்னிக்க மாட்டார்கள் என்பதால்தான், எம்பி தேர்தலில் மீண்டும் போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார் கதிர் ஆனந்த என்கிறார்கள் துரைமுருகன் குடும்பத்து விசுவாசிகள். எம்பி தேர்தலையொட்டி துரைமுருகனுக்கும் கதிர் ஆனந்த்திற்கும் இடையே நடைபெற்று முட்டல் மோதல்களை மிகுந்த மகிழ்ச்சியுடனேயே விவரிக்கிறார்கள் இருவரின் ஆதரவாளர்கள்.
நீர்வளத்துறையில் நடைபெற்ற மணல் கொள்ளை வழக்கை, மத்திய பாஜக அரசின் அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஆடிப் போயிருக்கும் அமைச்சர் துரைமுருகன், நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் போது, எம்பி பதவியை இழந்து விடக் கூடாது என்று மகனுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.
ஐரோப்பிய நாடுகளில் ஆண்டு ஒன்றுக்கு பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வரும் வியாபார நிறுவனங்களை கவனிக்கவே தனக்கு நேரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று உதார் காட்டிய கதிர் ஆனந்த், பைசா பிரயோஜனம் இல்லாத எம்பி பதவிக்காக உதயநிதியிடமும், சபரீசனிடமும் கை கட்டி நிற்பது படுகேவலமாக இருக்கிறது என்று துரைமுருகனிடம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் கதிர் ஆனந்த்.
2024 எம்பி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் வேலூர் மாவட்ட திமுகவில் செல்லா காசாகிவிடுவோம் என்று விரக்தியை வெளிப்படுத்திய துரைமுருகன், அமலாக்கத்துறை விசாரணையில் கைது, சிறை வாழ்க்கை ஆகியவற்றை எதிர்கொள்ளக் கூடிய ஆபத்தும் உள்ளது. அவற்றை எல்லாம் சமாளிக்க எம்பி பதவி முக்கியம் என்று கதிர் ஆனந்தை சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார் துரைமுருகன் என்கிறார்கள் வேலூர் மாவட்ட மூத்த திமுக நிர்வாகிகள்.
அப்பாவும், பிள்ளையும் திமுக தலைமையின் காலில் விழுந்து எப்படியாவது தேர்தலில் போட்டியிட அனுமதி பெற்றுவிடுவார்கள் என்று உறுதிபட கூறும் துரைமுருகனின் தீவிர விசுவாசிகள், வேலூர் எம்பி தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் என்ற அறிவிப்பு வெளியாகும் நாளிலேயே கதிர் ஆனந்த்தின் தோல்வி உறுதியாகிவிடும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.
வேலூர் எம்பி தேர்தலில் கதிர் ஆனந்த்திற்கு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வமுடன் வாக்கு சேகரிக்க மாட்டார்கள். உதயசூரியன் சின்னத்திற்கு திமுகவினரின் குடும்பே வாக்களிக்காது என்பதை பல மாதங்களுக்கு முன்பே அறிந்து வைத்திருக்கும், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், கடந்த இரண்டு மாதங்களாக, வேலூர் எம்பி தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலை வாய்ப்பு முகாம், மருத்துவ முகாம் என முதல் சுற்றை மிகுந்த உற்சாகத்துடன் நிறைவு செய்து விட்டார்.
இரண்டாம் சுற்றாக, ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரும்பான்மையாக உள்ள இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யும் குறிக்கோளோடு, விளையாட்டுப் போட்டி பரிசுகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை தாராளமாக வழங்கும் திட்டத்தோடு, வேலூர் எம்பி தொகுதியிலேயே சுற்றி சுற்றி வருகிறார் ஏ.சி.சண்முகம்.
2019 எம்பி தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் கதிர் ஆனந்திடம் தோல்வி அடைந்தார் ஏ.சி.சண்முகம் என்ற அனுபதாப அலை வீசினாலும் கூட, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவால் கழற்றி விடபட்ட பாரதிய ஜனதா வேட்பாளராக, அதுவும் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஏ.சி.சண்மும் அறிவித்துள்ளதால், 100 கோடி ரூபாய் அல்ல, 200 கோடி ரூபாய் வாரி இரைத்தாலும் கூட ஏ.சி. சண்முகம் மரியாதைக்குரிய தோல்வியை சந்திப்பார் என்பது கூட சந்தேகம் தான் என்கிறார்கள் ஏ.சி.சண்முகத்தின் உண்மையான விசுவாசிகள்.
