Sun. May 5th, 2024

நாடாளுமன்ற மக்களவையின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ஆற்றிய உரை, நாடு முழுவதிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியின் உரையை கிண்டலடித்திருப்பதும் கூட, தமிழகத்தை கடந்து வட மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களிடம் சூட்டை கிளப்பியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆவேசமாக கருத்து கூறி வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி சூளுரைத்தை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, 400 தொகுதிகளில் வெற்றிப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம் என்கிறார்கள் பாஜக முன்னணி நிர்வாகிகள்.

அகில இந்திய அளவில், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றும் அளவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக மிகவும் நம்பிக்கையோடு கூறினார்.
பிரதமர் மோடியின் உரையை சுட்டிக்காட்டி கிண்டலடிப்பதோ, பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரிக்கவில்லை என்று பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, நாடு முழுவதும் கள நிலவரம் எப்படியிருக்கிறது.. 2019 தேர்தலை விட 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி வகுத்து வரும் தேர்தல் வியூகங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், பிரதமர் மோடியின் உரையில் தெறிக்கும் நம்பிக்கையை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.


அயோத்தியில் ராமர் கோயிலை திறந்துவிட்டதால் மட்டுமே, நாடுமுழுவதும் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்துவிட்டது என்ற ஒற்றை நம்பிக்கையுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவில்லை.

ஹிந்தி மொழியின் தாக்கம் முழுமையாக நிறைந்துள்ள வடமாநிலங்களில் மட்டுமின்றி, கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று பகுதிகளிலும் பாரதிய ஜனதாவுடன் கைகோர்க்கவுள்ள பலம் பொருந்திய மாநில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி படிப்படியாக வெற்றியை பெற்று வருகிறது.


நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதற்கு முன்னோட்டமாகவே பாரதிய ஜனதா கட்சி, நாடு முழுவதும் அமைக்கவுள்ள கூட்டணி மூலம் பாரதிய ஜனதாவின் 400 தொகுதிகள் என்ற குறிக்கோள் சாத்தியமாவதற்கான அம்சங்கள் வெளிப்பட்டு வருகின்றன.

உத்தரப்பிரதேசம்


80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், பாரதிய ஜனதாவுக்கு எதிரான பிரதான மாநில கட்சிகளான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணையவில்லை.


பாரதிய ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் சமாஜ்வாதி கட்சியைப் போல, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை அகிலோஷை போல மாயாவதி ஏற்றுக் கொள்ளவில்லை. உத்தரப்பிரதேசத்தில், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸை எதிர்த்துதான் பகுஜன் சமாஜ் போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார் மாயாவதி.
மாயாவதியை தனித்து போட்டியிட வைத்ததிலேயே பாரதிய ஜனதாவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றும் 2019 எம்பி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 50 சதவீத வாக்குகளைப் பெற்று, 62 தொகுதிகளை கைப்பற்றியது. 2019 தேர்தலைப் போல, 2024 தேர்தலிலும் அமோக வெற்றியைப் பெறுவதற்கும், இன்னும் சொல்லப் போனால், 70 தொகுதிகள் வரை வெற்றி பெறுவதற்கு அயோத்தி ராமர் கோயில் திறப்பு கை கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறார் பிரதமர் மோடி.

பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியை எதிர்த்து, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும் காங்கிரஸும் எந்த மாயாஜாலத்தையும் செய்து விட முடியாது என்பதுதான் இன்றைய தேதியில் கள எதார்த்தமாக உள்ளது என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
2019ல் பாரதிய ஜனதா தலைமையில் அமைந்த கூட்டணியில், ஒன்று இரண்டு கட்சிகள் விலகியிருந்தாலும் வட, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் செல்வாக்கு மிகுந்த கூட்டணியைதான் பாரதிய ஜனதா கட்சி அமைத்து வருகிறது.

