தாரை இளமதி.. சிறப்புச் செய்தியாளர்…
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனரான சைலேந்திரபாபு ஐபிஎஸ், ஜுன் மாதம் 30 ஆம் தேதி ஓய்வுப் பெறுகிறார்.
தமிழ்நாடு காவல்துறையில் செல்வாக்கு மிகுந்த பதவி என்றால், டிஜிபி என்று சொல்லப்படும் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு தலைமை ஏற்கும் இயக்குனர் பதவிதான்.
அந்தப் பதவியை குறி வைத்து நடைபெற்ற பந்தயத்தில், தனக்கு போட்டியாளரான அனைவரையும் வீழ்த்திவிட்டு, வெற்றிக் கொடியை நாட்டி விட்டார் தற்போதைய சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் என்பதுதான் இன்றைய தேதியில் சூடான செய்தி…
திமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமைக்கும் அவரது குடும்பத்திற்கும் உண்மையான விசுவாசத்தை காட்டி வருபவர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் மட்டுமே.
திராவிட மாடல் ஆட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது உண்மையான பாசத்தை காட்டியவர். அதை விட சிறப்பாக, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கூட மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளில் பகிரங்கமாகவே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர் உண்டு என்றால், அந்த பெருமை சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸுக்கு மட்டுமே சொந்தமாகும்.
காவல்துறையின் தலைமை இயக்குனர் பதவிக்கான தேர்வில், இன்றைய தேதியில் மூன்று அதிகாரிகள் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.
பணிமூப்பு அடிப்படையில், முதல் இடத்தில் இருப்பவர் பி.கே.ரவி ஐபிஎஸ்.. ஊர் காவல்படை டிஜிபியாக பணியாற்றி வரும் இவர் மீது, 2010 ஆம் ஆண்டில் திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த போது பதிவான நிர்வாக ரீதியிலான புகார் ஒன்று இன்றைய தேதியிலும் நிலுவையில் இருக்கிறது.
அதனால், பி.கே.ரவி ஐபிஎஸ்ஸுக்கு, சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறார்கள்.
இரண்டாம் இடத்தில் இருப்பவர் தற்போதைய பெருநகர சென்னை காவல்தறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ். மிகவும் பொறுமைசாலி, நிதானமானவர், உள்குத்து அரசியல் தெரியாதவர் போன்ற நற்பண்புகளால், முதல்வரிடம் தனி மரியாதை பெற்றிருப்பவர். கூடுதல் சிறப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் வேண்டப்பட்டவர்
இதன் காரணமாகவே, ஜூலை ஒன்றாம் தேதியன்று தமிழ்நாட்டின் டிஜிபியாக பதவியேற்கும் அதிர்ஷ்டம் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸுக்கு 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமான திமுக மூத்த அமைச்சர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.
மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஆதரவு மூலம் டிஜிபி பதவியை பெற்றுவிட காய் நகர்த்தி வருபவர் என்று காவல்துறை உயர் அதிகாரிகளே பகிரங்கமாக தகவல்களை கசிய விட்டார்கள்.
சைலேந்திர பாபு ஐபிஎஸ் ஓய்வுப் பெற்ற பிறகு, டிஜிபி அலுவலகத்தில் ஏ.கே.விஸ்வநாதன் அமர்ந்துவிடக் கூடாது என்ற மனநிலையில் உள்ள டிஜிபி அந்தஸ்திலான உயர் அதிகாரிகள் பலர், ஏ.கே.விஸ்வநாதனுக்கு எதிராக மறைமுகமாக அரசியல் செய்து வந்தார்கள்.
அதன் எதிரொலியாக, சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான தேர்வு பட்டியலில் கூட இடம் பெறாத அளவுக்கு ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் நிலை, பரிதாபகரமாக மாறியிருக்கிறது என்பதுதான் புதிய டிஜிபி ரேஸில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்புமுனையாகும்.
தமிழ்நாடு காவல்துறைக்கு புதிய டிஜிபி நியமனம் செய்யும் நடவடிக்கைகளின் போது, தகுதியுள்ள மூன்று டிஜிபி பெயர்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். அதில் இருந்து ஒருவரை தேர்வு செய்து, டிஜிபி ஆக நியமனம் செய்து கொள்ள மத்திய உள்துறை ஒப்புதல் வழங்குவதுதான் நடைமுறை.
இந்த மூன்று பேர் கொண்ட பட்டியலில் ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் பெயரே இடம் பிடிக்க கூடாது என்று டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு சில அதிகாரிகள் செய்த சூழ்ச்சிக்குதான் தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.
தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான மூத்த டிஜிபி சஞ்சய் அரோரா, அயல் பணிக்காக மத்திய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி மாநகர காவல்துறை ஆணையர் பதவி, மிகுந்த செல்வாக்கு உடையது. சஞ்சய் அரோராவின் குணநலன்களுக்கு ஏற்ப, மிகுந்த தகுதியுடையதும், மரியாதைக்குரிய பதவி என்பதாலும் டெல்லி மாநகர காவல்துறை ஆணையர் பதவி, அதீத செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது.
இந்திய திருநாட்டின் தலைநகரான டெல்லியில், காவல்துறை உயரதிகாரியாக இருப்பது மிகுந்த மரியாதைக்குரியது என்பதால் டிஜிபி சஞ்சய் அரோரா, மிகுந்த மகிழ்ச்சியுடனேயே டெல்லியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்ப அவருக்கு விருப்பமே இல்லை என்று கூறிக் கொண்டிருந்த நேரத்தில், டிஜிபி ரேஸில் அவரும் பங்கேற்ற விருப்பம் தெரிவித்து கொடுத்துள்ள கடிதம் தான், ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்ஸின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிவிட்டது என்கிறார்கள்.
சஞ்சய் அரோரா ஐபிஎஸ்ஸின் விருப்பத்தை அடுத்து, 4 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு, டிஜிபி தேர்வுக்குரிய தகுதி பட்டியலிலேயே ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் பெயர் இடம் பெறாமல் போய்விட்டது.
டிஜிபி தேர்வுக்குரிய தகுதிக்கு உரிய பட்டியலிலேயே ஏ..கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் பெயர் இடம் பெறக்கூடாது என்று வெறியோடு வேலைப் பார்த்தவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் கருத்துகள், அதிர்ச்சிக்குரியவையாக இருக்கிறது.
முந்தைய அதிமுக அரசில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 2017 முதல் 2021 வரையிலான ஆட்சியில், காவல்துறையில் செல்வாக்கு மிகுந்த பதவிகளிலேயே அமர்த்தப்பட்டவர் ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் என்றும், எஸ்.பி.வேலுமணியின் சொல் பேச்சை கேட்டு, சட்டத்தை தவறாக பயன்படுத்தி அறப்போர் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் மீது பொய் வழக்குகள் போட்டு பழிவாங்கியவர் என்றும் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள்.
அதே போல, திராவிட மாடல் ஆட்சியிலும் ஜனநாயக சக்திகள் மீது பொய் வழக்குகள் போட்டு பழிவாங்கும் நிலைமை வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்ஸுக்கு எதிராக முனைப்பான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம் என்று கூறி அதிர வைக்கிறார்கள்.
டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ்ஸை போல, தமிழகத்தின் அடுத்த டிஜிபியும் தமிழராகவே இருக்க வேண்டும் என்ற தமிழ் உணர்வாளர்களின் எண்ணத்திற்கு மாறாக, ஏ.கே.விஸ்வநாதன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், பலமாக எழுந்து நின்றுவிட்டது.
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ரேஸில், போட்டியாளர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சங்கர் ஜிவால் ஐபிஎஸ், ஜூலை முதல் தேதியில் இருந்து, சென்னை மெரினா கடற்கரையில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் வெள்ளை மாளிகையில் அமர்ந்து அதிகாரம் செலுத்தப் போகிறார் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் அவருக்கு மிக மிக வேண்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள்.
