Sat. May 18th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் முதல் அமைச்சருக்கு மிஞ்சிய அதிகாரம் படைத்தவராகவும், முதல்வரின் புதல்வரும் விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை குறைப்பவராகவும், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் அதிகார மமதையுடன் நடந்து கொள்வதாக, தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகள் மனம் வெதும்பி கூறிக் கொண்டிருக்கிறார்கள்.


முதல் அமைச்சரின் அலுவலகச் செயலாளர்களான கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ், மருத்துவர் உமாநாத் ஐஏஎஸ், சண்முகம் ஐஏஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோருக்கான முக்கியத்துவத்தை இரட்டடிப்பு செய்யும் வகையில், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் அர்ப்பணிப்பு கொண்ட செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், தனித்த ஆர்வத்துடன் தலைமைச் செயலகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுவதற்காக, அரசு துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்ட துறைச் செயலாளர்களை ஆலோசனைக் கூட்டம், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அன்றாடம் வாட்டி வதைத்து வருகிறார் என்று சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்க்கு எதிரான குற்றச்சாட்டுகள், தலைமைச் செயலகத்தில் அதிகமாகி கொண்டே வருகிறது.


தலைமைச் செயலாளரின் ஆர்வக் கோளாறைப் பார்த்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினே அதிருப்தி அடைந்துவிட்டார். அதன் எதிரொலியாகதான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினில் முகாமிட்டிருக்கும் முதல்வர், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் தொடர்பான காணொளி வாயிலாக ஆய்வை மேற்கொண்ட போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்யையே புறக்கணித்து விட்டார் என்று கூறி அதிர்வலையை உருவாக்குகிறார்கள் ஐஏஎஸ் உயர் அதிகாரிகள்.
முதல் அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வரின் அலுவலக செயலாளரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான நா.முருகானந்தம் ஐஏஎஸ், முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள நிதித்துறைச் செயலாளர் த. உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். முதல்வருடன் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றிருக்கும் முதல்வரின் அலுவலகத்தின் மற்றொரு முதன்மைச் செயலாளர் மருத்துவர் உமாநாத் ஐஏஎஸ்ஸும், நிதி நிலை அறிக்கை மற்றும் ஆளுநர் உரை தொடர்பான ஆய்வில் முதல்வருக்கு உதவியிருக்கிறார்.


மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முதல்வரின் ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் புறக்கணிக்கப்பட்டதின் பின்னணியை விவரித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், பணி மூப்பு அடிப்படையில், தலைமைச் செயலாளர் பதவிக்கு பின்தங்கியிருந்த போதும், முதல்வரின் அலுவலகச் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில், சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் ஐஏஎஸ், தலைமைச் செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டார். அவரை விட தகுதியில் உயர்ந்த, உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இருக்கும் போது, அரசு நிர்வாகத்தில் தனித்த செல்வாக்கை தேடிக் கொள்ள மாட்டேன் என சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், உறுதியளித்ததின் பேரில்தான், தலைமைச் செயலாளர் பதவியில் அவர் அமர வைக்கப்பட்டார்.


ஆனால், பரிதாபத்தின் பேரில் அமர்வதற்கு இடம் கொடுத்தால், படுப்பதற்கே இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் பேராசைப் போல, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது புதல்வரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இணையாக தமக்கும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தல் செல்வாக்கு இருக்கிறது என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் நடந்து கொண்டு வருவதுதான், தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்களாக பணியாற்றி வரும் ஐஏஎஸ் உயர் அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது என்கிறார் உயர் ஐஏஎஸ் அதிகாரி.


முதல் அமைச்சர் ஸ்பெயினில் முகாமிட்டிருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, ஒவ்வொரு துறைச் செயலாளராக அழைத்து ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் பல மணிநேரம், தலைமைச் செயலாளர் அறையிலேயே முடக்கி போட்டுவிடுகிறார் என்பதுதான் ஐஏஎஸ் உயர் அதிகாரிகளின் புலம்பலாக இருந்து வருகிறது. அதுவும், நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக, துறை வாரியாக மான்யக் கோரிக்கைகளை தயாரிப்பதற்கான பணிகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டிய நேரத்தில், தலைமைச் செயலாளர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி நேரத்தை வீணடிப்பதைதான் சகித்துக் கொள்ளவே முடியவில்லை என்கிறார்கள் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்.


முதல் அமைச்சர் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள மூத்த அமைச்சர்களின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய மான்ய கோரிக்கை கோப்புகளை, முதல்வரின் அலுவலகச் செயலாளர்கள் சிறப்புக் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், எல்லோரையும் விட தான்தான் உயர்ந்தவர் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே, தலைமைச் செயலாளர் தேவையற்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார் என்பதும் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டுமின்றி, மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களையும் கூட காணொளி வாயிலான ஆய்வுக் கூட்டங்களில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் வறுத்து எடுத்து விடுகிறார் என்பதும் பல மாவட்டங்களில் ஆட்சியராக பதவி வகித்து வரும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் மனக்குமறல்களாக இருந்து வருகிறது.

