Fri. Nov 22nd, 2024

துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்களிலும் ஆரணி சட்டமன்ற உறுப்பினரான (சேவூர் ராமச்சந்திரன்) என்னைப் புறக்கணிப்புச் செய்திருக்கிறார்கள். நான் பிறந்தது, வளர்ந்தது ஆரணி சட்டமன்றத் தொகுதியில்தான். என்னை மூன்று முறை உள்ளாட்சிப் பிரதிநிதியாகவும், 2016 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளித்து அமைச்சர் பொறுப்பிலும் அமரவைத்து அழகுப் பார்த்தவர் மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள். அடுத்தபடியாக, 2021-ல் எனக்கு மீண்டும் வாய்ப்பளித்து சட்டமன்ற உறுப்பினராக்கியிருக்கிறார் அண்ணன் எடப்பாடியார்.

அப்படியிருக்கையில், என் பெயரை (சேவூர் ராமச்சந்திரன்) பேனர்களிலும், துண்டு பிரசுரங்களிலும் மூன்றாவதாகப் போட்டிருக்கிறார்கள். புதிதாக மாவட்டச் செயலாளர் அறிவிக்கப்பட்ட இந்த ஐந்து மாதங்களில்தான் இதெல்லாம் நடக்கிறது. சட்டமன்ற உறுப்பினரான எனது படத்தை பிரசுரம் செய்யக் கூடாது என மாவட்டச் செயலாளர் (ஜெயசுதா) அறிவுறுத்தியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் தன் கட்டுப்பாட்டில் நிர்வாகிகளை வைத்துக்கொண்டு என்னை இருட்டடிப்புச் செய்ய நினைக்கிறார். அவரைக் கண்டிக்கின்றேன்

ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனின் அனல் கக்கிய உரைதான், கடந்த சில நாட்களாக அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது..

இதன் பின்னணி என்ன? விரிவாக பார்ப்போம்…

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் கோஷ்டிப்பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

மன்னார்குடி கும்பலின் ஆசிர்வாதத்தால் அரசியல் அரிதாரம் பூசிய திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதாவின் அடாவடி அரசியலால், அதிமுகவில் உட்கட்சி மோதல், நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. அராஜக அரசியலை கையில் எடுத்துள்ள ஜெயசுதாவால், திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ரத்தம் சிந்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்கிறார்கள் மூத்த அதிமுக நிர்வாகிகள்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடியார் பதவியேற்று ஓராண்டு நிறைவுப் பெற்றவுடன், உட்கட்சி நிர்வாகத்தில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட தமிழகத்தில், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் பெரும்பான்மையான மாவட்டங்களில் பிரபலமான நிர்வாகிகளை தேர்வு செய்து, அதிமுக மாவட்டச் செயலாளராக நியமனம் செய்தார் எடப்பாடியார்.

அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக எஸ்.ராமச்சந்திரனும், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தூசி மோகனும், தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஜெயசுதாவும் நியமிக்கப்பட்டனர்.

நான்கு பிரபலங்களுடன், திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் தவிர்க்க முடியாத விவிஐபியாக, எடப்பாடியார் ஆட்சிக்காலத்திலும் அதற்கு முன்பு மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆட்சியிலும் அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன், அமைதியாக கட்சி பணியாற்றி வருபவர். இவர், தலைமைக் கழக நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.


சேவூர் ராமச்சந்திரனுக்கு திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் பரவலாக ஆதரவாளர்கள் இருந்து வரும் நிலையில், அவரின் செல்வாக்கை குறைப்பதற்காக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஜெயசுதாவும் கைகோர்த்து, திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராக அரசியல் செய்து வருவதால், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரு குழுக்களாக பிரிந்து மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக வேதனைப்படுகிறார்கள் அதிமுக மூத்த தலைவர்கள்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்று மலரும் நினைவுகளில் மூழ்கி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இருண்ட பக்கத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்.


