டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்…
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு ஐபிஎஸ் ஓய்வுப் பெற்றப் பிறகு, அந்த பதவிக்கு நியமிக்கப்படும் காவல்துறை உயரதிகாரி யார் என்ற எதிர்பார்ப்பு தான் காவல்துறை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் இருந்து வந்தது.
ஆனால், புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு வெளியாவதற்குப் பதிலாக, காவல்துறை உயரதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 27 ஆம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உளவுத்துறையில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்து கொண்டிருந்த கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். ஜூலை 1 முதல் தேதியன்று பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆணையராக டேவிட்சன் ஐபிஎஸ் பதவியேற்பார் என்று பரவலாக கூறப்பட்டு வந்த நேரத்தில், காவல்துறை தலைமையிட ஏடிஜிபியாக டேவிட்சன் ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளதுதான் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மே 6 ஆம் தேதி நல்லரசு தமிழ் செய்திகளில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி செந்தில்வேலன் ஐபிஎஸ் ஆகியோர் விரைவில் பணியிட மாற்றம் செய்வார்கள் என்று பதிவு செய்திருந்தோம். அந்த செய்தியிலும் கூட டேவிட்சன் ஐபிஎஸ், சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராக வருவதற்கான முயற்சிகள் தான் நடைபெற்று வருவதாக கூறியிருந்தோம். ஆனால், அதற்குப் பதிலாக டேவிட்சன் ஐபிஎஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில், அவர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்திருந்த நம்பிக்கை, முழுமையாக தகர்ந்துவிட்டதுதான் காரணம் என்கிறார்கள் மூத்த காவல்துறை உயரதிகாரிகள்.
டேவிட்சன் ஐபிஎஸ் பணியிட மாற்றத்தில் நல்லரசுவின் கணிப்பு தவறியிருந்தாலும் கூட, செந்தில்வேலன் ஐபிஎஸ், ஒட்டுமொத்த உளவுத்துறைக்கும் பொறுப்பு ஏற்பார் என்று நல்லரசு கணித்திருந்தது, உண்மையாகி இருக்கிறது.
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் வேறு ஒரு அதிகாரியை நியமிக்காமல், அந்த பதவியையும் ஐஜி செந்தில்வேலன் ஐபிஎஸ் கூடுதலாக கவனிப்பார் என்று ஜுன் 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்தான், அடுத்த தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு தலைமை இயக்குனர் என்பது 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ், வரும் 30 ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால், அதற்கு முன்பாக புதிய டிஜிபி யார் என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால், ஜுன் 28 அல்லது ஜுன் 29 ஆம் தேதி வெளியாகிவிடும் என்று காவல்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் ஐபிஎஸ், ஆவடின காவல் ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரின் வருகையை ஆவடி காவல் ஆணையராக அலுவலக அதிகாரிகள் வரவேற்கவே செய்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் ஐபிஎஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதும் நல்ல முடிவு என்று கூறும் காவல்துறை மூத்த அதிகாரிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள்.
அருண் ஐபிஎஸ், செந்தில்வேலன் ஐபிஎஸ் ஆகியோரின் பணியிட மாற்றத்தால், தமிழ்நாடு காவல் துறையில் புதிய உத்வேகம் ஏற்படும் என்றும் உயர் அதிகாரிகள் அரசியல் அழுத்தங்களுக்கு அதிகமாக ஆட்படமாட்டார்கள் என்பதால், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் புத்துணர்ச்சி ஏற்படும் என்றும் சட்டம் ஒழுங்கை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அருமையான சூழல் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் சட்டம் ஒழுங்கு பிரிவில் நீண்ட அனுபவம் கொண்ட ஐபிஎஸ் உயரதிகாரிகள்.
ஜூலை 1 ஆம் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனராக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் பதவியேற்றவுடன், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டதைப் போல, விரைப்பும், விறுவிறுப்பும் அதிகரிக்கும் என்று உற்சாகமாக கூறும் காவல்துறை உயர் அதிகாரிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை வாரி வழங்குகிறார்கள்.