Sun. Nov 24th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

திமுக அமைச்சரவை மாற்றத்தில் வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் பலிகடா ஆன விஷயத்தை சிரிப்பை அடக்க முடியாமல் விவரிக்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.

நடிகர் விஜயின் திருப்பாச்சி படத்தில் இடம் பெற்றுள்ள நகைச்சுவை காட்சியை சுட்டிக்காட்டி வனத்துறை அதிகாரிகள் சொல்கிற விடயத்தை கேட்போருக்கும் சிரிப்பு நிச்சயம் வரும்.

மின்சாரத்துறை எதிர்பார்த்த நேரத்தில், ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டதால், மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் வருத்தம் இன்னும் தீரவில்லை என்று ஏற்கெனவே நல்லரசு சிறப்பு செய்தி மற்றும் யூடிப்பில் தகவல் பகிர்ந்து இருந்தது. …

அந்த செய்திகளில்,  வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரனின் துறை மாற்றப்பட்டதற்கு காரணம் என்று  பட்டு படாமல் வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் பற்றிய தகவலை குறிப்பிட்டு இருப்போம்.

உண்மையைதான் நல்லரசு சுட்டிக்காட்டியிருக்கிறது என்று இப்போது மனம் திறக்கும் வனத்துறை அதிகாரிகள், திரைமறைவில் நடந்த விஷயங்களைப் பற்றி விரிவாக பேசினார்கள்.  

வனத்துறைக்குள்ளேயே கிளுகிளுப்பாக பகிரப்பட்டு வரும் விஷயத்தை பொதுமக்கள் பார்வைக்கும் வைக்க வேண்டும் என்று நல்லரசு விரும்புகிறது. .

நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்பது  தலைமைச் செயலகத்துக்கு நாள்தோறும் அல்ல, எப்போதாவது ஒருநாள் சென்று வருகிறவர்கள் கூட கேள்விப்பட்டிருப்பார்கள்.

சுப்ரியா சாகு ஐஏஎஸ்க்கு பல முகங்கள் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையில் அமைச்சர் க.ராமச்சந்திரனிடம் இருந்து வனத்துறை பறிக்கப்பட்ட விவகாரம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

வனத்துறை பணியை ரசித்து ரசித்து செய்து கொண்டிருப்பவர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்று கூறும் அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள், கூடவே அவர் கறார் அதிகாரி என்பதை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. .

பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வரும் வனத்துறை செயலாளரின் நடவடிக்கைகள் அதே துறை அமைச்சரான ராமச்சந்திரனுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அமைச்சர் என்பதால் துறைச் செயலாளர் தனது அதிகாரத்திற்கு பணிந்து நடக்க வேண்டும் என்று எண்ணத்திலேயே சுப்ரியா சாகு ஐஏஎஸ்ஸை எதிர்கொண்டார்.  

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். அதுவும் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் வனத்தை பற்றி தன்னை விட துறைச் செயலாளருக்கு பெரிதாக என்ன தெரிந்துவிடும் என்று வனத்துறை அதிகாரிகள் சிலரிடம் அமைச்சர் கோபத்தை காட்டியிருக்கிறார்.  

நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளை திருப்திபடுத்தும் வகையில் வனச்சரகர், வனவர் என்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவு போட, அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை சுப்ரியா சாகு ஐஏஎஸ்.  

குற்றச்சாட்டு இல்லாமல் எந்தவொரு பணியாளரையும் பணிமாற்றம் செய்ய மாட்டேன் என்று துறைச் செயலாளர் நேரிடையாகவே கூறியிருக்கிறார். .

தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாகு உடனடியாக வந்து நிற்க வேண்டும் என்பது அமைச்சரின் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பமும் கூட. ஆனால், முதன்மைச் செயலாளரான சுப்ரியா சாகு, அமைச்சரின் அதிகாரத்திற்கு ஒருநாளும் அடிபணிந்ததே கிடையாது. அமைச்சர் தலைமையிலான ஆய்வுக்கூட்டங்களுக்கு மட்டுமே சென்று வந்தார்.  

வனத்துறையை மேம்படுத்த வேண்டும்.. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்ற நிலைக்கு உயர வேண்டும் என்பதுதான் முதல்வரின் ஆசை.

முதல்வர் ஆசையை நிறைவேற்றுவதற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார் சுப்ரியா சாகு ஐஏஎஸ். அதில் ஒன்றுதான், பாரம்பரியமான மஞ்சள் பை அறிமுகம். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் மஞ்சள் பை விநியோகத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார் முதல்வர்.  