வேளாண்மைத் துறை முன்னாள் பணியாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 2011 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் முதல்முறையாக அமைச்சராக பதவி வகித்த காலத்திலேயே அக்ரி கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டவர். லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதியில்லாதவர்களை வேளாண்மைத் துறையில் டிரைவர்களாக 7 பேரை நியமனம் செய்த விவகாரத்தில் நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். அதிமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேளாண் துறை அதிகாரியின் தற்கொலை, தமிழக அரசியல் களத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து அமைச்சர் பதவியை பறித்த செல்வி ஜெயலலிதா, கிருஷ்ணமூர்த்தியை அதிமுகவில் இருந்தும் அதிரடியாக தூக்கியெறிந்தார். செல்வி ஜெயலலிதா காலமான 2016 வரை அட்ரஸ் இல்லாமல் இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடியாரின் நம்பிக்கைக்குரிய சேலம் விவிஐபி ஆர்.இளங்கோவன் தயவால் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார்.

அதிமுகவில் மீண்டும் சேர்வதற்கே, சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், அப்போதைய சேர்மன் சேலம் இளங்கோவனை சந்திக்க பல நாட்கள், பல மணி நேரம் காத்துக் கிடந்தவர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி. சேலம் இளங்கோவனின் மனம் குளிரும்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தி பணிவிடை செய்ததையடுத்து, அதிமுகவில் மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

கெஞ்சி, கூத்தாடி அதிமுகவில் மீண்டும் இணைந்ததை எல்லாம் மறந்துவிட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, குறுகிய காலத்தில் பழைய அவமானங்களை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு, மறைந்த முதல்வர் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட எளிமையான தலைவர் சேவூர் ராமச்சந்திரனை, அதிமுகவில் இருந்து விரட்டியடிக்க ஜெயசுதாவை தூண்டி விடுகிறார் என்பதுதான் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

முந்தைய அதிமுக ஆட்சியில் சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக அதிகாரத்துடன் வலம் வந்த நேரத்தில் அடக்கம் ஒடுக்கமாக வாழ்ந்த கிருஷ்ணமூர்த்தி, அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற கடந்த மூன்று ஆண்டுகளில், திருவண்ணாமலை மாவட்ட அரசியலில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் வகையில், சேவூர் ராமச்சந்திரனை ஓரம் கட்டும் காரியத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். ஜெயசுதாவின் அரசியல் வாழ்க்கையில், குரு ஸ்தானத்தில் இருந்து வருபவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, வி.கே.சசிகலாவின் மன்னார்குடி கும்பல், அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்த நேரத்தில், சசிகலாவின் உறவினரான ராவணனிடம் ஜெயசுதாவை கிருஷ்ணமூர்த்தி அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஜெயசுதாவின் சேவையைப் பார்த்து, 2011 சட்டமன்றத் தேர்தலில் போளூர் தொகுதியில் ஜெயசுதா போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்று தந்தார் ராவணன்.

அன்றைய தேதியில், போயஸ் கார்டனில் நடைபெற்ற வேட்பாளர்கள் நேர்காணலின் போது செல்வி ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன். அந்த குழந்தைக்கு அம்மா பெயரைத்தான், அதாவது ஜெயலலிதா என்றுதான் பெயர் சூட்டி வளர்த்து வருகிறேன் என்று உருக்கம் காட்டியிருக்கிறார் ஜெயசுதா. தன் முன்பு நடிப்பவர்களை எல்லாம் விசுவாசமானவர்கள் என்று எளிதாக நம்பி விடும் தாயுள்ளம் படைத்த செல்வி ஜெயலலிதா, ஜெயசுதாவின் பகல் வேஷத்தை நம்பி, போளூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவித்து, எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் கால் பதிக்கவும் வழிவகுத்துவிட்டார்.

2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், அதிமுக எம்எல்ஏ ஜெயசுதாவின் 5 ஆண்டு கால அரசியல் செயல்பாடுகளைப் பார்த்து அதிருப்தியடைந்த செல்வி ஜெயலலிதா, 2016 தேர்தலில் ஜெயசுதாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் ஓரம்கட்டிவிட்டார்.

குருவான அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் சிஷ்யரான ஜெயசுதாவையும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கி தள்ளிய செல்வி ஜெயலலிதா, மரணமடைவதற்கு 8 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், சேவூர் ராமச்சந்திரனை, ஆரணி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்து, தமது தலைமையிலான அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றுவதற்கு அங்கீகாரம் தந்தார்.


