Sun. Apr 20th, 2025

தாரை வே இளமதி. சிறப்புச் செய்தியாளர்…

வெட்கத்தை விட்டு தான் சொல்ல வேண்டியிருக்கிறது., அறம் இணைய இதழ் தொடங்கி முதல் மூன்று ஆண்டு விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட்டதை நினைத்தால், உடல் குறுகிப் போவதை மறைக்க முடியவில்லை.

மிகுந்த நேர்மையுடன் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்ந்து பயணிப்பது என்பது அசாதரணமானது. இளமைக்காலத்தில் இருக்கும் துடிப்பும், உறுதியும் முதியோர் பருவத்தை எட்டும் போது, உடலும் மனமும் வைராக்கியத்தை உடைத்து சமரசத்தை நோக்கி பயணிக்க தூண்டும் நேரத்தில், அறத்தை அடி பிறழாமல் பின்பற்றுவதற்கு அதீத மனவலிமை வேண்டும்.

அந்தவகையில், ஊடகவியலாளர் பயணத்தில் மட்டுமல்ல, களத்திலும் இடையறாது நின்று  அநீதிகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவது என்பது சாவித்திரி கண்ணனுக்கு நிகர்… அவராகதான் இருக்க முடியும்.

அவரின் ஊடக பயணமும், சமூக போராட்டத்திற்கான பாதையும் எல்லோராலும் வடிவமைத்துக் கொள்ள முடியாது. உண்மையை பேச வேண்டும் என்றால், அறத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதை விட, தோழர் சாவித்திரி கண்ணனின் நட்பில் பழுது ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணவோட்டம்தான் முதன்மையாக இருந்தது.

ஆனால், 4 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் முதல் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் வரை ஒவ்வொருவருமே சாவித்திரி கண்ணனின் மனவேட்கைக்கு ஒப்பானவர்களாகவே காட்சியளித்ததுதான் அதிசயமான ஒன்று.

அறம் வாசகர்கள் அனைவருமே, அறத்தின் வழியில் நின்று இயக்கமாகவே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அளவிற்கு ஒரே விதமான எண்ண அலைகள்தான் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது. சாவித்திரி கண்ணன் மட்டுமின்றி அவரது மனைவி, அவர்களது புதலவர் என ஒட்டுமொத்த குடும்பமே அறச்சீற்றத்துடன் சமூகப் பணியாற்றுவது ஆச்சரியப்பட வைக்கிறது.

பொருளாதார இழப்புகளை பொறுத்துக் கொண்டு சாவித்திரி கண்ணன் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அவரது குடும்பத்தினர் அரணாக நிற்பது மிகப்பெரிய வரமாகும்.

அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் அண்மைக்காலமாக ஆண்டுதோறும் விழாக்களை நடத்தி, விருதுகளை வழங்கி ஜனரஞ்சமாகவே அமைந்துவிடும் நேரத்தில், அறிவுப்பூர்வமான விவாதத்தை ஆக்கப்பூர்வமாக நிகழ்த்துவதற்கு ஒட்டுமொத்த கூட்டத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

இந்த சமுதாயத்தின் மீது…. அரசியல் அமைப்பின் மீது… நீதி பரிபாலனத்தின் மீது..மத்திய, மாநில அரசுகளின் மீது…சாவித்திரி கண்ணனுக்கு எந்தவிதமான கோபம் இருந்து கொண்டிருக்கிறதோ, அதே கோபம் பார்வையாளர்களாக கலந்து கொண்ட வாசகர்கள் 99 சதவீதம் பேரிடம் காணப்பட்டதுதான் 3 ஆண்டுகளை கடந்து 4 ஆம் ஆண்டில் வீறுநடை போடும் அறத்தின் வெற்றி என உறுதியாக சொல்லிவிடலாம்.

கிட்டதட்ட 3 மணிநேரம் சாவித்திரி கண்ணன் என்ற ஒற்றை மனிதர் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையிலும், அவரின் பாதையும், பயணமும் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கான அச்சாணி என்பதை உறுதியாக நம்புவோர் நிறைந்த கூட்டமாகதான் அறத்தின் 4 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி அமைந்திருந்தது.

பார்வையாளர்களில் ஒருவர் கூட வெட்டியாக பொழுதை கடத்துபவர்களாக இல்லாமல் சமுதாய உணர்வோடு, மகாத்மா காந்தி கட்டமைத்த பாதையில் இந்தியாவை வழிநடத்த தன்னலமற்ற தலைவர்களை, வழிநடத்துபவர்களை ஆதரிப்பவர்களாக மட்டுமின்றி, கை கோர்த்து வீறுநடை போடும் தளகர்த்தர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது, சாவித்திரி கண்ணனின் மிகப்பெரிய பலமாகும்.

100 ஆயிரமாகவும் 1000 பத்தாயிரமாகவும் 10,000 லட்சமாகவும் பெருக, பெருக, இன்னும் சில ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வாலிபத்தை கடந்து நிற்போருடன் இளம் தலைமுறையினரும் கை கோர்த்தால், சாவித்திரி கண்ணன் கானும் கனவு, வெகு விரைவாகவே சாத்தியமாகிவிடும் என்ற நம்பிக்கை உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது.