தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்..
பாரதிய ஜனதா ஆட்சியின் பத்தாண்டு கால ஆட்சியின் நிறைவாக, நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி, பிப்ரவரி 5 ம் தேதி இறுதி உரையாற்றினார். அப்போது, இந்தியாவை இந்து நாடாக விரைவில் மாற்றப்படும் என கூசகமாக தெரிவித்தார்.
தேசிய அளவில், காங்கிரஸ் கட்சியை அழித்து, மொத்தமாக இந்தியாவில் இருந்து துடைத்தெறிவதுதான் பாரதிய ஜனதாவின் ஒரே லட்சியம் என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்று தமது அடிமனதில் படிந்திருக்கும் ஆசையை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார் பிரதமர் மோடி.
543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களாக பங்கேற்கும் தகுதியை கொஞ்சம் கொஞ்சம் காங்கிரஸ் இழந்து 2019 முதல் 2024 வரை ஐந்தாண்டுகளில் இரட்டை இலக்கத்தில்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் என்பதை மறைமுகமாக எள்ளி நகையாடினார் மோடி.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் வாய்ப்பையும் காங்கிரஸ் இழந்து விடும் என்று சாபம் விட்ட மோடி, நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்களாக மட்டுமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் காலம் நெருங்கிவிட்டது. அப்படியொரு நிலையை பாரதிய ஜனதா கட்சி உருவாக்கும் என்று சபதமும் செய்திருக்கிறார் மோடி.
பிரதமர் மோடியின் சபதம், சாத்தியமான ஒன்றா.? காங்கிரஸ் இல்லாத நாடாளுமன்றம் என்பது நிஜமாவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்றால், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக பொதுமக்களின் செல்வாக்கை இழந்து விடவில்லை என்பது தான் கள யதார்த்தமாக இருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வட மாநிலங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. தென்னிந்தியா தான் காங்கிரஸ் கட்சிக்கு உயிரோட்டத்தை கொடுத்து இருக்கிறது.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்பிக்கள் கிடைத்திருக்கிறார்கள். பாரதிய ஜனதாவுக்கு கேரளாவில் ஒரு எம்பி கூட கிடைக்கவில்லை. 2019 ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, இன்றைக்கு இருப்பதைப் போல இந்தியா கூட்டணி உருவாகவில்லை. ராகுல்காந்தியின் நடைப் பயணமும் அந்த காலகட்டத்தில் இல்லாத போதும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை, பிரதமர் மோடியின் அதிகாரமோ, ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியோ அழித்துவிட முடியவில்லை.
பிரதமர் மோடிக்கு எதிராக தீவிர அரசியலை , கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி முன்னெடுத்திருக்கிறார். வயநாடு எம்பி என்ற முறையில் ராகுல்காந்தியை, கேரள காங்கிரஸும், மலையாள வாக்காளர்களும் இன்றைக்கும் கூட கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகித்தாலும் கூட கேளராவில் எதிரும் புதிருமாக நின்று இரண்டு கட்சிகளும் தேர்தலை சந்தித்து வருகின்றன. ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை, 2024 ல் அறுவடை செய்ய காங்கிரஸும், பாரதிய ஜனதாவும் எதிர்நோக்கியிருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியுடன் கேரளாவில் உள்ள பிராந்திய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாரதிய ஜனதாவுடன் மாநில அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வதற்கு தயக்கம் காட்டி வரும் இந்த நேரத்தில், கேரளாவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பாரதிய ஜனதாவைச் சேர்ந்த உறுப்பினர் வந்தால் கூட பிரதமர் மோடியின் பத்தாண்டு ஆட்சிக்கான வெற்றியாக கொண்டாடும் மனநிலையில்தான் கேரள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
கேரளாவை அடுத்து தமிழ்நாட்டில் இருந்து அதிகமான காங்கிரஸ் எம்பிகள், மக்களவைக்கு சென்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டைப் போலவே, 2024 லும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவு, கான்கீரிட் போல மிகவும் உறுதியாகவே இருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 தொகுதிகளை ஒதுக்கியது. தேனியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் மட்டுமே தோல்வியை தழுவினார். லட்டு போல, தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 காங்கிரஸ் எம்பிக்கள், டெல்லிக்குச் சென்றார்கள்.
2019 போலவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒற்றை இலக்கத்தில்தான் காங்கிரஸ் எம்பிக்கள் டெல்லி செல்வார்கள் என்பதுதான் இன்றைய தேதி வரை உள்ள நிலைமை ஆகும். திமுக கூட்டணியில் 7 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என்றாலும் கூட போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றிப் பெற்றுவிடும் என்பதுதான் இன்றைய தேதியில் உள்ள கள யதார்த்தம்.
திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி இல்லை என்பதால், வட இந்திய ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் போல, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று உறுதிபட கூறுகிறார்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள்.
தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வரும் காங்கிரஸ் எம்பிக்களை இன்னும் பத்தாண்டுகளுக்கு பிரதமர் மோடியால் தடை செய்து விட முடியாது என்கிறார்கள் திராவிட இயக்க பற்றாளர்கள். பிரதமர் மோடிக்கான எதிர்ப்பு அலையும், பாரதிய ஜனதாவுக்கு எதிராக சித்தாந்த ரீதியாக மாறுபட்டு நிற்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை, பத்தாண்டு காலத்தில் குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறும் பகுத்தறிவாளர்கள், தமிழ்நாட்டில் காங்கிரஸை எப்படி அழிக்க முடியாதோ, அதேபோலவே, கழகங்கள் இல்லாத ஆட்சியை தமிழ்நாட்டில் நிறுவ துடிக்கும் அண்ணாமலையின் ஆசையும் கூட இன்னும் பத்தாண்டுகளுக்கு சாத்தியம் இல்லாத ஒன்றுதான் என்று உறுதிபட கூறுகிறார்கள்.