எடப்பாடியார் தலைமையில் நான்கு ஆண்டு கால அதிமுக ஆட்சியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயல்பட்டு வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஜெயசுதாவும், அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் கடந்த மூன்றாண்டு காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுத்து, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை, திருவண்ணாமலை மாவட்ட அதிமுக அரசியலில் இருந்து ஓரம்கட்ட, தீய எண்ணத்துடன் கைகோர்த்து இருவரும் செயல்பட்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில், நிர்வாக ரீதியாக கடந்த ஆண்டுதான் மாற்றம் செய்யப்பட்டது. அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் அரசியல் கற்றுக் கொண்ட ஜெயசுதா, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை வலுவாக எதிர்க்க வேண்டும் என்பதற்காக எடப்பாடியாருக்கு மிகவும் நெருக்கமான சேலம் ஆர்.இளங்கோவன் மூலம், மாவட்டச் செயலாளர் பதவியையும் பெற்றுவிட்டார் என்கிறார்கள் திருவண்ணாமலை அதிமுக மூத்த நிர்வாகிகள்.


சேவூர் ராமச்சந்திரனின் சொந்த தொகுதியான ஆரணி மற்றும் போளூர் ஆகிய இரண்டு தொகுதிகளை உள்ளடக்கி திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக பதவியேற்ற நாளில் இருந்தே, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராகவே ஆரணி தொகுதியில் மட்டுமே முழுவீச்சில் உள்ளடி அரசியல் செய்து கொண்டிருக்கிறார், ஜெயசுதா.

அவரது மாவட்ட எல்லையில் மற்றொரு தொகுதியான போளூர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்பதால், போளூரில் உள்குத்து அரசியல் செய்யாமல், அதிமுக தலைமை அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் ஆரணியிலேயே நடத்தி வருகிறார் ஜெயசுதா என்கிறார்கள் ஆரணி அதிமுக முன்னணி நிர்வாகிகள்.


அதிமுக முன்னாள் அமைச்சர் என்ற முறையில் மட்டுமின்றி ஆரணி சட்டமன்ற உறுப்பினராகவும் சேவூர் ராமச்சந்திரன் பதவி வகித்து வரும் நேரத்தில், ஆரணியில் ராமச்சந்திரனுக்கு ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ராமச்சந்திரனை மட்டுமின்றி ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் என பல்வேறு பதவிகளை வகித்து வரும் ராமச்சந்திரனின் தீவிர ஆதரவாளர்களையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன், ஆரணி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அடிக்கடி தலையை காட்டும் ஜெயசுதா, அதிமுக சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மண்ணின் மைந்தரான சேவூர் ராமச்சந்திரனை அசிங்கப்படுத்தும் வகையிலேயே கடந்த ஆறுமாத காலமாக செயல்பட்டு வருகிறார் என்பதுதான், சேவூர் ராமச்சந்திரனின் தீவிர விசுவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஆரணி அதிமுகவில் ஒற்றுமையாக பணியாற்றி வந்த நிர்வாகிகளில், பலவீனமானவர்களை தேர்வு செய்து கட்சி பதவி வழங்குவதாக ஆசை காட்டி, சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராக அரசியல் செய்ய தூண்டிவிட்டு வருகிறார் ஜெயசுதா என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

ஜெயசுதாவின் சொந்த ஊரை உள்ளடக்கியுள்ள போளூர் சட்டமன்றத் தொகுதியில் உள்குத்து அரசியல் செய்யாமல், அந்த தொகுதியின் எம்எல்ஏவான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அடிபணிந்து அரசியல் செய்வதைப் பார்த்து கொதித்து போய் இருக்கிறார்கள் சேவூர் ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள்.


திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதா நியமனம் செய்யப்பட்டு 6 மாதங்கள் கூட முடியாத நிலையில், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர் பதவியையும் வழங்கி அங்கீகரிக்கப்பட்ட சேவூர் ராமச்சந்திரனை அடக்கி ஆள நினைக்கும் ஜெயசுதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தான், ஜெயசுதாவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், சேவூர் ராமச்சந்திரன், எரிமலையாக வெடித்திருக்கிறார்.


திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் சேவூர் ராமச்சந்திரன் போல, அமைதியான அரசியல்வாதியை பார்க்க முடியாது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் மாற்று கட்சியினரிடமும் நல்ல பெயரை பெற்றிருப்பவர். பிள்ளைப்பூச்சி போல எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாத சேவூர் ராமச்சந்திரனை அசிங்கப்படுத்த வேண்டும்.. அவருக்கு ஆதரவாக செயல்படும் ஆரணி ஒன்றிய அதிமுக நிர்வாகிகளை, பேரூர் கழக செயலாளர்களை கட்சி பதவியில் இருந்து தூக்கியெறி வேண்டும் என்பதுதான் ஜெயசுதாவின் தீய எண்ணமாகும்.

பொறுத்தது போதும்.. பொங்கி எழு மனோகரா என்ற வசனத்திற்கு ஏற்ப, சேவூர் ராமச்சந்திரன், பொதுக்கூட்ட மேடையில் ஜெயசுதாவுக்கு எதிராக எரிமலையாக வெடித்ததை பார்த்து, ஆரணி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

சேலம் ஆர்.இளங்கோவன்.. ஜெயசுதா

எடப்பாடியாருடன் மிகமிக நெருக்கமாக இருக்கும் செல்வாக்கு மிகுந்த அதிமுக விவிஐபியின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்பதாலேயே அராஜக அரசியலில் ஈடுபட்டு வரும் ஜெயசுதாவுக்கு, முட்டுக்கட்டைபோட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.

ஆரணி பொதுக்கூட்ட விவகாரம், எடப்பாடியாரின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. ஜெயசுதாவை விசாரணைக்கு அழைத்திருக்கிறார் எடப்பாடியார் என்கிறார்கள் ஆரணி அதிமுக மூத்த நிர்வாகிகள். சேவூர் ராமச்சந்திரனை அரசியலில் இருந்து அகற்றிவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் செல்லா காசாக்கிவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏவாகி, அமைச்சர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் ஜெயசுதாவின் ரகசிய திட்டமாகும்.

ஜெயசுதாவின் உண்மை குணத்தை அறிந்து கொள்ளாமல், அவருக்கு துணையாக நிற்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகவும் அரசியல் செய்வதற்கு ஜெயசுதா தயங்கவே மாட்டார் என்பதை விரைவில் புரிந்து வேதனையில் துடிக்கப் போகிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்கிறார்கள் அவரால் பதவி பறிக்கப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகிகள்.


திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஜெயசுதாவும் தங்களது வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களை பழிவாங்குவதற்காக இணைந்து நிற்கும் போது, எஞ்சிய இரண்டு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ராமச்சந்திரனும், தூசி மோகனும், அவரவர் மாவட்ட எல்லைக்குள் அமைதியாகவும் ஆர்ப்பாட்டம் இன்றியும் அரசியல் செய்வதைப் பார்த்து, 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடம் அதிமுகவுக்கு செல்வாக்கு கூடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் திருவண்ணாமலை அதிமுக மூத்தநிர்வாகிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவிற்கு நான்கு மாவட்டச் செயலாளர்கள் என்ற அடிப்படையில், நியமனங்களை விரிவுப்படுத்திய நேரத்தில், எஸ்.ராமச்சந்திரனும், தூசி மோகனும் கோஷ்டிப் பூசலை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நேரத்தில், ஜெயசுதா கோஷ்டிப் பூசலை பெரிதாக்கி, அதிமுக தொண்டர்களே ஒருவரை ஒருவர் தாக்கி, திருவண்ணாமலை மாவட்டத்தை ரத்த களரியாக்க துடிப்பதை பார்த்து மனம் நொந்து போய் இருக்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்கள்.

அனுபவம் மிகுந்த மூத்த நிர்வாகிகள் அதிகமாக உள்ள திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில், 6 மாதத்திற்கு முன்பு மத்திய மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெயசுதா மட்டுமே ஆணவத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாக ஜெயசுதாவின் அடாவடி அரசியலுக்கு எடப்பாடியார் கடிவாளம் போடவில்லை என்றால், போளூர், ஆரணி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்ட பாரதிய ஜனதா கட்சி அதிகமான வாக்குகளை பெற்றுவிடும் என்று கடுமையாக எச்சரிக்கிறார்கள் திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள்..

அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சாட்டையை சுழற்றுவாரா எடப்பாடியார்..