Fri. Nov 22nd, 2024

இன்றைய நல்லரசு செய்தியில், இதுவரை எந்தவொரு ஊடகமும், யூ டியூர்களும்  பேசாத அதிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஒன்றை பார்க்க இருக்கிறோம்.. பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி திமுக, ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.  

முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு  தமிழகம் முழுவதும் எழுந்து இருந்தது.

அதுபோல, தமிழ்நாடு காவல்துறைக்கு தலைமை ஏற்கப் போகிற தலைவர் யார் என்ற ஆவலும் பிறந்திருந்தது. தமிழ் மண்ணை தமிழர்கள் தான் ஆட்சிப் புரிய வேண்டும் என்ற தாகம் பெருமளவில் கரைபுரண்டு ஓடிய நேரம் அது.

முதல்முறையாக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை தமிழர்கள் தான் ஏற்க வேண்டும் என்ற முழக்கத்தை உள்வாங்கி கொண்டவராகதான் தனது நடவடிக்கைகள் மூலம் உணர்த்தினார்.

மனித நேயத்திலும், நேர்மைக் குணத்திலும் தளராத உழைப்பாலும் தமிழக மக்களிடம் நற்பெயரைப் பெற்றிருந்த முனைவர் வெ.இறையன்பு ஐஎஎஸ் அவர்களை தலைமைச் செயலாளராக நியமனம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முந்தைய அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலம் முழுவதும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் ஜார்ஜ் கோட்டைக்குள்ளே முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்களால் வர முடியாமல் போனதுதான் பரிதாபம்.

தமிழ்நாடு காவல்துறைக்கு தலைமை இயக்குனராக ஐபிஎஸ் சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டார்.  முந்தைய அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமும் முக்கியத்துவம் இல்லாத துறைகளிலேயே பணியாற்றியவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.

திமுக ஆட்சியில், அதுவும் முதல்மறையாக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறையின் உயர்ந்த பதவியான சட்டம் ஒழுங்கு துறையின் தலைமை இயக்குனராக சைலேந்திபாபு ஐபிஎஸ்ஸை  நியமனம் செய்தார்.

  தற்போதைய திமுக ஆட்சி, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோரின் பதவிக் காலம் இரண்டாயிரத்து 23 ஜூன் மாதம்  நிறைவடைய போகிறது.

60 வயதை இருவரும் நிறைவு செய்துவிடுவதால், முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸும், சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸும் அவரவர் வகிக்கும் பதவியில் இருந்து ஓய்வுபெற்றுவிடுவார்கள்.

தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோர் ஓய்வுப் பெறுவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும், அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற பேச்சும், அடுத்த காவல்துறை தலைமை இயக்குனர் யார் என்ற விசாரிப்பும் தலைமைச் செயலகத்தில் பலமாகவே கேட்க தொடங்கி இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் தலைமைச் செயலாளராக பதவியேற்ற முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை கூட ஓய்வு எடுக்காமல் பணியாற்றி வந்திருக்கிறார் என்ற செய்தி, முதல்வரிடம் மிகுந்த பாராட்டுகளை பெற்று தந்திருக்கிறது.

பகல் நேரத்தில் மட்டுமல்ல, இரவு நேரத்திலும் கூடகைபேசியில் தொடர்பு கொண்டால் பேசுகிற அதிகாரியாக இருந்து வருபவர் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் என்பதுதான் மூத்த அமைச்சர்கள் முதல் இளம் அமைச்சர்கள் வரையிலான பாராட்டாக இருந்து வருகிறது.  

முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸிடம் காணப்படும் நேர்மை, உழைப்பு, 24 மணிநேர மக்கள் சேவை ஆகியவற்றை தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள சாதாரண மக்களும் கூட அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

கடைநிலை ஊழியர் முதல் தலைமைச் செயலாளர் வரை ஓய்வுக்குப் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்பதை கொள்கையாக கொண்டிருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

அந்த வகையில், தற்போதைய தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு பதவி நீட்டிப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் உயர் அலுவலர்கள்.