வனத்துறையில்ல் முக்கியமான திட்டம் ஏதாவது செயல்படுத்துவதாக  இருந்தா, முதல் அமைச்சரின் அலுவலகச் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் மூலமாக முதல்வர் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்றார் சுப்ரியா சாகு ஐஏஎஸ்.  

துறை அமைச்சரான தனக்கு தகவல் சொல்லாமல் முதல்வரை நேரடியாக சுப்ரியா மேடம் சந்திப்பது அமைச்சர் ராமச்சந்திரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.    

வனத்துறையில் யாருக்கு செல்வாக்கு என்ற போட்டியில் தான் அமைச்சர் ராமச்சந்திரனின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.

மேலும், மலைகளின் ராணி என்று புகழப்படும் நீலகிரி மாவட்டத்தில ஐடி காரிடர் என்று கூறப்படும் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை அதிக எண்ணிக்கையில் கொண்டு வரப்போகிறேன் என்று அமைச்சர் ராமச்சந்திரன் சவால் விட்டார்.

வனங்களின் தாய் வீடாக இருக்கும் உதகை, குன்னூர் போன்ற மலைப் பிரததேசங்களில ஐடி காரிடர்ன்னு சொல்ற கம்யூட்டர் உலகத்தை நிறுவினால் மலைகளின் ராணி என்ற பெருமையே சிதைந்து போய்விடும் என்று சுப்ரியா சாகு ஐஏஎஸ் எதிர் வாதம் செய்தார்.

இந்த விவகாரத்தில் இருவரும் அவரவர் முடிவில் உறுதியாக இருந்ததால், ஐடி காரிடர் விவகாரத்தை முதல்வரின் அலுவலகச் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சுப்ரியா சாகு ஐஏஎஸ்.. பின்னர் இருவரும் முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற போது, நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய பெருமையை, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறிய முதல்வர், வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரனை நேரில் அழைத்து கண்டித்திருக்கிறார்.

அதன் பிறகும் கூட, அமைச்சர் க.ராமச்சந்திரன் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாமல், செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ்ஸிடம் மோதல் போக்கை கடைபிடித்து இருக்கிறார்.

இருவருக்குமான பஞ்சாயத்து, மீண்டும் உதயச்சந்திரன் ஐஏஎஸ் கவனத்திற்கு போக, வனத்துறையை நிர்வாகம் செய்யும் அளவிற்கு அமைச்சர் க.ராமச்சந்திரனுக்கு பக்குவம் இல்லை என்று எடுத்துரைத்திருக்கிறார்.

இதன் பிறகே, டிசம்பர் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அமைச்சராக பதவியேற்ற நாளிலேயே, அமைச்சர் க.ராமச்சந்திரனின் துறையை மாற்றி, அவரை சுற்றுலாத்துறை அமைச்சராக்கிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சுற்றுலாத்துறைக்கு பதிலாக வனத்துறை அமைச்சராக ஜுனியர் அமைச்சர் மருத்துவர் மதி வேந்தன் அறிவிக்கப்பட்டார். படித்தவர், இளைஞர் என்பதால், வனத்துறை யின் முதன்மைச் செயலாளரான சுப்ரியா சாகு ஐஏஎஸ்ஸுடன் இணைந்தே பணியாற்றுவார் மருத்துவர் மதி வேந்தன் என்ற எதிர்பார்ப்பு வனத்துறை அதிகாரிகளிடம் ஏற்பட்டிருக்கிறது.

இருவரின் ஒருமித்த செயல்பாடுகளால் வனத்துறை, முதன்மையான இடத்தை பிடிப்பதற்காக முன்னோக்கி செல்லும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் வனத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.

நடிகர் விஜய் நடித்த திரைப்படமான திருப்பாச்சியில், கோயில் விழா ஒன்றில் ஆடு ஒன்றை பலி கொடுக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த விழாவில் தவறுதலாக நுழைந்துவிடும் நடிகர் விஜயை மஞ்சள் தண்ணீர் ஊற்றி வெட்ட பார்ப்பார்கள்.

அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதத்தை இப்போது பார்த்தால் கூட  ரசிகர்கள் சத்தம் போட்டு சிரிப்பார்கள். அந்த நகைக்சுவை காட்சிக்கு ஏற்ப, வலிய சென்று தலையை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் க.ராமச்சந்திரன் என்கிறார்கள் நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள்.

நல்ல நேரம்.., துறை தான் மாற்றப்பட்டது. முதல்வருக்கு கோபம் வந்திருந்தால், அமைச்சர் பதவியே க.ராமச்சந்திரனுக்கு இல்லாமல் போயிருக்கும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று நிம்மதியடைய வேண்டிய நிலைதான் அமைச்சர் க.ராமச்சந்திரனுக்கு என்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.