Fri. Nov 22nd, 2024

பாரதிய ஜனதா கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிமுக கூட்டணியில் செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சிகளை சேர்ப்பதற்காக ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார். ஜனவரி 9 ஆம் தேதியன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை பறிப்பது தொடர்பாக, தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக களப் பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடியார், உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு, அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் தான் இருக்கிறது. திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்திருப்பதை போலவே, அதிமுக தலைமையிலும் பலமான கூட்டணி அமையும் என உறுதிபட கூறியிருக்கிறார் எடப்பாடியார்.


திமுக ஒரு அணியாகவும் அதிமுக ஒரு அணியாகவும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், பாரதிய ஜனதா தலைமையில் மூன்றாவது அணி எம்பி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும் அரசியல் கட்சிகளுக்கு, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தும் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியினருக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணியினருக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க முடியாத நிலை இருக்கிறது.


பிரதமர் மோடிக்கு எதிரான அதிருப்தியை விட, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அதிருப்தி தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதால், அண்ணாமலை தலைமையிலான தேர்தல் கூட்டணி, ஒரு எம்பி தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலைதான் இன்றைய தேதியில் இருந்து வருகிறது.

பாரதிய ஜனதா கூட்டணியுடன் தான் நீடிக்கிறோம் என்று கூறி வரும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், 2019 நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிட்ட வேலூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடவுள்ளார் என்கிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள். வேலூர் தொகுதியின் தற்போதைய எம்பியான கதிர் ஆனந்த் மீதும் அவரது தந்தையும் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மீதும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் தீராத கோபத்தில் உள்ளனர்.


தொகுதி மக்களுக்கு மட்டுமின்றி, திமுக நிர்வாகிகளுக்கும் கூட துரைமுருகனாலும் கதிர் ஆனந்தாலும் ஒரு நன்மையும் இல்லை என்பதால், திமுக வேட்பாளராக வேலூர் தொகுதியில் மீண்டும் கதிர் ஆனந்த் களம் இறங்கினால், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சந்தேகமே இல்லாமல் எம்பி ஆகி நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதி என்கிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.

ஏ.சி.சண்முகத்தைப் போலவே, எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பச்சமுத்துவும், பாரதிய ஜனதா கூட்டணியில் தான் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள போவதாக அறிவித்து இருக்கிறார். பெரம்பலூர் எம்பி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருக்கும் பச்சமுத்து, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவும், சமுதாய வாக்குகளும் தன்னை எம்பி தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடும் என உறுதியாக நம்புகிறார்.

ஏ.சி.சண்முகம், பச்சமுத்து ஆகிய இரண்டு பேரை தவிர, தமிழ் மாநில காங்கிரஸும் புதிய தமிழகமும் பாரதிய ஜனதா கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக இதுவரை உறுதியான பதில்களை தெரிவிக்கவில்லை. இரண்டு கட்சிகளும் மதில் மேல் பூனையாக தான் இருந்து வருகின்றன.
மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசே அமையும் என்று வட மாநிலங்கள் முழுவதும் அரசியல் தலைவர்கள் ஆரூடம் கூறி வரும் நேரத்தில், மத்திய அரசில் அன்புமணி அமைச்சராக பதவியேற்க வேண்டும் என்ற தீராத ஆசையுடன் இருந்து வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுகவும் பாரதிய ஜனதாவும் ஒன்றாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.

திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கு டாக்டர் ராமதாஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காததால், அதிமுக கூட்டணியில் இணைந்துதான் எம்பி தேர்தலை டாக்டர் ராமதாஸ் எதிர்கொள்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.
திமுக கூட்டணியில் பாமகவுக்கு தேவையான தொகுதிகளில் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறும் அதிமுக மூத்த நிர்வாகிகள், இன்றைய தேதியில் 5 சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கி கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள்.
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி வந்தால், டாக்டர் ராமதாஸுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் அதிர்ச்சியளிக்கும் வகையில் பாடம் கற்பிக்கும் என்கிறார்கள் தேர்தல் கள ஆய்வாளர்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் போலவே, தேமுதிகவுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாழ்வா, சாவா போராட்டமாக தான் அமைந்திருக்கிறது. திருச்சி விழாவில் பேசிய பிரதமர் மோடி, மறைந்த நடிகர் விஜயகாந்த்தை பற்றி உணர்வுப்பூர்வமாக பேசியிருந்தாலும் கூட, பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக இணைந்து தேர்தலை எதிர்கொண்டால், மரியாதைக்குரிய தோல்வியை கூட எதிர்கொள்ள முடியாது என்று தேமுதிக நிர்வாகிகளே உறுதிபட கூறுகிறார்கள்.


