Tue. Apr 30th, 2024

இந்திய ராணுவ படைக்கு கம்பீரம் அளிக்கும் எண்ணற்ற அம்சங்களில் முதன்மையானது அவர் அணிந்து கொண்டிருக்கும் சீருடை.. நாட்டை பாதுகாக்கும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு படைகளில், ராணுவத்தினரை மட்டும் தனித்த அடையாளப்படுத்தி காட்டுவது அவர்களின் சீருடை தான்.

அதுவும் அண்மைகாலத்தில், ராணுவத்தினரின் சீருடையில் நவீன யுக்தியைப்பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான நவீன சீருடை, பார்ப்போரை எல்லாம் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாக இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் இந்திய ராணுவ வீரர்களின் சீருடைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நேரத்தில், நவீனத்துவம் கலந்த கம்பீரமிக்க இந்திய ராணுவ சீருடையை, திரையுலகினர் பயன்படுத்துவது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. புகழ்பெற்ற, பிரபலமிக்க கதாநாயகர்கள், கதாநாயகிகள் கூட ராணுவ சீருடையைப் போல் தோற்றம் அளிக்க கூடிய உடையை அணிவதால், பொதுமக்களிடமும், குறிப்பாக இளம்தலைமுறையினரிடமும் கூட ராணுவ வீரர்களின் சீருடையின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேல்சட்டையை வண்ணத்தில் அணிந்து கொண்டு, கால் சட்டையை ராணுவ சீருடையை நினைவுப்படுத்தும் வகையில் ஆடையை அணிவது இன்றைக்கு சர்வசாதாரணமாகிவிட்டது. அதுவும் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு இடங்களுக்கு வருவோர் கூட இதே மாதிரியான உடையைதான் அணிந்து வருகின்றனர்.

இந்திய ராணுவத்திற்கு கம்பீரத்தையும் சர்வதேச அளவில் மிகப்பெரிய மரியாதையையும் ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கும் சீருடையை, சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை கண்டு, ராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, முன்னாள் ராணுவ அதிகாரிகள்,தேச பக்தி கொண்டோர் உள்ளிட்டோர் மனம் வெதும்பி வருகின்றனர்.

இந்தியா ராணுவத்திற்கு ஏற்படுத்தப்படும் அவமானம் என்பது 130 மக்களுக்கும் இழைக்கப்படும் அவமானம் என்ற ஆவேசக் குரல்கள் உரக்க ஒலிக்க தொடங்கியதை அடுத்து, தேச பக்தி கொண்டோரின் ஆதங்கத்தை தீர்க்கும் வகையிலும், நிம்மதியளிக்கும் விதமாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்திய ராணுவ படைக்கு என்று பிரத்யேகமாக, சிறப்பு கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட நவீனத்துவம் மற்றும் பிரமிக்க வைக்கும் வண்ணக் கலவையுடன் கம்பீரமாக காட்சி தரும் ராணுவ சீருடையைப் போன்ற ஆடையை (Digital Pattern Combat Dress )பொதுமக்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய பாதுகாப்புத்துறைஎச்சரிகை விடுத்துள்ளது.

மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இந்திய ராணுவத்தின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும், ராணுவ சீருடையின் கம்பீரத்திற்கு எந்தவொரு களங்கம் ஏற்படுவதையும் தவிர்க்கும் பொருட்டும் இந்திய பாதுகாப்புத்துறை மேற்கொண்டுள்ள அவசர, அவசிய நடவடிக்கையை தேச பக்தர்கள் அனைவரும் மிகுந்த மனவெழுச்சியுடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.