டிஜிபி மாளிகைக்குள் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் காலடி எடுத்து வைக்கும் அதே நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து செல்வாக்குமிகுந்த மற்றொரு உயரதிகாரி வெளியேறிவிடுவார் என்று பீடிகை போடுகிறார்கள் கண்ணியம் மிகுந்த காக்கிச் சட்டை அதிகாரிகள்.
டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ்ஸுக்கு இணையான அதிகாரத்தோடு திராவிட மாடல் ஆட்சியில் இரண்டு ஆண்டு காலம் கோலோச்சிய உளவுத்துறை உயர் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐபிஎஸ்தான் அவர் என்கிறார்கள்.
பெருநகர சென்னை காவல்துறை ஆணையராக, கூடுதல் டிஜிபி அந்தஸ்திலான டேவிட்சன் ஐபிஎஸ் பதவியேற்பார்.அவரின் பணியிட மாற்றத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒப்புதல் வழங்கிவிட்டார் என்கிறார்கள் உள்துறை அலுவலக அதிகாரிகள்.
திமுக அரசையே ஆட்டிப்படைக்கும் பதவியான உளவுத்துறையில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் டேவிட்சன் ஐபிஎஸ்ஸுக்கு ஏன் ஏற்படுகிறது என்று கேட்டால், ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது அல்லவா என்று பீடிகை போடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நிமிடமும் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து, அறிக்கைகளை தயாரித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கும் பொறுப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் உளவுத்துறையின் உயரதிகாரிக்குதான் இருந்து வருகிறது.
அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில், டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ்ஸும், உளவுத்துறை கூடுதல் டிஜிபியுமான டேவிட்சன் ஐபிஎஸ்ஸும், நட்புறவுடன் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள்.
டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ்ஸிடம் இருந்த நட்புறவை போல, சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸிடம் நட்பாக பழக கூடிய வாய்ப்பை பெறாதவர் டேவிட்சன் ஐபிஎஸ். அதனால், ஒரு உறையில் எதிரும் புதிருமாக இரண்டு கத்திகள் இயங்க முடியாது என்பதால், கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஐபிஎஸ், தாமாக விரும்பியே பணி மாறுதல் கேட்டிருக்கிறார். அவரின் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாக்குறுதி அளித்துவிட்டார் என்கிறார்கள் உள்துறை அலுவலக அதிகாரிகள்.
டேவிட்சன் ஐபிஎஸ்தான் அடுத்த சென்னை சிட்டி கமிஷனர் என்ற தகவல் உறுதியானவுடன், அந்த பதவியை குறி வைத்திருந்த ஒரு சில வடநாட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் ஏமாற்றமடைந்துவிட்டார்கள்.
உளவுத்துறையின் தலைமைப் பதவியில் இருந்து டேவிட்சன் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்படும் நேரத்தில், உளவுத்துறையின் தலைவராக வரப் போகிறார் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில், ஆச்சரியத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.
தற்போதைய உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன் ஐபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்துவிட்டார். அவருக்கு மேல் உயர் அதிகாரி ஒருவரை நியமித்து, செந்தில்வேலன் ஐபிஎஸ்ஸின் திறமைகளை முடக்க கூடாது. உளவுத்துறையின் தலைவர் பொறுப்புக்குரிய கடமைகளை மனசாட்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பை செந்தில்வேலன் ஐபிஎஸ்ஸுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் திட்டம் என்கிறார்கள்.
செந்தில்வேலன் ஐபிஎஸ் தலைமையில் உளவுத்துறை இயங்கினால், தமிழ்நாட்டின் காவல்தறைக்கு உண்மையிலேயே மிகுந்த மரியாதை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள் உளவுத்துறையில் பணியாற்றி வரும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்..
புதிய டிஜிபி… புதிய சிட்டி கமிஷனர்.. புதிய உளவுத்துறை தலைவர்..
ஜூலை மாதத்திற்குப் பிறகு சென்னையை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மேம்படுமா…
மும்மூர்த்திகளின் நிர்வாகத் திறமையை காண தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே காத்திருக்கிறது.
விடியல் ஆட்சிக்கு நல்ல பெயரை தேடி தர வேண்டும் என்பதுதான் ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.