ஆர்.சி. பால் கனகராஜ் பெயரைக் கேட்டாலே….
ஐகோர்ட்டே சும்மா அதிருதுல்ல…
திரும்பி வந்துட்டார்ன்னு சொல்லு….
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா டைலாக்கை., சென்னை உயர்நீதிமன்றத்தில் பரவலாக கேட்க முடிகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலையொட்டி, தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜின் வெற்றிக்காக தீவிரமாக களமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவருக்கு விசுவாசமான வக்கீல்கள்.
அனுபவமிக்க மூத்த வழக்கறிஞர்கள் முதல் இளம் வழக்கறிஞர்கள் என பல வண்ண கலவையாக காட்சியளிக்கிறது ஆர்.சி. பால் கனகராஜுக்கான ஆதரவுக் கூட்டடம்…
கடந்த இரண்டு தேர்தல்களில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த ஆர்.சி. பால் கனகராஜ், மிகுந்த புத்துணர்வுடன் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முனைப்பான பரப்புரையை முன்னெடுத்துள்ளதை அடுத்து, அதிர்ந்து போய் இருக்கிறார்கள் வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் என்கிறார்கள் ஐகோர்ட் வளாகத்தில் வலம் வரும் மூத்த வழக்கறிஞர்கள் பலர்.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் பிரபலமானவராக இருப்பவர் மூத்த வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் கடந்த காலங்களில் வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே சேர சந்தித்தவர் ஆர்.சி. பால் கனகராஜ்.
தேர்தல் களத்தில் இருந்து ஒதுக்கி இருந்ததால், 2020 ஆம் ஆண்டுக்கு முன்பாக நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் தற்போதைய தலைவர் வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் எளிதாக வெற்றிப் பெற்றுவிட்டார்.
ஆனால், 2023 ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல், தலைவர் பதவிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம், மீண்டும் வந்திட்டேன்னு சொல்லு.. என்று பால் கனகராஜ் தலைவர் பதவியை குறி வைத்து களத்தில் குதித்திருப்பதுதான்.
முந்தைய தேர்தலைப் போல தலைவர் பதவியை கைப்பற்றுவது என்பது எளிதாக இருக்காது என்பதை உணர்ந்தவராக இருக்கிறார் வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர்கள்.
தேர்தல் களத்தில் எதிரி பலமானவராக இருக்கிறார் என்றாலே வெற்றி மாலை நழுவி போய்விடும் என்ற அச்சம் மோகன கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்களிடம் எழுந்திருப்பதை ஐகோர்ட் வளாகத்தில் ஒருமுறை சுற்றி வரும் போதே உணர்ந்து கொள்ள முடிகிறது.
கடந்த 5, 6 ஆண்டுகளாக ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடாமல் பார்வையாளராக மட்டுமே இருந்த பால் கனகராஜ், இளம் வக்கீல்களுடன் ஆரவாரமாக களத்தில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
களத்தில் யார் யாருக்கு இடையே போட்டி என்று கேட்டாலே, பால் கனகராஜும் மோகனகிருஷ்ணனும் தான் பலமாக மோதிக் கொள்கிறார்கள் என்கிறார்கள் ஐகோர்ட் வக்கீல்கள்.
இவர்கள் இருவர் மட்டும் தானா போட்டியாளர்கள் என்றால், இல்லை இல்லை ஏற்கெனவே வக்கீல் சங்க செயலாளராக இருந்த வேல்முருகனும் களத்தில் சீறிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
பொதுநல வழக்குகளை முன்னெடுக்கும் வழக்கறிஞர் ராஜசேகரும் தலைவர் பதவியை குறி வைத்திருக்கிறார்.
ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
ஆனால், களத்தில் யார் பலசாலிகள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில், தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் மோகன கிருஷ்ணனும் பால் கனகராஜும் தான் சரியான போட்டியாளர்கள்.
இன்றைய தேதியில் மோகன கிருஷ்ணனின் பலம் என்ன.. பலவீனம் என்ன..?
முதலில் பலத்தை பார்ப்போம்.
1)அமைதியானவர்.
2) பலமுறை தலைவராக பணியாற்றி அனுபவம் பெற்றிருக்கிறார்.
3) நீதிபதிகளுடனும் மூத்த வழக்கறிஞர்களிடமும் நன்மதிப்பு பெற்றிருக்கிறார்.
4) வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து சாதித்தும் இருக்கிறார்.
இனி மோகன கிருஷ்ணனின் பலவீனத்தை பார்ப்போம்..
1) உதவி கேட்டு வருகிற அடையாளம் தெரியாத வழக்கறிஞர்களின் கோரிக்கையை கேட்பதற்கு தயங்குபவர்.
2) தேர்தல் காலம் மற்றும் இதர நிகழ்வுகளில் எதிர் அணியில் நிற்கும் வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உதவ மாட்டார். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வழக்கறிஞர்களையும் எளிதில் நம்பிவிட மாட்டார். .
3) கொரானா காலத்தில் மூத்த வழக்கறிஞர்கள் முதல் ஜுனியர் வழக்கறிஞர்கள் வரை பொருளாதார சிக்கலை எதிர்கொண்ட போது வேடிக்கை மட்டுமே பார்த்தார் மோகனகிருஷ்ணன்.
4) கொரோனா தொற்றை காரணம் காட்டி நீதிமன்ற விசாரணையில் கட்டுப்பாடுகள் விதித்தக்கப்பட்டது.
அதனை எதிர்த்து குரல் கொடுக்க மிகவும் தயக்கம் காட்டியவர் மோகன கிருஷ்ணன் என்கிறார்கள்.
5) சங்க நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி தன்னிச்சையாக முடிவெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க மாட்டார் மோகன கிருஷ்ணன் என நீண்ட பட்டியலிடுகிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத ஒரே தேர்தலை, பொதுமக்களும் கதைக்கும் அளவிற்கு தலைவர் பதவிக்கு கடும் போட்டியை உருவாக்கியுள்ள பால் கனகராஜின் பலம்….பலவீனத்தை இப்போது பார்க்கலாம்…
1) பால் கனகராஜ் என்ற பெயரே மிகப்பெரிய பலத்தை உருவாக்கியிருக்கிறது.
2) வழக்கறிஞர்கள் மட்டுமின்றி உதவி என்று யார் வந்து நின்றாலும் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டார்.
3 ) பகல், இரவு என்று பாராமல் பால் கனகராஜை எளிதாக சந்தித்து தொந்தரவு செய்து உதவி பெற்று விட முடியும் என்ற பேச்சு பரவலாக கேட்க முடிகிறது.
4) சென்னை உயர்நீதிமன்றத்தின் எல்லைக்கு அப்பாலும், தமிழகத்தின் எந்த மூலையில் பிரச்னை என்றாலும் வக்கீல் படையோடு களத்தில் நிற்பவர் பால் கனகராஜ்.
5) கொரோனா காலகட்டத்தில் வழக்கு விசாரணையை எடுத்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று ஓங்கி குரல் கொடுத்தவர்.
6 )ஆளும்கட்சி – எதிர்க்கட்சி என்று மட்டும் இல்லாமல் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நல்ல நட்பை பேணி வருபவர்.
7) இளம் தலைமுறை வழக்கறிஞர்களின் வேடந்தாங்கல் பால் கனகராஜ் என்கிறார்கள்.
8) நண்பர்கள் தடுத்தாலும் கூட எதிரி, துரோகி என்று நினைவில் வைத்துக் கொள்ளாமல் உதவும் மனிதநேயமிக்கவர் பால் கனகராஜ் என்பதுதான் ஒட்டுமொத்த பலத்திலேயே தலைச் சிறந்த நற்குணமாக பார்க்கப்படுகிறது.
9) துணிச்சல் மிக்கவர்.
10) போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒருபோதும் தயங்காதவர்..
11) நண்பனுக்கு நண்பராகவும் எதிரிக்கும் கூட நண்பராகவும் இருப்பவர்..
பலமே பெரிய பட்டியலாக இருந்தால் பலவீனமே இல்லையா என்று கேள்வி எழும் அல்லவா…
1) ஐகோர்ட் சங்கத் தேர்தலில் தலை காட்டாத அரசியல் சார்ப்பு பால் கனகராஜுக்கு எதிராக இருப்பதுதான்.
2) தமிழக பாஜகவில் முக்கிய நிர்வாகி பால் கனகராஜ்.
3) பால் கனகராஜுக்கு போடும் ஓட்டு, பாரதிய ஜனதாவுக்கு போடும் ஓட்டு என்ற பரப்புரை சூட்டை கிளப்புகிறது.
வழக்கறிஞர் வேல்முருகனால் யாருக்கு பாதிப்பு ?
மோகன கிருஷ்ணன் மற்றும் பால் கனகராஜுக்கு இடையே தான் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த இருவரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய மற்றொரு போட்டியாளராக கருதப்படுபவர் மூத்த வழக்கறிஞர் வேல்முருகன்.
ஐகோர்ட் வக்கீல் சங்க செயலாளராக பதவி வகித்த காலத்தில் நேர்மையுடனும் துணிச்சலாகவும் பணியாற்றிய வேல்முருகனின் திறமையை இப்போதும் நினைவுகூர்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், இரண்டு பெரும் தலைகள் களத்தில் கடுமையாக மோதிக் கொள்ளும் நேரத்தில், மோகன கிருஷ்ணனின் வெற்றிக்கோ அல்லது பால் கனகராஜின் வெற்றிக்கோ பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் வழக்கறிஞர் வேல்முருகனால் வாக்குகளை பிரித்துவிட முடியாது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
சூடு பிடித்துள்ள ஆதரவு திரட்டல்
துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என்று பல பதவிகளுக்கு தேர்தல் நடந்தாலும் ஐகோர்ட் வக்கீல் சங்கத்தின் தலைவர் பதவிதான் ஃபயராக உள்ளது.
டிசம்பர் 19 நிலவரப்படி மோகன கிருஷ்ணனும், பால் கனகராஜும் சம பலத்துடன் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். வாக்குப்பதிவு நாளான ஜனவரி 8 ம் தேதி நெருங்க, நெருங்க, பால் கனகராஜிடம் மிதமிஞ்சி காணப்படும் மனிதநேயமும், முகம் தெரியாத நபர்களுக்கு கூட தன்னலம் கருதாமல் உதவக் கூடிய மனப்பாங்கும், வெற்றி மாலையை சூடும் வாய்ப்பை பால் கனகராஜுக்கு ஏற்படுத்தி தந்து விடும் என்கிறார்கள் ஐகோர்ட் மூத்த வக்கீல்கள் பலர்.
நான்காயிரத்து 500 வாக்குகளுக்கு மேல் பதிவாகும் நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மோகன கிருஷ்ணனும் ஆர்.சி. பால் கணகராஜுக்கு மட்டுமே சரி சமமாக வாக்குகளை பெறுவார்கள் என்கிறார்கள்.
தயாராக இருக்கும் வெற்றி மாலை….
பால் கனகராஜ் மட்டும் போட்டியில் இல்லை என்றால் தேர்தலுக்கு முன்பாகவே மோகன கிருஷ்ணனின் வெற்றி உறுதியாகிவிட்ட ஒன்று என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
பால் கனகராஜ் ஏற்படுத்தி வரும் கடும் போட்டியால், கடைசி நிமிடத்தில் நல்லவர், வல்லவர் என்ற பாராட்டுகளை எல்லாம் கடந்து மனிதநேயமிக்கவர் என்ற சிந்தனை பரவலாக எழுந்து, வெற்றி மாலையை சூடும் வாய்ப்பு பால் கனகராஜுக்கு அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிறார்கள் ஐகோர்ட் வளாகத்தில் தேர்தல் பரப்புரைகளை உன்னிப்பாக கவனித்து வரும் நடுநிலை வழக்கறிஞர்கள்.
நடுநிலையாளர்களின் ஆரூடம் உண்மையாகுமா.?..
ஜனவரி 9 ஆம் தேதி வரை காத்திருப்போம்.