பாட்டாளி மக்கள் கட்சி,தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக கூட்டணிக்கு மாற்றாக பலம் பொருந்திய கூட்டணியை அதிமுகவால் மட்டுமே அமைக்க முடியும். ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்ய, இன்றைய தேதியில் அதிமுகவுக்கு மட்டுமே முழுமையான வாய்ப்பு இருக்கிறது என்றும் உறுதிபட கூறுகிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கூட்டணி பேச்சு வார்த்தை சூடு பிடித்துவிடும் என்ற எண்ணத்தில்தான், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட செயலாளர்களிடம் இருந்து கேட்டு வாங்கியுள்ளார் எடப்பாடியார் என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.
திமுக மற்றும் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடியார். குறிப்பாக, மேற்கு மண்டலங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு, எம்பி ஆகி டெல்லிக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இபிஎஸ்.
கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தனது மகன் கே.பி.எம்.சதீஷை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று எடப்பாடியாருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.


தர்மபுரி தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மகன் சந்திரமோகனை நிறுத்த வேண்டும் என்று அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சேலம் தொகுதியில் அதிமுக மூத்த தலைவர் செம்மலையும் கோயம்புத்தூருக்கு சர்மிளா சந்திரசேகரும் பொள்ளாச்சிக்கு பேராசியர் கல்யாண சுந்தரமும் வேட்பாளராக அறிவிக்கப்பட 100 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் மேற்கு மண்டல அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
சர்மிளா சந்திரசேகர், கோவை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு பிரபலமானவர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி என்று கூறப்படும் சந்திரசேகரின் மனைவிதான் சர்மிளா. கோயம்புத்தூர் மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராகவும் சர்மிளா பெயர் தான் பரவலாக அடிபட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள் களம் இறங்கினால்தான், ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்க முடியும் என்று அதிமுக மூத்த தலைவர்கள், எடப்பாடியாருக்கு ஆலோசனைளை கூறி வருகிறார்கள்.

அந்த அடிப்படையில், கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன் வரிசையில், திண்டுக்கல் தொகுதியில் நத்தம் விசுவநாதனின் மருமகன் கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்படுவது தொடர்பாக, மூத்த நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டு வருகிறார் எடப்பாடியார்.


தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கூட எம்பி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்து கொண்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் தொகுதியிலும், என்.ஆர்.சிவபதி பெரம்பலூர் தொகுதியிலும் சிவகங்கை தொகுதியில் கோகுல இந்திராவும், விருதுநகரில் மாஃபா பாண்டியராஜனும், தென்காசியில் ராஜலட்சுமியும் அதிமுக சார்பில் போட்டியிடுவது குறித்து ஆதரவாளர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி தான், செல்வாக்கு மிகுந்ததாக இருந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு கால மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்துள்ள அதிருப்தி அலை, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அபாரமான வெற்றியை தேடி தந்து விடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறி வருகிறார். அதிமுக சார்பில் நிறுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களும் பலி ஆடுகள் தான் என்று கிண்டலடிக்கும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள்,

பாரதிய ஜனதா தலைமையில் 3 வது அணி அமைந்தால், திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி மிகவும் எளிதாகிவிடும் என்று மிகுந்த நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.
திமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை தலைமையில் ஒரு அணி, அதிமுக கூட்டணி ஒரு அணி, சீமான் ஒரு அணி என மூன்று அணிகள் போட்டியிடும் போது, தமிழக வாக்காளர்கள் சிறிதும் குழப்பமே இல்லாமல், திமுக கூட்டணியை தான் ஆதரிப்பார்கள் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.


திமுக கூட்டணி வேட்பாளர்களை தோற்க அடிப்பதை விட, எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிப்பதற்குதான் ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மும்மூர்த்திகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று உற்சாகம் பொங்க கூறுகிறார்கள் தென் மாவட்ட திமுக மூத்த தலைவர்கள்.

பாரதிய ஜனதா ஆதரவுடன் தேனி தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார் டிடிவி தினகரன். தேனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் பிரசாரம் செய்வதுடன், டிடிவி தினகரன் வெற்றி பெறுவதற்கு உயிரை கொடுத்து இருவரும் உழைப்பார்கள் என்கிறார்கள் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள்.


தேனி தொகுதியை டிடிவி தினகரனுக்காக விட்டுக் கொடுக்கும் ஓ.பி.எஸ்.ஸின் மூத்த புதல்வரும் தற்போதைய சிட்டிங் எம்பியுமான ரவீந்திரநாத், ராமநாதபுரம் தொகுதியை தேர்வு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கூட, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற்று விடக் கூடாது என்று ஓபிஎஸ், டிடிவி தினகரன், விகே சசிகலா ஆகிய மூன்று பேரும் சபதமே எடுத்திருக்கிறார்கள் என்று தகவல்களை கசிய விடுகிறார்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மூத்த தலைவர்கள்.


பிரதமர் மோடியை பகைத்துக் கொண்டிருப்பதுடன், தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிகுந்தவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், விகே சசிகலா ஆகிய மூவருக்கும் உரிய மரியாதை கொடுக்காமலும், கேவலமாக பேசிக் கொண்டிருக்கும் எடப்பாடியாருக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறோம் என்று ஆவேசம் காட்டுகிறார்கள் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த டெல்டா மாவட்ட அதிமுக தலைவர்கள்.