Sat. Nov 23rd, 2024

திராவிட மாடல் ஆட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் அதிரடி மாற்றங்கள் நடைபெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் அடித்து கூறுகிறார்கள்.

தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ், ஜுன் மாத நிறைவில் ஓய்வுப் பெறுகிறார். அவருக்குப் பிறகு தலைமைச் செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்று பேச்சு, அனைத்து மட்டங்களிலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

முதல் அமைச்சரின் செயலாளர்களில் நெம்பர் 1 ஆக இருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் ஆசி பெற்ற ஐஏஎஸ் உயர் அதிகாரி ஒருவர்தான், தலைமைச் செயலாளர் பதவியில் அமர முடியும் என்ற பேச்சு, தலைமைச் செயலகத்தில் ஜனவரி மாதம் முதலே பலமாக கேட்டுக் கொண்டிருந்தது.

ஆனால், ஏப்ரல் முடிந்து மே மாதம் பிறந்துள்ள நிலையில், உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸே, முதல் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வேறு பதவிக்கு சென்றுவிடுவார் என்று அதிர்ச்சிக்குரிய தகவல்களை கசியவிட்டுள்ளார்கள் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் தீவிர விசுவாசிகளான அரசு அலுவலர்கள் பலர்.

முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக , திராவிட மாடல் ஆட்சியின் கடிவாளம், உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸிடம் தான் இருந்து வருகிறது.,

முதல் அமைச்சர் உள்பட தமிழக அரசின் அன்றாட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும், வழிநடத்துவதிலும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் ஆதிக்கமே இருந்து வருகிறது என்பது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் புலம்பல் மட்டுமல்ல,அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட மூத்த அமைச்சர்கள் பலரின் புகாராகவும் இருந்து வருகிறது.

குறிப்பாக, இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராகவும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய உடன்பிறப்பாகவும் இருந்து வந்த ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியே, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் ஆதிக்கத்தைப் பார்த்து வெறுப்படைந்தவர் என்று கூறுபவர்களும் முதல்வர் முக.ஸ்டாலினின் நம்பிக்கைப் பெற்ற மூத்த நிர்வாகிகள்தான்.. 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தவிர்த்து, எஞ்சிய அமைச்சர்கள், அவரவர் துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள், நிர்வாக சீர்த்திருத்தங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தாலும் கூட, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் பரிசீலனைக்கு கோப்புகள் செல்லும் போது, முட்டுக்கட்டை விழுந்து விடுகிறது என்பது ஒட்டுமொத்த அமைச்சர்களின் வருத்தமாகவே இருக்கிறது

இப்படியாக, மூத்த அமைச்சர்கள் முதல் இளம் அமைச்சர்கள் வரையிலான வருத்தங்களை எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். ஆனாலும், அமைச்சர்களின் வருத்தத்தை போக்கும் விதமாக, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை அழைத்து அறிவுரை கூறுவதற்கு பதிலாக, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை, அவரது பாணியிலேயே செயல்படும் வகையில் சுதந்திரம் கொடுத்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமான திமுக விசுவாசிகள்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக அமைச்சர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதைப் போலவே, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும், உதயச்சந்திரன் ஐஏஎஸ், முதல் அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து எப்போது வெளியேறுவார்.. அல்லது வெளியேற்றப்படுவார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடனேயே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மூத்த அமைச்சர்கள் முதல் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான ஐஏஎஸ் அதிகாரிகள் வரை, உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் பணியிட மாற்றத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருப்பதற்கான காரணங்கள் அதிகமாகவே இருந்து வருகிறது.

 முதல் அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் துறை வாரியான கோப்புகளுக்கு விரைவாக தீர்வு காணப்படுவதில்லை என்பதுதான் முதன்மையான குற்றச்சாட்டாக இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் முதல் அமைச்சரின் அலுவலக செயலாளர்கள் என்று நெற்றி பொட்டில் அடித்த மாதிரி விளக்கம் அளிக்கப்படுகிறது.  