வேலூர் சட்டமன்றத் தொகுதியை 2021 தேர்தலில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் பறி கொடுத்ததைப் போல எம்பி தேர்தலிலும் கோட்டை விட்டு விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி என்று கூறும் வேலூர் அதிமுக மூத்த நிர்வாகிகள், கதிர் ஆனந்ததையும், ஏ.சி.சண்முகத்தையும் முழு வீச்சில் வீழ்த்துவதற்கு வீயூகம் வகுத்து, கோடிக்கணக்கில் பணம் செலவழிப்பதற்கு தயங்காத அதிமுக பிரமுகர் ஒருவரை ஏற்கெனவே தேர்வு செய்து வைத்துவிட்டார் என்று பீடிகையோடு பேசுசிறார்கள்.
ஆளும்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையோடு நீண்ட காலமாக மிகவும் நெருக்கமாக இருந்து வரும் தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் தம்பி உறவுமுறையைச் சேர்ந்த ரிஷிக்குமார்தான், வேலூர் எம்பி தொகுதி அதிமுக வேட்பாளர் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் வேலூர் அதிமுக பிரமுகர்கள்.
1998 ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க.,வில் பயணித்து வரும் ரிஷிக்குமார், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டில் 13 ஆண்டுகள் அதிமுக செயலாளராகவும் பணியாற்றியவர். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில், அதுவும் அவரது தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் 2001 முதல் 2006 வரை வேலூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பணியாற்றியவர் ரிஷிக்குமார்.
வேலூர் மாநகரம் மட்டுமின்றி வட ஆற்காடு மாவட்டம் என்று அழைக்கப்பட்ட வேலூரை உள்ளடக்கிய பல மாவட்டங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களிடம் நற்பெயரை எடுக்கும் வகையில் வட ஆற்காடு மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் தச்சு மற்றும் கருமார் தொழில் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக 2013 முதல் 2023 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தலைவராகவும் பணியாற்றியவர் ரிஷிக்குமார் என்பதால், எம்பி தேர்தலில் பொதுமக்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் கிடைக்கும் என்பதுதான் எடப்பாடியாரின் தேர்தல் கணக்காக இருக்கிறது என்கிறார்கள் வேலூர் அதிமுக நிர்வாகிகள்.
20 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக நிர்வாகியாக சேவை மனப்பான்மையோடு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருக்கும் ரிஷிக்குமார், அரசியலுக்கு அப்பாற்பட்டு நலிந்த மக்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவச் செலவினங்கள் என பல்வேறு உதவிகளை செய்து கொண்டு வருவதால் ரிஷிக்குமாரை, வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி எம்பி தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற வாக்காளர்களும், திமுக ஆட்சி மீதான அதிருப்தி+அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்பி ஆகியோருக்கு எதிரான கொந்தளிப்பும், புதுமுக வேட்பாளரான ரிஷிக்குமாரின் வெற்றியை உறுதி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு எடப்பாடியார் இருக்கிறார் என்கிறார்கள்.
திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த்தைதான் அறிவிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பல்வேறு கோயில்களுக்கு வேண்டுதல்களை வைத்திருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுக நிர்வாகிகளைப் போலவே வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளும், கதிர் ஆனந்த்தின் அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவை வைத்தும் ஆட்சி அதிகாரத்தை வைத்தும் 50 ஆண்டுகளுக்கு மேலாக சொத்துக்குவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வரும் அமைச்சர் துரைமுருகனுக்கு, அவரின் இறுதிக்காலத்தில் சரியான பாடத்தை புகட்டுவதற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் சரியான தருணம் என்று வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சபதமே எடுத்துகிறார்கள் என்பதால், ரிஷிக்குமார் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவில் சாதாரண நிர்வாகியான ரிஷிக்குமாரிடம், திமுக பொதுச் செயலாளரின் மகன் கதிர் ஆனந்த் படுகேவலமாக தோற்றுப் போய்விட்டார் என்ற வரலாற்றை பதிவு செய்ய, வேலூர் எம்பி தொகுதி காத்திருக்கிறது என்கிறார்கள் வேலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த அதிருப்தியை சம்பாதித்து வைத்திருக்கும் அமைச்சர் துரைமுருகனின் ஆதிக்கம் தரை மட்டமாகுமா..
காத்திருப்போம் நல்லரசு வாசகர்களே…
100% Obsolute comments for Vellore M.P. Constitution.