அப்படியென்றால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் ? என்ற கேள்விதமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தோடு இணைத்துக் கொண்டிருக்கிற பிரபலங்களின் விசாரிப்பாக இருக்கிறது. இந்த கேள்வியை நல்லரசு எழுப்பியபோது, அதிர்ச்சிக்குரிய தகவல்களே கிடைத்தது.  

தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் தற்போது சீனியார்ட்டி என்று சொல்கிற முன்னுரிமை பட்டியலில் இருப்பவர்கள்… திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா. பணி மூப்பு பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வரும் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ். தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இரண்டாம் இடத்தில் இருப்பவர் திரு. டி.வி.சோமசுந்தரம் ஐஏஎஸ். தற்போது இவர் மத்திய அரசு பணியில் புதுடெல்லியில் பணியாற்றி வருகிறார்.

திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்….

மூன்றாம் இடத்தில் இருப்பவர் திரு. விக்ரம் கபூர் ஐஏஎஸ். தற்போது இவர் மாநில அரசில் செல்வாக்கு இல்லாத துறையான திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வருகிறார். நான்காம் இடத்தில் இருப்பவர் முனைவர் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ்.

திரு. விக்ரம் கபூர் ஐஏஎஸ்…

விளையாட்டுத்துறை செயலாளராக பணியாற்றி வரும் இவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வலதும் இடதுமாக இருப்பவர். உதயநிதி அமைச்சராக பதவியேற்கிறார் என்பது முடிவானவுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக அரசு நிர்வாகத்தின் யெளிவு சுளிவுகளை கற்றுத் தர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பணியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்தான் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ். முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பத்தின் பேரிலேயே தமிழக அரசு அழைத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.  

தலைமைச் செயலாளர் பதவிக்குரிய தகுதியில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மூப்பு அடிப்படையில் இருந்தாலும், கூடுதலாக ஒன்று இரண்டு உயர் அதிகாரிகளும் போட்டியில் இருக்கிறார்கள் என்கிறார்கள். தலைமைச் செயலாளர் தேர்வு தொடர்பாக

 மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில், திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா, திரு. விக்ரம் கபூர், முனைவர் அதுல்யா மிஷ்ரா ஆகிய மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியல் மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கும்.

இந்த மூன்று பேரில் முனைவர் அதுல்யா மிஷ்ரா ஐஏஎஸ் மட்டுமே முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனித்த தேர்வாக இருக்கும் என்கிறார்கள். தற்போதைய முதல் அமைச்சர் அலுவலகத்தின் செயலாளர்களில்  முதல் இடத்தில் இருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் சொல் பேச்சுக்கு கட்டுப்பட்டு செயல்படுபவர் அதுல்யா மிஸ்ரா என்பதால், நூற்றுக்கு இருநூறு சதவீதம் அடுத்த தலைமைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா ஐஏஎஸ்தான் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் உயரதிகாரிகள்.

இடது ஓரம் இருப்பவர் முனைவர் அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ்…

எந்தவிதமான சச்சரவும் இல்லாமல் அதுல்யா மிஷ்ரா ஐஏஎஸ், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தலைமைச் செயலாளராக பதவி ஏற்றுவிடுவாரா என்று கேட்டால், அவருக்கு போட்டியாளர்களும் இருக்கிறார்கள் என்கிறார்கள். தற்போதைய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸை விட பணி மூப்பு அடிப்படையில் முதல் இடத்தில் இருப்பவர் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ். பணி மூப்பு அடிப்படையில் பார்த்தால், 2021 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் ஆட்சியில் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்தான் தலைமைச் செயலாளராக பதவி ஏற்று இருக்க வேண்டும்.

ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் துறைக்கு செயலாளராக இருந்தவர் திரு.ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் என்பதால், திமுக ஆட்சி அவரை புறக்கணித்துவிட்டது. ஐஏஎஸ் அதிகாரிகளின் வாழ்நாள் கனவு என்னவென்றால், ஓய்வு பெறும் போது தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பதுதான். இரண்டாயிரத்து 24 ஆம் ஆண்டு வரை பணியாற்றக் கூடிய வாய்ப்பு இருப்பதால், அந்த பதவியை பெற்றுவிட திரு.ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் நிச்சயம் முயற்சிப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரிகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு , நன்கு தெரிந்தவர்தான் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ். கூடுதல் சிறப்பாக,  மத்திய அரசிலும் பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றி வரும் செல்வாக்கு மிகுந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர், திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்ஸுக்கு பரிந்துரை செய்வார்கள் என்று பொடி வைத்து பேசுகிறார்கள் சக ஐஏஎஸ் அதிகாரிகள். திமுக ஆட்சியில் அதுவும் திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் பரப்பி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக அரசில் பணியாற்றி வரும் உயர் ஐஏஎஸ் அதிகாரிகளின்   பரிந்துரையை ஏற்பாரா என்ற சந்தேகத்தை நல்லரசு முன் வைத்தது.

பலமாக சிரித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்,

மத்திய பாஜக அரசோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நட்புறவுடன்தான் இருந்து வருகிறது என்பது திமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கே நன்றாக தெரியும். திமுக எம்பிகளும், மூத்த அமைச்சர்களும் அத்தி பூத்தாற் போல தான்  டெல்லிக்கு செல்வார்கள். ஆனால், தமிழக அரசில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்

கடந்த 40 ஆண்டுகளாக மத்திய அரசாங்கத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருபவர்ககள்தான். துறை ரீதியாக அடிக்கடி டெல்லியோடு தொடர்பு கொண்டு பேசி வருபவர்கள்தான் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்.

அதுவும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இயல்பாகவே டெல்லியில் உள்ள மத்திய அரசு ஐஏஎஸ் அதிகாரிகளுடன மிகுந்த நட்புறவு இருக்கும் அந்த வகையில், டெல்லியில் உள்ள மத்திய பாஜக அரசு அதிகாரிகளுடனும், பிரதமர் அலுவலக அதிகாரிகளுடனும் நல்ல நட்போடு இருந்து வரும்  திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ், ஓய்வு பெறுவதற்கு முன்பாக தலைமைச் செயலாளர் பதவியை பெற நிச்சயம் முயற்சிப்பார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதல்வர் ஜெய் ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனிடம் மிகுந்த நட்பு பாராட்டி வருகிறார்.

அரசியலை கடந்து இருவருக்கும் இடையேயான நட்பின் காரணமாகதான், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் கடும் போட்டி இருந்த போதும் கூட, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் இரண்டாவது மகன் டாக்டா அசோக் சிகாமணி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் பின்னணியில், ஜெய் ஷா, சபரீசன் கூட்டணியின் காய் நகர்த்தல்கள்தான் அதிகமாக இருந்தன என்கிறார்கள் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சிலர்.

தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம், பணி மாறுதல் போன்றவற்றில் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை இயக்குவது சபரீசன்தான் என்பது ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லோருமே நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதல்வர் ஜெய் ஷாவை, பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்குப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான நண்பர்கள் மூலம் சபரீசனின் மனதை கரைக்க முயற்சிப்பார் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் எக்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

எந்த ரூட் எடுத்து போனாலும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்ஸுக்கு அவ்வளவு எளிதாக வெற்றி கிடைத்து விடக் கூடாது என்று முட்டுக்கட்டை போடுவார்  உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இன்றைய தேதியில், அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் உதயச்சந்திரன் ஐஏஎஸ் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார் என்கிறார்கள்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ் சாய்ஸ் யார் என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரின் அன்பை பெற்றிருக்கும்  மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா தான்.    விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதலாகவே, அவருக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்து வருகிறார் முனைவர் அதுல்ய மிஸ்ரா. சென்னையில் நடைபெறும் விளையாட்டுத்துறை சார்ந்த நிகழ்வுகளில் மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவருடன் செல்கிறார் ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விளையாட்டுத்துறைக்கு சம்பந்தம் இல்லாத விழா என்றாலும் கூட உதயநிதியோடு அதுல்யா மிஸ்ரா சென்றிருந்தார். உதயநிதியோடு பயணிக்கும் அதுல்யா மிஸ்ராவை அடுத்த தலைமைச் செயலாளர் ஆக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் மட்டுமல்ல, முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பமும், தேர்வும் அதுல்யா மிஸ்ரா தான் என்கிறார்கள்.