மகாராஷ்ட்டிரம்

இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முதலிடத்தில் இருந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு கடந்த 5 ஆண்டுகளில் அபரிதமாக கூடியிருக்கிறது. 48 எம்பி தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 2019ல் பாரதிய ஜனதா கூட்டணிக்கு கடும் போட்டியாளர்களாக இருந்த தேசியவாத காங்கிரஸ் இன்றைய தேதியில் பெரிய அளவிலான பிளவை சந்தித்து இருக்கிறது.

சரத் பவார் தலைமையை எதிர்த்து அவரது நெருங்கிய உறவினரான அஜித் பவார், தேசியவாத காங்கிரயை கைப்பற்றி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்று விட்டார். அஜித் பவார், பாரதிய ஜனதாவுடன் இணைந்துதான் எம்பி தேர்தலை சந்திக்கவுள்ளார்.

2019ல் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த சிவசேனாவும் பெரிய அளவில் பிளவு பட்டு இருக்கிறது. பால்தாக்ரேவின் புதல்வர் உத்தவ் தாக்ரேவை துணிந்து எதிர்த்து தனி அணி கண்ட ஏக்நாத் ஷிண்டே, பாரதிய ஜனதாவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு தலைமை ஏற்றிருக்கிறார். ஷிண்டே தலைமையிலான சிவசேனாதான், இன்றைக்கு செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சியாக இருக்கறிது.

மகாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய பலமான கூட்டணி, 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. 2019 தேர்தலை விட பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி, 48 தொகுதிகளில் 40 இடங்களை எளிதாக கைப்பற்றும் என்கிறார்கள் டெல்லியில் உள்ள மூத்த செய்தியாளர்கள். மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, காங்கிரஸும், சரத் பவாரின் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸும் மிகவும் பலவீனமானதாக உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரிகளே இல்லை என்ற சாதகமான சூழ்நிலைதான் உள்ளது.

பீகார்

பீகார் மாநிலத்திலும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாகதான் கள நிலவரம் உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை விட பாரதிய ஜனதா கூட்டணிக்கு, 2024 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி கிடைப்பதற்கு ராமர் கோயில் திறப்பு நிச்சயம் கை கொடுக்கும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

காங்கிரஸை முன்னிலைப்படுத்திய இந்தியா கூட்டணியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வந்துவிட்டதால், 2019 தேர்தலை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என்று உறுதிபட கூறும் பீகார் மாநில மூத்த செய்தியாளர்கள், 2014 ல் பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றிய 30 இடங்களுக்கு மேல் தற்போது கைப்பற்றினாலும் அதிர்ச்சியடைய தேவையில்லை என்கிறார்கள்.

பாரதிய ஜனதாவின் செல்வாக்கு பீகார் மாநிலத்தில் பன்மடங்கு அதிகரிப்பதற்கு ராமர் கோயில் திறப்பை வெறி பிடித்து ஆதரிக்கும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.

மேற்கு வங்காளம்..

பிரதமர் மோடியை வாழ்நாள் எதிரியாக பாவித்துக் கொண்டிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதாவை எதிர்ப்பதை விட அதிகமாக காங்கிரஸை ஆவேசமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி, இரண்டாம் கட்ட நடை பயணத்தை மேற்கொண்டிருக்கும் நேரத்தில், மம்தா அங்கம் வகிக்கும் இந்திய கூட்டணியின் செல்வாக்கை குறைக்கும் வகையில் கடுமையாக காங்கிரஸை விமர்சனம் செய்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் நிலைபாட்டை கொண்டிருக்கும் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த போதும், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று நிபந்தனை விதித்ததை சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் ஏற்கவில்லை.

தாய் வீடான காங்கிரஸையும், அதன் தலைவர்களான சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் அவமானப்படுத்தும் வகையில்தான் மம்தா பானர்ஜியின் தொகுதி உடன்பாடு உள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பொங்கினார்கள்.