 ஒவ்வொரு துறை வாரியாக நடைபெறும் பல கட்ட ஆலோசனைகளில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே தலைமைச் செயலாளருக்கும் முதல் அமைச்சருக்கும், கோப்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தேவையற்ற காலதாமதம் செய்யப்பட்டாலும் கூட கோப்புகளை பில்டர் செய்வதில் உதயச்சந்திரன் ஐஏஎஸ் கில்லாடியாக இருக்கிறார் என்று ஒரு சில நேரங்களில் உண்மையை போட்டு உடைக்கிறார்கள் மூத்த அமைச்சர்கள்.

திராவிட மாடல் ஆட்சி நிர்வாகத்தை தனது இரும்பு கரங்களால் கட்டுக்குள் வைத்திருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு, ஏப்ரல் மாதத்தின் இறுதி நாட்கள் மிகவும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. முதல் அமைச்சரின் நெம்பர் ஒன் செயலாளர் பதவியில் இருந்து வேறு பதவிக்கு சென்று விடலாம் என்ற எண்ணம் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கே ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் அவருக்கு மிகமிக நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரிகள்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை மனவருத்தத்தில் ஏற்படுத்தியதாக இரண்டு அம்சங்களை சுட்டிக்காட்டுகிறார்கள். ஒன்று, 12 மணிநேர வேலை சட்டம்.. மற்றொன்று, திருமண மண்டபங்களில் மதுபான விற்பனை.. இந்த இரண்டு விவகாரங்களிலும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் தலை வேகமாக உருட்டப்பட்டதால், மிகவும்  நொந்து போய்விட்டார். 2 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியதால், அயர்ச்சி அதிகமாகிவிட்டதாகவும், வேறு பணிக்கு மாறுதலாகி சென்றுவிடலாம் என்று அவரே தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக அமைச்சர்கள் வட்டாரத்தில்…. கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் பலவிதமாக பேசப்பட்டாலும் கூட, முதல் அமைச்சரின் செயலாளர் நெம்பர் 1 பதவிக்கு தகுதியானவராகவும், உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு இணையான திறமையுடைய மூத்த ஐஏஎஸ் அதிகாரியை அமர்த்தி அழகுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஏற்பட்டுவிட்டதுதான் உண்மை.

முதல்வரிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை உணர்ந்து கொண்டதாலேயே, பணி மாறுதல் பெற்று செல்வதற்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸும் தன்னை தயார்படுத்திக் கொண்டுவிட்டார் என்கிறார்கள்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் இடத்திற்கு வரப்போகிறவர் என்று முதல்வருக்கு மிகமிக நெருக்கமான விசுவாசிகள் சுட்டிக்காட்டும் அதிகாரியின் பெயரை கேட்டால்தான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்படுகிறது.

தற்போது ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளராக உள்ள அமுதா ஐஏஎஸ்தான், கூடிய விரைவில் முதல்வர் அலுவலக நெம்பர் ஒன் செயலாளர் பதவியில் அமர்த்தப்படுவார் என்று உறுதிபட கூறுகிறார்கள். 

அமுதா ஐஏஎஸ்ஸின் நேர்மை எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதுபோலவே, நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதற்கும் தயங்காதவர் என்றும் தனக்கு ஒதுக்கப்படும் பணிகளில், அனைத்து துறை பணியாளர்களையும் அட்டகாசமாக ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக பணியை நிறைவு செய்துவிடுவார் அமுதா ஐஏஎஸ் என்பதும், அவருக்கு எதிராக நிற்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பாராட்டுகளாக இருப்பதுதான் வியப்பிற்குரிய ஒன்று.

பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த போது அமுதா ஐஏஎஸ், பிரதமர் அலுவலக அதிகாரியாக டெல்லியில் பணியாற்றி வந்தார். முதல்வர் பதவி ஏற்றவுடன் முதல் முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், அமுதா ஐஏஎஸ் தமிழ்நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முதல்வரின் விருப்பத்தின் பேரில் தமிழ்நாடு திரும்பியநேரத்தில்,  ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளராக பதவியேற்றார் அமுதா ஐஏஎஸ், கிராமப்புற வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசு திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற, துறை அதிகாரிகளை, பணியாளர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கி கொண்டிருக்கிறார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு கலைஞர் மு.கருணாநிதி காலத்தில், ஊரக வளர்ச்சித்துறை எந்த பாய்ச்சல் காட்டியதோ, அதைவிட பலமடங்கு வேகத்தை இன்றைய தேதியில் ஊரக வளர்ச்சித்துறை பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நேரத்தில், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அமுதா ஐஏஎஸ்ஸை பார்த்து உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழர்கள் நெகிழ்ந்து போனார்கள். அதைவிட முக்கியமாக கலைஞரின் வாரிசுகள், உறவுகள், மூத்த திமுக நிர்வாகிகள், அமுதா ஐஏஎஸ்ஸின் மீது அளவுக்கடந்த நேசத்தை காட்டினார்கள்.

பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் கூட சுயநல சிந்தனை இல்லாமல் இருப்பவர் என்று பாராட்டுகளை பெற்றிருக்கும் அமுதா ஐஏஎஸ், அரசுப் பணி, மக்கள் பணி என்றால் அளவுக்கடந்த ஆர்வம் காட்டுவார் என்பதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கிறாரோ, அதைவிட கூடுதலாக அறிந்து வைத்திருப்பவர்  முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்தான் என்று வியப்புடனே கூறுகிறார்கள் முதல்வர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள்.   

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினின் அன்பிற்குரியவராகவே மாறிவிட்டவர் அமுதா ஐஏஎஸ், திராவிட மாடல் ஆட்சியின் புகழை மேலும் மேலும் வளர்த்தெடுப்பார் என்று துர்கா ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார் என்று கூறும் திமுக விசுவாசிகள், உதயச்சந்திரன் ஐஏஎஸ் அமர்ந்திருக்கும் முதல்வரின் அலுவலகத்தில் அமுதா ஐஏஎஸ் முழுமையான அதிகாரம் செலுத்தும் அதிகாரியாக செயல்பட வேண்டும் என்பதுதான் துர்கா ஸ்டாலினின் தணியாத ஆசை என்கிறார்கள்.

விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர், அமுதா ஐஏஎஸ்ஸுக்கு டெல்லியில் உள்ள மிதமிஞ்சிய செல்வாக்கை  உணர்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் இளைஞர் அணி நிர்வாகிகள்.

முதல்வர் அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டு காலம் பணியாற்றியதால், அயர்ச்சி அடைந்துவிட்டார் உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்பதால், அமுதா ஐஏஎஸ்ஸின் வருகையை அவரும் விரும்பவே செய்வார் என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ள அமுதா ஐஏஎஸ்ஸைப் பார்தது அவரை விட சீனியராக ஐஏஎஸ் அதிகாரிகள் கலக்கம் அடைத்திருக்கிறார்கள். அதைவிட பன்மடங்கு கலக்கம் அடைந்தவராக காணப்படுகிறார் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி என்று பொடி வைத்து பேசுகிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள்.

2021 ல் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதால் 16 மாதங்களுக்கு மேல் வருத்தத்தில் இருந்த ஐ.பெரியசாமி, ஆட்சி  தலைமையோடு முட்டி மோதி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.

ஆனால், அந்த துறையிலும் கூட நினைத்ததை சாதிக்க முடியாத அளவுக்கு முட்டுக்கட்டைகள் விழுவதை பார்த்துதான் நொந்து போய்விட்டார் அமைச்சர் ஐ.பெரியசாமி என்கிறார்கள் அவருக்கு மிக மிக நெருக்கமான விசுவாசிகள்.

ஊரக வளர்ச்சித்துறையில்  கடைநிலை பணியாளர்கள் மாற்றம் கூட விரும்பிய நேரத்தில் நடைபெறாமல் இழுத்துக் கொண்டே போவதுதான் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள்.

ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளரான அமுதா ஐஏஎஸ், நியாயமான கோரிக்கைகள் என்றால் உடனே உத்தரவு பிறப்பிக்கிறார். அரசியல்வாதிகளின் சிபாரிசுகள் என்றாலோ, துறையிலேயே பணியாற்றுபவர்கள் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தினாலோ, அவர்களுடைய பணி மாறுதல், பதவி உயர்வு போன்றவற்றை கிடப்பில் போட்டுவிடுகிறார் அமுதா ஐஏஎஸ் என்பதுதான் அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பினரின் பிரதான புலம்பலாக உள்ளது.

அமுதா ஐஏஎஸ்ஸின் அனுமதியில்லால், ஊரக வளர்ச்சித்துறையில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை ஒரு அணுவும் அசைவதில்லை என்பதுதான் அமைச்சர் ஐ.பெரியாசமியின் செல்வாக்கிற்கு சவாலாக எழுந்து நிற்கிறது. அமைச்சர் அலுவலகத்தில் இருந்து யார் பேசினாலும் கூட, துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்ஸிடம் பேசுங்கள் என படீர் என ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கூட கூறி விடுகிறார்கள்.

தலைமைச் செயலகத்தில் தொடங்கி ஊராட்சி மன்ற அலுவலகம் வரை, அமைச்சர் ஐ.பெரியசாமியின் உத்தரவைவிட செல்வாக்கு மிகுந்ததாக இருப்பது அமுதா ஐஏஎஸ்ஸின் நடவடிக்கைகள்தான்.

ஊரக வளர்ச்சி துறையில் பணி மாறுதல் கேட்டு அமைச்சர் ஐ.பெரியாசமியை அணுகி நிற்பவர்கள் சாதாரண திமுக நிர்வாகிகள் என்றால் கூட கவலைப்பட மாட்டார். ஆனால், ஆளும்கட்சியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுவாழ்வில் ஐ.பெரியசாமியோடு நீண்ட காலம் பழகியவர்களின் சிபாரிசுகளைக் கூட உடனுக்குடன் நிறைவேற்றி வைக்க முடியத நிலை ஏற்பட்டிருப்பதால்தான் நிம்மதியிழந்து தவிக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி என்கிறார்கள்.

ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து அமுதா ஐஏஎஸ்ஸை மாற்றினால்தான்,  திமுக நிர்வாகிகளை சந்தோஷப்படுத்த முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகமிக நெருக்கமான மூத்த அமைச்சர் ஒருவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார் அமைச்சர் ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமியின் வருத்தத்தை போக்கும் விதமாகவோ என்னவோ., தெரியவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு உயர் அதிகாரிகள் மட்டத்தில், அமுதா ஐஏஎஸ், முதல் அமைச்சரின் அலுவலக செயலாளராக விரைவில் பதவி ஏற்பார் என்று பேச்சு, தலைமைச் செயலகத்தில் திரும்பிய திசையெங்கும் எதிரொலிக்கிறது.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் அயர்ச்சி, அமைச்சர் ஐ.பெரியசாமியின் புலம்பல் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், இந்த பின்னணியில் அமுதா ஐஏஎஸ், முதல் அமைச்சரின் அலுவலகத்திற்குள் பாதம் பதிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று உறுதிபட கூறுகிறார்கள்.

அமுதா ஐஏஎஸ், முதல் அமைச்சரின் செயலாளராக பதவியேற்றால், தலைமைச் செயலகத்தில் இடி பலமாக கேட்கும் என்பதுதான் கூடுதல் தகவலாக இருக்கிறது. இரண்டு ஆண்டு காலமாக செல்வாக்கு மிகுந்த பதவியில் தனிக்காட்டு ராஜாவாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆட்டத்திற்கு அமுதா ஐஏஎஸ்ஸால் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மிகுந்த ஆர்வத்தோடு கூறுகிறார்கள்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு குரு பெயர்ச்சி சாதமாக இருக்குமா.. அமுதா ஐஏஎஸ்ஸை உச்சத்திற்கு கொண்டு செல்லுமா.. மே மாத நிறைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.