திரு.ஹன்ஸ்ராஜ் வர்மா, முனைவர் அதுல்யா மிஸ்ரா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் மூன்றாவதாக மற்றொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பெயரும் தலைமைச் செயலாளர் போட்டியில் அடிபட்டுக் கொண்டிருப்பதுதான் விநோதமான ஒன்று.

தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வருபவர் திரு. ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ். பணி மூப்பு பட்டியலில் இவர் மிகவும் பின்தங்கியிருந்தாலும் கூட இரண்டாயிரத்து 21 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சியை ஏற்ற போது, டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ். அவர் தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

அதன் காரணமாகவே மத்திய அரசு பணியில் இருந்த ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் தமிழகத்திற்கு வந்தார். அரசு துறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையான நகராட்சி நிர்வாகத்துறைக்கு செயலாளராக பணியமர்த்தப்பட்டார் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ். கடந்த ஆண்டே, தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவர் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ். நேர்மையானவர், கடுமையான உழைப்பாளி என்ற பெயர் எடுத்திருப்பவர் என்பதை விட பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் என்பது, அவருக்கு கூடுதல் சிறப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திரு. ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்…

இன்றைய இந்தியாவின் குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்ஸை நியமனம் செய்தால், திராவிட மாடல் அரசை முன்னெடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய செல்வாக்கை தேடித் தரும் என்கிறார்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக போராடி வரும் அரசியல் தலைவர்கள்.

தலைமைச் செயலாளர் பதவிக்கான போட்டியில்,

திரு.ஹன்ஸ்ராஜ் வர்மா,

திரு. அதுல்யா மிஸ்ரா,

திரு. ஷிவ் தாஸ் மீனா ஆகிய மூன்று ஐஏஎஸ் உயர் அதிகாரிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது.

அது முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் கூட இல்லை. முதல் அமைச்சர் அலுவலக செயலாளர்களில் நெம்பர் ஒன்னாக இருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ் கையில்தான் உள்ளது என்கிறார்கள் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.    

தலைமைச் செயலாளர் பதவிக்கு தகுதிக்கு உரியவராக திரு. விக்ரம் கபூர் ஐஏஎஸ் இருந்தாலும் கூட, திமுக ஆட்சியின் தலைமையில் உள்ளவர்கள், திரு. விக்ரம் கபூர் ஐஏஎஸ்ஸை தலைமைச் செயலாளர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க மாட்டார்கள். திமுக ஆட்சியாளர்களோடு திரு. விக்ரம் கபூர் ஐஏஎஸ்ஸுக்கு நல்ல நட்பு இல்லாததால், போட்டியே போட முடியாத இடத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார் என்பதுதான் சோகம்.

 முந்தைய அதிமுக ஆட்சியின் பத்து ஆண்டு காலத்தில் தலைமைச் செயலாளராக பதவி வகித்தவர்களுக்கு ஒரு முறை அல்ல, இரண்டு முறை கூட பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட வரலாறு எல்லாம் உண்டு. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பதவி நீட்டிப்பு என்ற பேச்சை கூட முதல்வர் விரும்புவது இல்லை என்கிறார்கள் மூத்த அமைச்சர்கள்.

அதைவிட முக்கியமாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கும் எந்தவொரு செயலலிலும் ஈடுபடும் எண்ணம், தற்போதைய தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு துளியும் இல்லை என்கிறார்கள் சக ஐஏஎஸ் அதிகாரிகள்.

சர்ச்சைக்குரிய விஷயங்களில் தனது பெயர் அடிபடுவதை ஒருபோதும் விரும்பாதவர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் என்பது, அவரை நன்கு அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே நன்றாக தெரியும். அதனால், பதவி நீட்டிப்பு வழங்கி, வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸை சிரமப்படுத்த மாட்டார் என்கிறார்கள் மூத்த திமுக நிர்வாகிகள்.