ராகுல்காந்தியையும், சோனியா காந்தியையும் மேலும் மேலும் சீண்டும் வகையில், நாடு முழுவதும் 543 எம்பி தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 40 தொகுதிகளில் கூட தேசிய கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கிண்டலடித்தார் மம்தா பானர்ஜி.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சியை, படுகேவலப்படுத்தும் வகையில் மம்தா பானர்ஜி பேசி வருவது, காங்கிரஸை மட்டுமல்ல, பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவாக கூட்டணி அமைத்து அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் அவமானப்படுத்திவிட்டார் மம்தா பானர்ஜி என்று மனம் நொந்து போய் இருக்கிறார்கள் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக களமாடி வரும் பிராந்திய அரசியல் கட்சிகள்.

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரம் ஆகிய நான்கு மாநிலங்களில் மொத்தமாக உள்ள 210 எம்பி தொகுதிகளில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 170 இடங்களை கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறார் பிரதமர் மோடி.

பாஜக ஆளும் மாநிலங்கள்…

பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர் மற்றும் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள எஞ்சிய 8 மாநிலங்களிலும் சேர்த்து 150 எம்பி தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவது உறுதி என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

பாரதிய ஜனதா மற்றும் கூட்டணியுடன் ஆளாத மாநிலங்களில் குறைந்த பட்சம் 100 தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்குடன்தான், கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் புதிய கூட்டணிகளை உருவாக்க, மோடி, அமித்ஷா கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது.

வட இந்தியாவில் கூட்டணியை உறுதிப்படுத்தி வருவதைப்போலவே, தென்னிந்தியாவிலும் வெற்றிக் கூட்டணியை அமைக்க முனைப்பு காட்டி வரும் மோடி, அமித்ஷா ஆகியோரின் வியூகத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு, ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு முன் வந்திருக்கிறார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதா தலைமையில்தான் எம்பி தேர்தலை சந்திக்கவுள்ளது. தென்னிந்தியாவில், கேரளா, தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் மரியாதைக்குரிய வெற்றியை பெற பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வியூகம் வகுத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் அதிமுகவை தனித்து போட்டியிடாத அளவுக்கு, ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையாமல் தனித்து போட்டியிட துணிந்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி உள்பட 10க்கும் மேற்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிறைச்சாலைக்குதான் செல்ல வேண்டியிருக்கும் என்ற மறைமுகமாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.


உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணிக் கட்சிகளுக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கிறது என்ற அழைப்பும் கூட அதிமுகவுக்குதான் பொருந்தும் என்று கூறும் அரசியல் திறனாய்வாளர்கள், வழக்கம் போலவே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் கோபத்தை மூட்டும் வகையில் பேச வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வெகு விரைவாகவே, பாஜக மேலிடம் சரியான பாடத்தை புகட்டும் என்கிறார்கள் டெல்லியில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.

தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி எம்பி தேர்தலில் 30 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறும் அரசியல் திறனாய்வாளர்கள், தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுகதான், இன்றைய தேதி வரை காங்கிரஸ் கட்சியை மரியாதையுடன் நடத்தி வருகிறது.

வட இந்தியாவில், அகிலேஷ் யாதவும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜரிவாலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணில் அங்கம் வகித்தாலும் கூட, காங்கிரஸ் எதிர்பார்க்கும் அளவுக்கு எம்பி தேர்தலில் தொகுதிகளை ஒதுக்க விரும்பவில்லை.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க, இந்தியா கூட்டணியிலேயே காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவதால்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்களவையின் பார்வையாளர் மாடத்தில்தான் காங்கிரஸ் அமர வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடி சூளுரைப்பதற்கு அடித்தளம் அமைத்துவிட்டது.


ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு அபரிதமான செல்வாக்கு இருப்பதைப் போலவே, அயோத்தி ராமர் கோயில் திறப்பும் மூன்றாவது முறையாக மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியே அமைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் டெல்லியைச் சேர்ந்த அனுபவமிகுந்த ஊடகவியலாளர்கள்.

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையை கிண்டலடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகளுக்கு மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியை முதன்மைப்படுத்தும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறி வரும் 400க்கும் மேற்பட்ட எம்பி தொகுதிகளில் பாரதிய ஜனதா வாகை சூடி, மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று உறுதிபட கூறுகிறார்கள் அகில இந்திய பாஜக தலைவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *