Wed. Apr 24th, 2024

சோகத்தில் இருந்து மீளாத 8 மாவட்ட திமுக நிர்வாகிகள் குமறல்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த திமுகவும் எழுச்சி  பெற்று இருப்பதாக கூறப்படுவது  மாயத்தோற்றம்தான் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.

திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவும் அவரது மறைவுக்குப் பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்ற கலைஞர் மு.கருணாநிதி காலத்திலும் திராவிட வரலாற்றில் அழிக்க முடியாத சிறப்புகளைப் பெற்ற திருநெல்வேலி, காவிரி டெல்டா மாவட்டங்கள், மாங்கனி மாவட்டமான சேலம் ஆகிய மூன்று மண்டலங்களும்அமைச்சரவையில் பங்களிப்பு இல்லாமல் இருந்தது இல்லை.

1967 ல் முதல்முறையாக திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலம் முதல் 2016 வரையிலான காலம் கட்டம் வரை, கிட்டதட்ட 50 ஆண்டுகளில் 6 முறை அரியணையில் வீற்று இருந்தது திமுக.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி வரிசையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியின் 7 வது முதல்வர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்று இருக்கிறார். இரண்டு மாபெரும் ஆளுமைகள் ஆட்சிக்கு தலைமையேற்ற காலத்தில், திமுகவில் கேட்காத முணுமுணுப்புகள் தற்போதைய திமுக ஆட்சிக்கு தலைமை ஏற்று இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அதிகமாக கேட்பதுதான் கவலை அளிக்கக் கூடியாக ஒன்றாக உள்ளது. 

திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா மற்றும் அவரைத் தொடர்ந்து 1969 முதல் 5 முறை முதல் அமைச்சராக பதவியேற்ற மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் ஆட்சிக்காலத்தில் ஒருமுறை கூட டெல்டா மாவட்டங்கள், திருநெல்வேலி, தர்மபுரி, நாமக்கல் என்று மாவட்டங்கள் உதயமாவதற்கு முன்பு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாகவும், மாங்கனி மாவட்டமாகவும் திகழ்ந்த சேலத்திற்கும்  அமைச்சரவையில் பங்களிப்பு வழங்குவதை ஒருபோதும் புறக்கணித்ததே இல்லை.

1989 ஆம் ஆண்டில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்த போது, டெல்டா மாவட்டங்களின் கதாநாயகரான மறைந்த திமுக மூத்த நிர்வாகி கோ.சி.மணிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையை ஒதுக்கி தஞ்சை மண்டலத்தை அங்கீகரித்தவர் கலைஞர். தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்திற்கு மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அமைச்சராக்கி மண்ணின் மைந்தர்களை கொண்டாட வைத்தவர் கலைஞர்.

தெற்குச் சீமை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக முன்னோடியான எஸ்.தங்கவேலுக்கு கைத்தறி துறையை ஒதுக்கியவர் கலைஞர்  1996 ஆம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டபோது, டெல்டா மாவட்டங்களின் தளபதி கோ.சி.மணிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நிர்வாகத்துறை வழங்கப்பட்டு, அமைச்சரவையில் 4 ஆம் இடம் ஒதுக்கப்பட்டது.

நெல்லையை உள்ளடக்கிய தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தமறைந்த திமுக முன்னோடி ஆலடி அருணாவுக்கு சட்டத்துறையை ஒதுக்கியிருந்தார் கலைஞர் மு.கருணாநிதி. 2006 ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியிலும்

டெல்டா மாவட்டங்களின் தளபதி கோ.சி.மணிக்கு கூட்டுறவுத்துறை வழங்கப்பட்டது. 2006 ல் முதல்முறையாக அமைச்சராகவும், 2009 ஆம் ஆண்டில் துணை முதல் அமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டாம் நிலையில் இருந்த பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட அனைத்து மூத்த அமைச்சர்களின் ஆதரவும் அமோகமாக இருந்தது.

அரசியலிலும் வயதிலும் கல்வித்தகுதியிலும் கலைஞர் மு.கருணாநிதியை விட மூத்தவரான பேராசிரியர் க.அன்பழகன் மூன்றாம் இடத்தையே வகித்தார். திமுக தலைவரின் புதல்வர், இளைஞர் அணியின் எழுச்சி நாயகர் என்ற தகுதிகளைப் பெற்றிருந்த மு.க.ஸ்டாலினின் நீண்ட நெடிய உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் 2 ஆம் இடத்தில் இருந்து 3 ஆம் இடத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர் பேராசிரியர் க.அன்பழகன்.

2006 ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த டி.பி.எம்.மைதீன் கானுக்கு சுற்றுச் சூழல் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை வழங்கி அங்கீகரித்தவர் கலைஞர் மு.கருணாநிதி.

ஆலடி அருணா மறைவையடுத்து அவரது புதல்வி பூங்கோதைக்கு தகவல் தொழில்நுட்பத்துறையை வழங்கியிருந்தார் கலைஞர் மு.கருணாநிதி. 2011 – 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள்.

கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஒருபோதும் புறக்கணிக்கப்படாத திருநெல்வேலி, காவிரி டெல்டா, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களும் கலைஞரை மிஞ்சிய அரசியல் சாணக்கியராக கொண்டாடப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பது விசித்திரமான ஒன்று என்கிறார்கள் கலைஞர் காலத்து திமுக முன்னோடிகள்.

2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக அரியணைக்கு தலைமை வகித்த போதே பரவலாக முன் வைக்கப்பட்ட விமர்சனம், 18 மாதத்தை நிறைவு செய்த போதும் திமுக ஆட்சிக்கு எதிராக இப்போதும் உயிர்ப்புடன் இருப்பது அதிருப்தியை அதிகப்படுத்தக் கூடிய ஒன்று என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.

முதல்வர் .மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பங்கேற்கும் அளவுக்கு தகுதி படைத்தவர்கள் ஒருவர் கூடவா திருநெல்வேலி, தஞ்சை மண்டலம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இல்லையா என்று சற்று ஆவேசமாகவும் கேள்வி எழுப்புகிறார்கள் மண்ணின் மைந்தர்களான திமுக முன்னோடிகள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அப்துல் வஹாப், ராதாபுரம் அப்பாவு ஆகிய பேர் திமுக எம்எல்ஏக்களான உள்ளனர். சட்டப்பேரவை தலைவராக  மு. அப்பாவு பதவி வகித்தாலும் ராதாபுரம் திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கும் மகிழ்ச்சி இல்லை.

பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப் மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகிப்பதால் திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்தாலும் கூட சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அப்துல் வஹாப்புக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.

அப்துல் வஹாப் எம்எல்ஏ…

பால்வளத்துறை அமைச்சர் நாசர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் 2 ஆண்டுகள் முடியும் தருவாயில் தென்மாவட்ட சிறுபான்மையின மக்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ராஜா, திமுக எம்எல்ஏ ஆக உள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா 2016ல் வி.எம்.ராஜலெட்சுமியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக்கியதைப் போல, ராஜாவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக்கி இருந்தாலும்,  சங்கரன்கோவில் ராஜாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் கிடைத்திருக்கும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி…

வி.எம்.ராஜலெட்சுமியை விட கூடுதல் தகுதியுடையவர்தான் திமுக எம்எல்ஏ ராஜா. ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் ராஜா வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தற்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கடந்த 6 மாதமாகவே தன்னை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நீக்கி விடுவார் என்று தலைமைச் செயலகத்தில் துறை அதிகாரிகளிடம் கவலையுடனே பகிர்ந்து வந்துள்ளார். 18 மாதங்கள் அமைச்சராக நீடித்ததே கயல்விழி செல்வராஜைப் பொறுத்தவரை மிகப்பெரிய சாதனையாகும்.

அமைச்சர் நாசருடன் தென்காசி ராஜா எம்எல்ஏ…

தஞ்சை மண்டலத்தில் அதிமுகவை விட அதிக தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் வாகை சூடியிருக்கின்றன. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும் டெல்டா மாவட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தஞ்சை மண்டலத்திற்கு உட்பட்ட 18 தொகுதிகளில் திமுக கூட்டணி கைப்பற்றியவை மட்டுமே 15 சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் கோவி செழியன், கும்பகோணம் ஜி. அன்பழகன், திருவையாறு துரை சந்திரசேகரன், ஒரததநாடு எம். ராமச்சந்திரன், ஆகிய நான்கு திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கோவி செழியன் சட்டமன்ற கொறாடாவாக உள்ளார்.

துரை சந்திரசேகரன், 5 முறை எம்எல்ஏ.

திருவையாறு துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ…

1989 ல் முதல்முறையாக திருவையாறு தொகுதியில் தேர்தலை எதிர்கொண்ட துரை சந்திரசேகரன், நடிகர் சிவாஜி கணேசனை தோற்கடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

1996, 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களிலும் வெற்றிப் பெற்றதை அடுத்து 5 முறை எம்எல்ஏ ஆக இருந்து வருகிறார் துரை சந்திரசேகரன்.

தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருவதால், ஓரளவுக்கு தஞ்சை மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிருப்தி இல்லாமல் இருந்து வருகிறார்கள்.

தஞ்சை மண்டலத்தில் கோயில் நகரம் என்ற பெருமைக்குரிய புண்ணிய பூமியான கும்பகோணத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து 2021 வரை நடைபெற்ற ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுகதான் வெற்றிப் பெற்று இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989 ல் நடைபெற்ற தேர்தலில் தஞ்சை மண்டல தளபதி கோ.சி.மணி வாகை சூடியிருக்கிறார். 1996, 2001 மற்றும் 2006 ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கோ.சி.மணிதான் வெற்றி நாயகர். அவரின் மறைவுக்குப் பிறகு 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வாகை சூடியிருப்பவர் திமுக முன்னணி நிர்வாகியான சாக்கோட்டை க. அன்பழகன்.

கும்பகோணம் திமுக எம்எல்ஏ அன்பழகன்..

1952 ஆம் ஆண்டில் இருந்து 75 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் 7 முறை திமுக எம்எல்ஏவை தேர்ந்தெடுத்த கும்பகோணம் மண்ணிற்கு தொடர்ந்து திமுக அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கலாம் என்பது திமுக நிர்வாகிகளின் கோரிக்கை மட்டுமல்ல, பார்ப்பனர்களை உள்ளடக்கிய பக்தர்களின் விருப்பமாகவும் இருந்து வருகிறது.

திருவையாறு, கும்பகோணத்தை போலவே ஒரத்தநாடு தொகுதிக்கும் தனிப்பட்ட சிறப்பு இருந்து வருகிறது. ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெறும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வகிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்து விடுகிறது. ஆனால், 1967 ல் இருந்து 2021 வரை ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட அமைச்சராக பதவி ஏற்றதில்லை என்ற துரதிர்ஷ்டம் ஒரத்தநாட்டிற்கு உள்ளது.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி காலத்தில் கிடைக்காத முக்கியத்துவத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினாவது வழங்கியிருக்கலாம் என்பதுதான் ஒரத்தநாடு திமுக நிர்வாகிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. திமுக வரலாற்றில் தமிழகத்தில் உள்ள 233 தொகுதிகளுக்கு இல்லாத சிறப்பு, திருவாரூக்கு உண்டு. கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருப்பவர் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் கே.பூண்டி கலைவாணன்.

திருவாரூர் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன்..

1996 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக திமுக வெற்றிப் பெற்ற திருவாரூர் தொகுதியில் கலைஞர் மு.கருணாநிதி, 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தொகுதிகளில் திருவாரூரில் வாகை சூடியிருக்கிறார். திருவாரூரின் தற்போதை எம்எல்ஏ பூண்டி கலைவாணனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கலாம் என்பது கலைஞரின் உறவுகளின் வேண்டுகோளாக இருக்கிறது.

மன்னார்குடியில் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று இருப்பவர் டிஆர்பி ராஜா. திமுகவின் பொருளாரும் திமுக மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் புதல்வர் தான் ராஜா. ஒரே குடும்பத்தில் இருவருக்கு பதவியா என்ற விமர்சனத்தை தவிர்ப்பதற்காக டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என்ற வாதத்தை மன்னார்குடி திமுக நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ள தயாராகவே இல்லை. 

திருநெல்வேலி, தென்காசி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை விட சோகமானது நாகை மாவட்டம் தான்.  6 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட இந்த மாவட்டத்தில் ஒரே ஒரு திமுக எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார் மதிவாணன்.

தாட்கோ தலைவர் மதிவாணன் எம்எல்ஏ..

திருவாரூர் தொகுதியில் 2006 ல் வெற்றிப் பெற்றார். அப்போது பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கலைஞர் மு.கருணாநிதி காலத்தில் இருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் உ.மதிவாணன், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக இருந்த காலத்தில் அவரின் விசுவாசியாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

அதே விசுவாசத்துடன் தற்போதைய இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் காட்டி வருகிறார் உ.மதிவாணன். 2016 தேர்தலிலும் தொடர்ந்து 2021 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ள உ.மதிவாணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தால், நாகை மாவட்ட மக்களும் திமுகவினரும் தாழ்த்தப்பட்ட சமுதாயமும் உற்சாகமடைந்திருப்பார்கள்.

அமைச்சரவையில் இடம் இல்லையென்றாலும் கூட,உ.மதிவாணனின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் திமுக விவசாய தொழிலாளர் அணித் தலைவராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நியமித்து இருப்பது ஒருவகையிலான ஆறுதல் என்கிறார்கள் நாகை திமுக முன்னோடிகள்.

நெல்லை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதைப் போலவே, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் என்ற வகையில், கிருஷ்ணனிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்திற்கும் திமுக அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 எம்எல்ஏக்களில் பர்கூர் தே.மதியழகன், ஓசூர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் திமுக எம்எல்ஏக்கள்.  ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அண்மையில் அவரது குடும்பத்தில் நேரிட்ட இரண்டு துக்க நிகழ்வுகள், ஒட்டுமொத்த கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவினரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மனைவியை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே பிரகாஷ் எம்எல்ஏவின் ஒரே மகன், பெங்களூரில் கார் விபத்தில் பலியானார்.

ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பிரகாஷுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருந்தால், அரசு நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கான சேவை என்று பரபரப்பாகி குடும்ப சோகத்தில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றிருப்பார் என்கிறார்கள் திமுக எம்எல்ஏ பிரகாஷின் ஆதரவாளர்கள்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக எம்எல்ஏ இல்லை. தருமபுரி எம்பியாக திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார் சேவையாற்றி வந்த போதும், சட்டப்பேரவையில் தர்மபுரி மாவட்டத்தின் குரலாக முழங்குவதற்கு ஒரு திமுக எம்எல்ஏ கூட இல்லை என்பது திமுக நிர்வாகிகளின் சோகமாகும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி வரிசையில் சேலம் மாவட்ட திமுகவினரும் மகிழ்ச்சி ஆக இல்லை.. 11 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு திமுக எம்எல்ஏ தான்.. 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வழக்கறிஞர் ராஜேந்திரன்..

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரான ராஜேந்திரன், முதல்வர் மு. க. ஸ்டாலினோடு 30 ஆண்டுகள் நட்பு கொண்டவர்.. மாணவப் பருவத்தில் திமுகவில் ஐக்கியமாகி போராட்டங்களை முன்னெடுத்தவர், திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆக பதவி வகித்த காலத்தில் மு. க. ஸ்டாலினுடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்..

சேலம் மாவட்டம் என்றாலே வீரபாண்டி ஆறு முகத்தின் நினைவுகள் தான் இன்றைக்கும் திமுக தொண்டர்களுக்கு வரும்.. கலைஞர் உயிரோடு இருந்த காலத்தில் தனது வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார்.. வாரிசு அரசியல் தலை தூக்குகிறது என்று விமர்சனம் செய்வார்கள் என்று கலைஞர் கூறினார்.. அப்படி என்றால் மு. க. ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட மாட்டாரா என்று எதிர் கேள்வி கேட்டு கலைஞர் மு. கருணாநிதியை கோபப் படுத்தியவர்  வீரபாண்டி ஆறுமுகம்..

திமுக தலைவரையும் இளைஞர் அணி செயலாளரான மு. க. ஸ்டாலினையும் ஒருசேர எதிர்த்து அரசியல் செய்த வீரபாண்டியாரையே துணிந்து எதிர்த்தவர் வழக்கறிஞர் சேலம் ஆ. ராஜேந்திரன் எம்எல்ஏ.. அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சேலம் திமுக நிர்வாகிகளிடமும் பொதுமக்களிடம் இருந்து வந்தது.. ஆனால், சேலம் மாவட்ட திமுகவினரின் எதிர்பார்ப்பு மட்டுமின்றி, பொதுமக்களின் நம்பிக்கையையும் தகர்த்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் விசுவாசிகள்.

சேலம் வழக்கறிஞர் ஆ.ராஜேந்திரன் எம்எல்ஏ…

திமுக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்ட வேளையில், கடந்த 18 மாதங்களில் பொதுமக்களிடம் மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்து இருக்கும் அமைச்சர்கள் நாசர், கயல்விழி செல்வராஜ், மருத்துவர் மதி வேந்தன், க. ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை நீக்கிவிட்டு  8 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பங்களிப்பு வழங்கியிருந்தால் கலைஞரை மிஞ்சிய சாணக்கியர் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டலாம் என்கிறார்கள் பேரறிஞர் அண்ணா காலத்தைச் சேர்ந்த திமுக முன்னோடிகள்.

தனது இறுதி மூச்சு வரை குடும்ப அரசியலை கைவிடாத கலைஞர் மு.கருணாநிதி கூட தன் வாழ்நாளில் தீவிர விசுவாசிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அரவணைத்தே வந்தார். ஆனால், இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின், அரசியலில் உச்சம் தொட்ட காலம் முதல் அவரின் வளர்ச்சிகாக தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்தவர்களை முழுமையாக கைவிட்டுவிட்டார். அவருக்கு விசுவாசமாகவும், உண்மையான கட்சிப் பற்றோடும் பயணித்த 30 ஆண்டுகள் வீணாகிவிட்டது. அதை நினைத்தால் மனஉளைச்சல்தான் அதிகமாகிவிடுகிறது என்று சோக கீதம் வாசிக்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினோடு சமகாலத்தில் அரசியல் பயணம் மேற்கொண்ட முன்னாள் திமுக இளைஞரணி நிர்வாகிகள்.

காலம் மட்டுமல்ல, சுயநல அரசியல் நடத்தும் பாடமும் கொடுமையானது.