2019 முதல் 2024 வரை ஐந்தாண்டு காலம் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 47 பேர் பங்கேற்றார்கள். ஆளும்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியான அந்தஸ்தை கூட காங்கிரஸால் பெற முடியாத அளவுக்கு எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கூட, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட கூடுதலான எம்பிக்களை 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுவிடும் என்று ஆரூடம் கூறுகிறார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.
கேரளம், தமிழ்நாட்டை தவிர்த்துப் பார்த்தால், 2019 ம் ஆண்டை விட கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் காங்கிரஸ், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிக எம்பி தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன.
கர்நாடகா மாநிலத்தில் 28 எம்பி தொகுதிகளில் 2019 தேர்தலில் ஒரே ஒரு இடத்தை தான் காங்கிரஸ் கட்சி பிடிக்க முடிந்தது. இன்றைய தேதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே கூட, நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வாகவில்லை. 2024 தேர்தலில் ஆளும்கட்சி பலத்தோடு பாரதிய ஜனதாவை வீழ்த்தி அதிக தொகுதிகளில் வெற்றிப் பெற காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
2019 தேர்தலில் பெற்ற வெற்றியை இழந்து விடக் கூடாது என்பதற்காகதான், மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆளும்கட்சி எனும் அதிகாரத்துடன் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடித்து, 2019 வெற்றியை சாத்தியப்படுத்திக் கொள்ளுமா பாரதிய ஜனதா கட்சி என்பதும் சந்தேகத்திற்குரியது என்றுதான் கர்நாடக மூத்த ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்கர்நாடகாவைப் போல, தெலங்கனாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
தெலங்கனாவில் 2019 தேர்தலில் பலம் பொருந்திய தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து களமாடிய காங்கிரஸ் கட்சி, 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2024 தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தலைமையில் அதிகமாக எம்பி தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன. தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தவிடுபொடியாக்கி, 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை பாரதிய ஜனதா கட்சி தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறார்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள்.
ஆந்திர பிரதேசத்தில் 2019 தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரஸும், அப்போதைய ஆளும்கட்சியான பாரதிய ஜனதாவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆந்திராவில் காங்கிரஸை விட செல்வாக்கு குறைந்து பலவீனமாக இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, 2024 தேர்தலில் மரியாதைக்குரிய வெற்றியை பெற முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முனைப்பு காட்டி வருகிறது.
தென்னிந்தியாவைப் போல, வட இந்தியாவில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சிக்கு, ஒரே ஒரு மாநிலம் மட்டுமே கை கொடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 8 எம்பிக்கள் டெல்லி சென்று இருக்கிறார்கள். 2019 தேர்தலில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் செல்வாக்கு கூட கை கொடுக்கவில்லை. 2019 தேர்தலில் 9 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றிருந்த போதும் கூட இரண்டு எம்பிக்கள் பாஜகவுக்கு கிடைத்தார்கள். ஆனால், 2019 தேர்தலில் 7 சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்றிருந்த ஆம் ஆத்மி, ஒரே ஒரு எம்பி தேர்தலில் வெற்றி பெறாத போதும், இன்றைய தேதியில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும்கட்சியாக அரியணையில் வீற்றிருக்கிறது.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி அங்கம் வகித்து வருவதால், காங்கிரஸ் கட்சியுடன் aதொகுதி பங்கீடுகளை சுமூகமாக ஆம் ஆத்மி கட்சி செய்து கொள்ளும் என்பதால், பாரதிய ஜனதாவுக்கு எதிராக 2024 தேர்தலில் இரண்டு கட்சிகளும் அதிக இடங்களை கைப்பற்றும் என்றே கூறுகிறார்கள் கருத்து கணிப்பு நிபுணர்கள்.
தென்னிந்தியாவில் கிடைக்கும் வெற்றிகளைப் போலவே, பஞ்சாபிலும் வெற்றியை கணிசமாக அதிகரித்துக் கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது என்று கூறும் கருத்து கணிப்பு நிபுணர்கள், 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட 2024 தேர்தலில் அதிக எம்பி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் பெறும். காங்கிரஸின் வளர்ச்சியை கண்டு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைவார்கள். 2024 தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு நிம்மதியை தரும் அதே நேரத்தில், காங்கிரஸ் எம்பிக்கள் இல்லாத லோக் சபா என்ற சபத்தை பிரதமர் மோடியால் சாதித்துக் கொள்ளவே முடியாது என்கிறார்கள்.
தேசிய அரசியலில் இருந்து காங்கிரஸ் கட்சியை எப்படி அகற்ற முடியாதோ, அதேபோல, தமிழ்நாட்டில் கழகங்களுடனான கூட்டணியை தவிர்த்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தனிக் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கூட இன்னும் பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சியை பிரதமர் மோடியால் அகற்றிவிடவே முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள் பகுத்தறிவு வாதிகள்.…