முதல் அமைச்சர் தலைமையில் நடைபெற வேண்டிய ஆய்வுக் கூட்டங்களுக்கு, அவரது புதல்வரும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறைக்கும் பொறுப்பு வகித்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அழைக்காமல், முதல்வர் ஸ்தானத்தை வகிப்பதற்கே தனக்கே அதிகாரம் இருக்கிறது என்பதை நிலைநாட்டும் வகையிலும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸின் செயல்பாடுகள் அமைந்திருப்பதை பார்த்து, திமுக ஆதரவு ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.


பிப்ரவரி 3 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் பேரிடர்களின் படிப்பினை தொடர்பான அனைத்துத்துறை செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்.

2023 ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இரட்டைப் பேரிடர் குறித்துதான் முக்கியமான ஆலோசனை நடைபெற்றது. டிசம்பர் மாதத்தில் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய பேய் மழை தாக்கத்தின் போது, முழுமையாக களத்தில் இருந்தவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான்.

பேரிடர் காலங்களில் களத்தில் செயல்பட்டவருக்குதான் பாதிப்பின் முழு விவரமும் தெரிந்திருக்கும். அரசு நிர்வாகத்தை கடந்து அரசியல் ரீதியாகவும் மக்களின் மனங்களை வெல்வதற்கு, முதல்வர் வெளிநாட்டில் இருக்கும் போது,அவரது புதல்வர் என்ற வகையில் கூட முக்கியத்துவம் கொடுக்காமல், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்திருக்கும் சிறப்பு செயலாக்கத் திட்டத்திற்கும் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்தான், இரட்டை பேரிடர்களின் படிப்பினைக் கருத்தரங்கத்தை நடத்தியிருக்க வேண்டும்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கருத்தரங்கத்தை நடத்தியிருந்தால், அவரின் அனுபவத்தை விரிவாக எடுத்துரைப்பதற்கு அரிய வாய்ப்பும், பேரிடர் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பதற்கும், நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வது குறித்தும், சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், உரிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் வழங்கியிருக்க முடியும்.

அரசியலில் மெருகு ஏற்றிக் கொள்வதைப் போல, ஆட்சி நிர்வாகத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கும். அப்படிபட்ட ஒரு நல்ல வாய்ப்பை, வேண்டும் என்றே தடுத்து விட்டார் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் என்கிறார்கள் திமுக ஆதரவு ஐஏஎஸ் அதிகாரிகள்.


முக்கியமாக, பேரிடர் படிப்பனை கருத்தரங்கு, ஒரு சில மணிநேரம் மட்டுமே நடைபெறவில்லை. நாள் முழுவதும் நடைபெற்ற அந்த கருத்தரங்களில் துவக்க நிகழ்வில் கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அதற்கும் கூட தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸுக்கு விருப்பம் இல்லாமல் போனதுதான், திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக அவரது சிந்தனை இருக்கிறதா என்று அச்சம் கொள்ள வைக்கிறது என்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையை பெற்றிருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.


முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயினில் முகாமிட்டிருக்கும் இந்த நேரத்தில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர், தத்தமது துறை தொடர்பான நிகழ்வுகளுக்கு அமைச்சர் உதயநிதியை தலைமை ஏற்க வைக்கிறார்கள். மூத்த அமைச்சர்களே, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குதான் முன்னுரிமை என்ற பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.


மூத்த அமைச்சர்களுக்கு இருக்கும் மாண்பு மற்றும் அக்கறை, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸுக்கு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணமே, தமிழ்நாடு அரசை நிர்வகிப்பதில் முதல்வருக்கு இணையான அதிகாரம் தனக்கும் இருப்பதாக சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், நினைத்துக் கொண்டிருப்பதுதான் என்று பொங்குகிறார்கள் திமுக ஆதரவு ஐஏஎஸ் உயரதிகாரிகள்.


தமிழக அரசில் இதற்கு முன்பு தலைமைச் செயலாளராக பதவி வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், பணி மூப்பு அடிப்படையில் உரிய தகுதியுடையவர்களாக இருந்த போதும் கூட, முதல் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் எண்ணவோட்டத்திற்கு ஏற்பதான், தலைமைச் செயலாளர் பதவிக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், முதல்வருக்கு இணையானவர் என்ற சிந்தனையோடு நடந்து கொள்வதற்கு மத்திய அரசில் உயர் பதவிகளில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுடனான நெருக்கமான நட்பின் காரணமாகவே, தமிழ்நாடு அரசில் தனித்த செல்வாக்கு படைத்தவர் என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள, தலைமைச் செயலாளருக்கு உரிய மரபை மீறி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வேதனைப் படுகிறார்கள், அரசு நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்ட தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்.


தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸின் ஆர்வக் கோளாறால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமா என்பதுதான், தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த துறைச் செயலாளர்களின் ஆதங்கமாக இருக்கிறது.